வாழ்க்கை நிலைகள்!

"மனித வாழ்வை எட்டு எட்டாக பிரித்துக் கொள்ளுங்கள்' என்றார் ஒரு கவிஞர். ஆனால்  உளவியல் அறிஞர்கள் மனித வாழ்க்கையை நான்கு நிலைகளாகப் பிரிக்கின்றனர்.
வாழ்க்கை நிலைகள்!

"மனித வாழ்வை எட்டு எட்டாக பிரித்துக் கொள்ளுங்கள்' என்றார் ஒரு கவிஞர். ஆனால்  உளவியல் அறிஞர்கள் மனித வாழ்க்கையை நான்கு நிலைகளாகப் பிரிக்கின்றனர். இந்த  நான்கு நிலைகளையும் அந்தந்த நிலைகளுக்கேற்ற ஞானத்துடன் நாம் கடந்தால்   நிச்சயம் மகிழ்ச்சியுடனும்  அர்த்தமுள்ளதாகவும் வாழ்க்கை அமையும் என்கின்றனர்.

முதல் நிலை: வாழ்வின் முதலாவது மற்றும் அடிப்படை நிலையான குழந்தைப் பருவத்தில தட்டுத்தடுமாறி நடைபழகுவதில் தொடங்கி, பல் துலக்குவது, குளிப்பது, ஆடை அணிவது, உணவருந்துவது, பிறரிடம் எவ்வாறு பேசுவது என பெற்றோர், உற்றார்,   உறவினர்கள் மூலம் புதிது புதிதாக பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம்.

டீன் ஏஜ் எனப்படும் வளரிளம் பருவத்தை நெருங்கும் சமயம் குழந்தைப் பருவத்தின்  இரண்டாவது படிநிலையில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். இந்த நிலையிலும் நம்  அன்றாட மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு பிறரைச் சார்ந்துதான் இருக்கிறோம் . இக்காலக்கட்டத்தில் நம்மைச் சுற்றியுள்ள பெரியவர்களும், ஆசிரியர்களும்தான் நம் கதாநாயகர்களாகத் திகழ்கின்றனர். அவர்கள் நமக்கு என்ன போதிக்கின்றனரோ, அவர்கள் நம்முன் எப்படி நடந்து கொள்கிறார்களோ அவையே நம் மனதில் பதிந்து பின்நாளில் நம் எண்ணம், சொல் செயல்களை தீர்மாக்கும் சக்திகளாக அமைந்துவிடுகின்றன. எனவே,  வாழ்வின் அடித்தளமான குழந்தைப் பருவம் ஒவ்வொருவருக்கும் சிறப்பாக அமைய வேண்டியது அவசியமாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக சிலர் 40 வயதைக் கடந்த பிறகும் கூட, இந்த முதல்நிலையைத் தாண்டாதவராகவே உள்ளனர். அவர்களுக்குப் பிடித்த தொழில், கருத்துகள், வாழ்க்கைமுறை என எதுவும் மனதில் பதியாதவராக, எதையும் கற்றுக் கொள்ளாதவராகவே உள்ளனர்.  

இரண்டாம் நிலை: டீன் ஏஜ் - முடிவில் வாழ்வின் இரண்டாம்  நிலையில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். அகவை முப்பது வரை  தொடரும் இப்பருவத்தை நினைத்தாலே இனிக்கும் பருவமெனச் சொல்லலாம்.  புதிய நண்பர்களின் அறிமுகம், அவர்களுடன் கேலி, கொண்டாட்டங்கள், நள்ளிரவு விருந்துகள், விதவிதமான பைக், கார்களில் நெடுங்தூர த்ரில் பயணங்கள்,   காதல் உணர்வு என வாழ்க்கை படு சுவாரஸ்யம் ஆக தொடங்குவது இப்பருவத்தில்தான்.  தவறுகளிலிருந்து பாடங்கள் கற்க வேண்டிய தருணமும் இதுவேயாகும்.

