நீ... நான்... நிஜம்! - 45: பக்தி போதுமா? கர்மம் வேண்டுமா?

ஒருவர் காலில் முள் தைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.  நம் ஊரில் அதை ஒருவர் எப்படிச் சொல்கிறார்?  ""என் காலில் முள் குத்திவிட்டது'' என்பார்.
நீ... நான்... நிஜம்! - 45: பக்தி போதுமா? கர்மம் வேண்டுமா?

ஒருவர் காலில் முள் தைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.  நம் ஊரில் அதை ஒருவர் எப்படிச் சொல்கிறார்?  ""என் காலில் முள் குத்திவிட்டது'' என்பார். இதைக் கடுமையாக விமர்சனம் செய்யவும் முடியும். முள் இருப்பது தெரியாமல் காலைக் கொண்டு போய் வைத்துவிட்டு முள்மீது குற்றப்பத்திரிக்கை படிக்கும் விதமாக முள் குத்தி விட்டது என்று முள் மீது பழிபோடுகிறோம். முள் என்ன... ஓடி வந்து இவர் காலைத் தேடி வந்தா ஏறிக் கொண்டது? இது, பழியைத் தான் ஏற்காமல் முள் மீது சுமத்தும் இந்திய மனோபாவம்  என்று சிலர் தாக்குவார்கள்! சிலரோ நடப்பதெல்லாமே இறைவன் செயல்.. இப்போது முள் குத்த வேண்டும் என்ற விதி.. அதனால் அது நடந்துவிட்டது என்கிற இந்தியப் பெருஞானம் தான் அப்படி ஒரு வார்த்தை அமைப்பை உருவாக்கியது என்று வாதிடுவார்கள்.

ஆங்கிலத்தில் இந்த Escapism இல்லை. "I ran on the thorn’ என்று பழியைத் தன்னுடையது என்று ஒப்புக் கொள்ளும் பொறுப்பேற்கும் பண்பு உண்டு என்று கூட சொல்வார்கள். இது ஞானமா? பொறுப்பின்மையா? பொறுப்பின்மைதான் ஞானமா? என்கிற சிக்கல்களுக்குள் நான் நுழைய விரும்பவில்லை. தன் தவறுகள் தன்னால்தான் நிகழுகின்றன என்கிற பொறுப்பேற்பே ஞானம் என்கிற எண்ணம் உடையவன்  நான். கடவுள் மீது பழி போட்டுத் தப்புவது உண்மை ஆன்மிகம் ஆகாது என்பதே என் எண்ணம்.  ஜெர்மனியில் இருந்து ஒரு நாத்திகர்  ஆசார்ய  வினோபாபாவேயைச் சந்திக்க வந்தார்.  தாம் நாத்திகர் என்பதால் வினோபா பாவே என்ற பக்திமான் சந்திக்க மறுக்கக் கூடும்  என்றும் பயந்தார்.

அதனால் அவர் முன்னெச்சரிக்கையுடன், ""ஐயா நான் நாத்திகன்'' என்றார். வினோபா சிரித்தபடி, ""அப்படியானால் தன் வாழ்க்கைக்கு முற்றிலும் தானே பொறுப்பு ஏற்கும் நபர் நீங்கள். உங்களைச் சந்திப்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி'' என்றார் வினோபா. கடவுள் பக்தி உடைய பலரும் ஞானத்தாலோ, சமர்ப்பண உணர்வாலோ எல்லாம் கடவுள் செயல் என்பதில்லை. தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் பல நபர்கள் எதற்கெடுத்தாலும் கடவுளை வம்புக்கு இழுத்து அவர்தான் இவரது எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய நபர்போல் பேசுவார்கள். அதுமட்டுமல்ல... ""நீங்கள் உழைக்க வேண்டாம்; பாடுபடவேண்டாம்; ஒரு வேலையும் செய்து மெனக்கெட வேண்டாம்; எல்லாமே பகவான் பார்த்துக் கொள்வார்... சும்மா... சும்மா கோவில் கோவிலாகப் போனால் போதுமானது'' என்று உபதேசம் வேறு செய்வார்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். 

