சாகசப் பயிற்சிகள்!

துருக்கியில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்குப் போட்டியில் ஹிமாச்சலபிரதேசத்தின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த அஞ்சல் தாகூர் (21) என்ற இளம்பெண்,
சாகசப் பயிற்சிகள்!
Published on
Updated on
2 min read

துருக்கியில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்குப் போட்டியில் ஹிமாச்சலபிரதேசத்தின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த அஞ்சல் தாகூர் (21) என்ற இளம்பெண், நம் நாட்டின் சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதுதான் சர்வதேச பனிச்சறுக்குப் போட்டியில் இந்தியா பெறும் முதல் பதக்கமாகும். அந்த வகையில் அஞ்சல் தாகூர் பெற்ற பதக்கம் ஒரு வரலாற்றுப் பதிவு.
இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடு என்பதாலும், வட இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளைத் தவிர வேறு எங்கும் பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாததாலும், பனிச்சறுக்கு, மலையேற்ற சாகசப் பயிற்சிகளில் பெரும்பாலான பிற மாநில இளைஞர்கள் பங்கேற்கவும், போட்டியிடவும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
அதேநேரத்தில், பனிச்சறுக்கு போன்ற சாகசப் பயிற்சிகள் இளைஞர்களின் ஆளுமைக்கான பண்புக்கூறுகளை மேம்படுத்தும் நம் கல்விமுறையின் மிக முக்கியமான ஓர் அங்கம் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இதையொட்டியே, மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை கடந்த 1969-இல் குல்மார்க்-இல் The Indian Institute of Skiing and Mountaineering (IISM) என்ற பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கம் இந்திய இளைஞர்களுக்கு சாகச விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி பயிற்சி அளிப்பது மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்துறைகளை மேம்படுத்துவதாகும்.
மத்திய அரசின் இந்த நிறுவனம், குல்மார்க்-இல் டிசம்பர் மாதத்தின் மத்தியில் தொடங்கி, ஏப்ரல் தொடக்கம் வரை பனிச்சறுக்கு பயிற்சியையும், மே மாதம் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் வரை அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஏரிகளில் நீர்ச் சறுக்கு பயிற்சியையும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காஷ்மீரின் லடாக் பகுதியில் மலையேற்ற பயிற்சியையும் அளிக்கிறது. மேலும், மே மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதம் வரை லிட்டர் மற்றும் சிந்து நதிகளில் White Water Rafting பயிற்சி, குல்மார்க், யாஸ்மார்க், சன்மார்க் போன்ற உயர்ந்த மலைப் பகுதிகளில் ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் பாராகிளைடிங் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதற்காக வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற, திறன்மிகுந்த பயிற்றுநர்களும், நவீன இறக்குமதி உபகரணங்கள், கருவிகளும் இந்த மையத்தில் உள்ளன. பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்குவதற்கான வசதிகளும் இந்த பயிற்சி மையத்தில் உள்ளன. 
முதலில் இந்த பயிற்சி நிறுவனம் Gulmarg Winter Sports Project (GWSP) என்ற பெயரில் குல்மார்க்கை சர்வதேச தரத்திலான பனிச்சறுக்கு பொழுதுபோக்குமிடமாக மேம்படுத்தும் திட்டத்துடன் தொடங்கப்பட்டது. பிறகு, அது இளைஞர்களுக்கு பலவகையான சாகச பயிற்சிகளை அளிக்கும் முழுமையான சாகசப் பயிற்சி மையமாகவும், பெருநிறுவனங்களின் உற்சாக நடவடிக்கைகளுக்கான மையமாகவும் விளங்குகிறது.
அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களையும், உள்நாடு மட்டுமல்லாது, பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் இந்த பயிற்சி மையம் ஈர்த்து வருகிறது. இங்கு வழங்கப்படும் Snow Skiing, Water Skiing, Para- glidding/para motors, Parasailing, Hot Ballooning, White Water Rafting/Canoeing, Mountaineering உள்ளிட்ட பயிற்சிகள் நம் நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்லாது, காஷ்மீரை சாகசத்துக்கான இடமாகக் கருதி உலகம் முழுவதும் இருந்து குல்மார்க் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அளிக்கப்படுகிறது.
குல்மார்க்கில் உலகிலேயே மிக உயரமான இடத்தில் கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. 
IISM பயிற்சி மையத்தில் உள்ள Ski Lift, Chair Lift போன்றவையும் இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. 
Picturesque பள்ளத்தாக்கில் நடைபெறும் Gondola சவாரி என்பது வாழ்வின் ஓர் உன்னதமான அனுபவமாக கருதப்படுகிறது. பயிற்சி மாணவர்களும், விருந்தினர்களும் பங்கேற்க இதுபோன்ற சவாரிகளை IISM நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.
குல்மார்க் மற்றும் காஷ்மீரின் பிற பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் சென்று மலை உச்சியிலிருந்து குதித்து பனிச்சறுக்கில் ஈடுபடும் Heli Skiing Activity என்ற திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. 
பயிற்சிக் காலம்: பனிச்சறுக்கு- 14 நாள்கள், மலையோட்டம்- 4-10 நாள்கள், நீர்ச்சறுக்கு-10 நாள்கள், பாராகிளைடிங்- 7 நாள்கள், பாராசெய்லிங்- 6 நாள்கள், White Water Rafting- 7 நாள்கள், Adventure- 14 நாள்கள், மலையேற்றம் - 21 நாள்கள், Hot Air Ballooning - 5 நாள்கள், 
Team Building Course-2-5 நாள்கள்.
பயிற்சிக் கட்டணம்: 25 வயது வரை ரூ. 7000. அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ. 14,000. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் www.iismgulmarg.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து, பணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். 
- இரா.மகாதேவன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com