அதேசமயம், கேலி, கொண்டாட்டங்களும், காதலும் மட்டுமே  இந்த நிலையை அர்த்தப்படுத்திவிடாது. உண்மையில் நாம் யார், வாழ்வில் என்னவாக போகிறோம்,  அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் ஒருவருக்கு இந்நிலையில்  எழுந்தால் அதுவே இந்த நிலையை  முழுமையாக்கும்.

மேலும், இந்நிலையில் பெரும்பாலும் மனம் சார்ந்து உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதையே   விரும்புவார்கள். அவ்வாறு நாம் செயல்பட விரும்பும்போது மனம் எல்லைகளில்லாமல், கட்டுப்பாடற்று தன் போக்கில் பயணப்பட விரும்பும். தன்  விருப்பத்துக்கு தடையாக இருப்பவற்றையெல்லாம் தகர்தெறியவும் துடிக்கும். தடைகளை விதிப்போர் மீது வெறுப்பையும் உமிழும். ஆனால், அத்தடைகளை உண்மையில் எதற்காக  பெரியவர்கள் நமக்கு விதிக்கின்றனர். அவர்களின் எச்சரிக்கை வார்த்தைகளில் பொதிந்துள்ள உள்அர்த்தம் என்ன என்பதை நாம் அலசி ஆராய்வது அவசியம்.

அப்போதுதான் நம் வாழ்க்கைப் பயணம் நெறிப்படுத்தப்பட்டு நல்ல பாதையில் சீராக பயணிக்கத் தொடங்கும்.

மூன்றாம் நிலை: முப்பதாவது வயதின் முடிவில் வாழ்வின் மூன்றாம் நிலைக்குள் நாம் நுழைகிறோம். இதுநாள் வரை கற்ற வாழ்க்கைக் கல்வியின் துணையோடு, கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு, தங்களது பிள்ளைகள்  உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான பொருளாதாரத் தேவைகளை தான் மேற்கொள்ளும் பணி அல்லது தொழிலின் வாயிலாகப் பூர்த்தி செய்ய வேண்டிய மிக முக்கியமான தருணம் இந்த மூன்றாம் நிலையாகும். அதாவது பள்ளி, கல்லூரி மற்றும்  சமுதாயத்தின் வாயிலாக தான் கற்றவற்றை அரங்கேற்றும் பருவம் இது. அத்துடன்  பொருளாதார தேடலுக்கு அப்பாற்பட்டு தானும் இந்த உலகில் வாழ்ந்துவிட்டு  சென்றதற்கான அடையாளத்தை தங்கள் சந்ததியினருக்கும், இச்சமுதாயத்திற்கும் விட்டு செல்வதற்கான மரபை உருவாக்கும் வாய்ப்பும் ஒரு மனிதனுக்கு இந்நிலையில்தான் வாய்க்கப் பெறுகிறது.

நான்காம் நிலை: வாழ்வின் நான்காம் நிலையான இந்த நிலையில்,  இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தத்தை, பலன்களை அனுபவிக்கும் நிலையாகும்.  இந்நிலையில்  நல்ல ஓய்வையும், சொந்த பந்தங்களுடன் கலந்து உறவாடுவது, உலகைச் சுற்றிப் பார்ப்பதென மகிழ்ச்சியை யார் அனுபவித்து வாழ்கிறார்களோ,  அவர்கள்தான் நான்காம் நிலையில் நன்றாக வாழ்கிறார்கள்  என அர்த்தம்.   மாறாக இந்தப் பருவத்திலும் ஒருவர் பொருள் ஈட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தால்,  அவர் கடந்த காலங்களைத் தவறவிட்டுவிட்டார் என்றுதான் பொருள். 

எனவே, அந்தந்த நிலையில்  சரியாக   வாழ்ந்து நம் வாழ்வை மகிழ்ச்சியும், அர்த்தமும் கொண்டதாக ஆக்குவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com