கர்மயோகத்தின்படி வேலைகள் செய்வதும் முக்கியம். கடவுளோடு இணைந்திருத்தலும் முக்கியம். கடவுள் உடனான நம் தொடர்பு பிரிக்க முடியாதது  என்பதைப் போலவே கடவுளின் தனித்துவத்தையும் நம்முடைய தனித்துவத்தையும் பகுத்தறிய வேண்டும். சிக்கலான விஷயம், எங்கள் பள்ளிக் கணக்காசிரியர் சொன்ன வேடிக்கைக் கணக்கு. இதை விளக்க எனக்கு உதவியது உங்களுக்கும் உதவக் கூடும். வாழ்நாள் முழுவதும் மூத்த மகனால் நன்கு ஆதரிக்கப்பட்ட தந்தை ஒருவர் தம் சொத்தை இவ்வாறு பகிர்ந்து எழுதினார். "அதிகம் உதவிய மூத்தவனுக்குப் பாதிச்சொத்து. ஓரளவு உதவிய இரண்டாம் மகனுக்கு மூன்றில் ஒரு பங்கு... கைவிட்ட கடைசிமகனுக்கு ஒன்பதில் ஒரு பங்கு' என்று எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். அவரது சொத்துக்களில் 17 பசுக்கள் இருந்தன. இதை எப்படி பாதிப்பங்கு, 1/3, 1/9 என்று பிரிக்க முடியாமல் பிள்ளைகள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். அந்த ஊர்ப் பெரியவரிடம் வழக்கைக் கொண்டு போனபோது அவர் சிரித்தபடி, தம்முடைய ஒரு பசுவை  மூவருக்கும் தானமாகத் தருவதாகச் சொன்னார். மூவரும் அது அவமானம் பெற மாட்டோம் என்றனர். ""அவசரப் படாதீர்கள்... என்னுடைய பசுவுடன் சேர்த்தால் அப்பா விட்டுப்போன சொத்து 18 பசுக்கள். 18-இல் பாதி மூத்தவனுக்கு பிடி ஒன்பது பசு...18-இல் மூன்றில் ஒரு பங்கு அடுத்தவனுக்கு பிடி ஆறு பசு... 18 -இல் 1/9 பங்கு ... அதாவது இரண்டு. கடைசிப் பிள்ளைக்கு. 9+6+2=17 வந்தது. மீதம் ஒன்று இருந்தது. அது என்னுடைய பசு'' என்று தானம் கொடுத்தவர் எடுத்துக்கொண்டு நடையைக் கட்டினார். அந்த ஒரு பசு கணக்கிலும் வரும்... கணக்கிலும் வராது... பிரச்சனை தீர சேரும்... பிரச்சனை முடிந்தாலும் அது தன் தனித்துவம் விடாது... அந்தப் பசுமாதிரி தான் கடவுள்'' என்பார் எங்கள் ஆசிரியர்.. அது பிரச்சனை தீர உதவும். ஆனால் நமக்கே நமக்கு அல்ல... அது தனி... இந்த நுட்பம் ஆத்திகர்களுக்கு இன்று புரிய வேண்டும்.

எந்த வேலையுமே நாம் செய்யாமல் எல்லாமே கடவுள் செய்வார் என்பது பிரார்த்தனையை மட்டுமே வற்புறுத்துவது எப்படி சரியான ஆன்மிகம் ஆகும்? லெüகிக லாபம் எதிர்பார்க்கிறவன் கஷ்டப்பட்டு உழைக்கக் கடமைப்பட்டவன். வெறும் பிரார்த்தனை... பஜனை... பக்தி போதாது. நான் இப்படிச் சொன்னதும் சிலர் வரிந்து கட்டிக் கொண்டு, ""இவன் பக்திக்கெதிரானவன்... நாத்திகன்'' என்று குற்றம் சுமத்துவார்கள். அதனால் காஞ்சிமகா சுவாமிகள் சொன்ன வரிகளை, பெரியவர் புகழ் பரப்பும்  சாமிநாதன்   கொடுத்த குறிப்பை அப்படியே தருகிறேன்.

