எதிலும் நேர்மறை சிந்தனை!

நேர்மறை சிந்தனை நமக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும். நம் எண்ணங்களை நல்வழிப்படுத்தவும் மன அழுத்தம் மற்றும் அது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும் செய்யும்
எதிலும் நேர்மறை சிந்தனை!
Published on
Updated on
2 min read

நேர்மறை சிந்தனை நமக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும். நம் எண்ணங்களை நல்வழிப்படுத்தவும் மன அழுத்தம் மற்றும் அது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும் செய்யும். நேர்மறை சிந்தனைகளின் சக்தி, நம் உடலுக்கும் மனதிற்கும் பல வகையான நலன்களைத் தரும்.

 ஆக்கப்பூர்வமான நாளை தொடங்குங்கள்: ஒவ்வொரு நாளையும் நாம் நேர்மறை எண்ணங்களோடு தொடங்க வேண்டும். எதிர்மறை சிந்தனை மற்றும் பதற்றத்துடன் காலைப் பொழுதை தொடங்கினால் அந்த நாள் முழுவதும் நமக்கு அது வெற்றிகரமான பொழுதாக இருக்காது.

 இந்த நாள் இனிதாக..!: நாள் முழுவதும் தடைகளை எதிர்கொண்டால் அது சரியானதாக இருக்காது. அத்தகைய சவால்களை நீங்கள் சந்திக்கும் போது, சின்ன விசயமோ பெரிய விசயமோ அமைதியாக இருந்துவிடுவது நல்லது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கும் போது, நம்மைப் பதற்றப்படுத்திக் கொள்வதை விட இனிமையான இசையை கேட்டு, காத்திருக்கும் நேரத்தை கடந்து செல்வது எவ்வளவு நல்லதோ அதேபோல் நாம் நமது நெருக்கடிகளையும் கடந்து செல்வது சிறந்தது.

 நகைச்சுவை உணர்வோடு இருங்கள்: நெருக்கடியான நேரத்தில் கோபப்படுவதையோ, பதற்றமடைவதையோ விடுத்து நகைச்சுவை உணர்வோடு இருக்க கற்றுக் கொண்டால் எவ்வளவு பெரிய பிரச்னையும் நம்மை இலகுவாகக் கடந்து சென்று விடும். "இதுவும் கடந்து போகும்' என்ற உணர்வோடு எல்லாச் சூழ்நிலைகளிலும் மனதை ஒரு நிலையோடு வைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்

 தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: நாம் எப்போதும் எல்லா நேரங்களிலும் மிகச் சரியாக எதையும் செய்து விடமுடியாது. தவறு செய்வது என்பது மனித இயல்பு. பல நேரங்களில் நாம் செய்யும் வேலைகளில் ஏற்படும் தவறுகளை- அதனால் அடைந்த தோல்விகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டேயிருக்காமல் அடுத்த நிலையைப் பற்றி யோசித்து வேகமாகவும், விவேகமாகவும் செயல்படத் தொடங்க வேண்டும். தோல்வி என்பது நிலையானது இல்லை என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

 நேர்மறை பேச்சு - செயல்களை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்: எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பே இது என்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறிந்துவிட்டு தோல்வியே ஆனாலும் பரவாயில்லை; அது ஓர் அனுபவமாக, படிப்பினையாக இருக்கட்டும் என்று எதிலும் முயற்சியை மேற்கொள்வது நமக்குள் நேர்மறை எண்ணத்தை வளர்க்கும்.

 இந்த நேரத்தை கவனத்தில் கொள்ளுங்கள்: இன்று என்ன என்பதை விட இப்போது என்ன என்பதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பழையனவற்றை தூக்கி எறியுங்கள். கடந்த கால மோசமான அனுபவங்கள் எதுவானாலும் அந்த வலியைச் சுமந்து கொண்டு திரியாமல் அதன் தவறுகளை உணர்ந்து உங்கள் கடமைகளைச் சரியாக செய்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

 நேர்மறையான நண்பர்கள், வழிகாட்டிகள், சக பணியாளர்களைக் கண்டறியுங்கள்: நம்மைச் சுற்றி எப்போதும் நேர்மறையான சிந்தனை கொண்டவர்கள் இருப்பார்களேயானால் நமது சிந்தனையும் நேர்மறையானதாகவே இருக்கும். எண்ணங்கள் நேர்மறையானதாக இருந்தால் செயல்கள் ஆக்கப்பூர்வமானதாக மாறும். எனவே எதிர்மறை எண்ணங்கள் நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாமும் மற்றவர்களுக்குள் நேர்மறை எண்ணங்களை விதைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.  அப்போதுதான் நீங்கள் வெற்றியாளராக முடியும்.

                                                                                                - திருமலை சோமு
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com