"ஒரு முதலாளிக்கு இரண்டு ஊழியர்கள். ஒருவன் எப்போதும் பார்த்தாலும் ஒரு வேலையும் செய்யாமல் முதலாளியையே சுற்றி சுற்றிவந்து புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பான். அவருக்கான எந்த வேலையும் செய்ய மாட்டான். மற்றொருவனோ, முதலாளியின் நிறுவன வேலை தனிப்பட்ட வேலை என்று பார்த்துப் பார்த்து செய்வான். சதாசர்வ கலாமும் முதலாளியின் வேலைகள் சரியாக நடக்க வேண்டுமே என்று ஓடி ஓடி உழைப்பான். ஒரு நல்ல முதலாளிக்கு இதில் யாரை அதிகமாகப் பிடிக்கும். ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டே இருப்பவனைவிட, தன் கஷ்டங்களைக் குறைக்க வேலை செய்பவனைத் தானே பிடிக்கும். ஈச்வரனும் அப்படிப் பட்ட முதலாளிதான். அவரது வேலைகளைப் பார்க்கிறவர்களை அவர் ப்ரியமாகப் பார்த்துக் கொள்ளுவார்' என்கிறார் ஸ்ரீ மகா சுவாமிகள்.

இந்த உலகம் கர்மபூமி. உழைப்பால் உருளுகிறது. இதில் நாம் பார்க்கும் எல்லா வேலைகளும் பகவானது வேலைகள். அதை அலட்சியம் செய்து விட்டு, பகவானை ஏமாற்றுவது சரியான வாழ்க்கை முறையா என்பதே என் கேள்வி! ஒரு மனிதன் தான் செய்ய வேண்டிய எந்தக் கடமையையும் செய்யாமல் எல்லாமே கடவுள் தனக்காகச் செய்யட்டும் என்று பேசுவது சரியான அணுகுமுறை ஆகாது. இஸ்லாத்தில் நான் படித்த சம்பவம் ஒன்று சொல்லுகிறேன். ஓர் அரபி, நபிகள் பெருமகனாரிடம் வந்து,""இறைத்தூதரே... என் ஒட்டகத்தை இறைவன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு நான் நிம்மதியாக எங்கு வேண்டுமானாலும் போகலாமா?'' என்று கேட்டார். நபிகள் நாயகம் அவர்கள், ""முதலில் உன் ஒட்டகத்தின் கால்களைக் கயிறு கொண்டு நன்றாகக் கட்டிவை. அதன்பின்பு பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்துவிடு'' என்கிறார்கள். இஸ்லாத்தில் சொல்லப்படும் தவக்குல் என்னும் ஒப்படைத்தல் கடமைகளைச்  செய்யாதிருத்தலோ, பொறுப்பில் இருந்தும் செய்ய வேண்டிய முயற்சியில் இருந்தும் நழுவுவது அல்ல என்றும் மார்க்க அறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். 

மகாகவி பாரதியை நன்கு கற்றவர்கள் கீழ்க்கண்ட வரிகளை அறிந்திருப்பார்கள். ""ஒரு விதமான செய்கையும் இல்லாமல் சும்மா இருப்பது இவ்வுலகத்தில் எப்பொழுதும் சாத்தியப் படாது'' என்கிறார். மேலும் ""நான் பிரிவில்லை என்று கண்டு தெய்வமே உள்ளதாகையால் அதற்குச் சேவகமாக உலகத் தொழில்களைப் பிழையில்லாமல் செய்து கொண்டு வர வேண்டும். கடமையைத் தவிர்ப்போன் விடுதலை பெற்றவன் அன்று. விடுதலையின் தலைமேலே ஒரு கடமை நிற்கிறது. தெய்வத்துக்கே கடமை உண்டு.  பகவான் கர்மயோகி.  ஸந்நியாஸம் அவசியமில்லை. பெண்டு பிள்ளைகள் பொய் இல்லை. மற்ற மனிதர்கள் மண்கட்டிகள் அல்லர். அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடமைகள் உண்டு. தெய்வமே துணை என்று இருப்போர் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருப்பார்கள்'' என்றெல்லாம் பாரதியார் எழுதி எழுதிப் புரிய வைக்கிறார்.

இறைவழிபாடு பற்றிய பாரதியின் பார்வை விசாலமானது. கோவிலுக்குப் போவது சாமி கும்பிடுவது என்பதை எல்லாம் தாண்டிப் போகிறது அது. அவர் எழுதுகிறார்: "கோயிலுக்குப் போனாலும் சரி. போகாவிட்டாலும் சரி.. தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி.. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வம் அருள்புரியும்' என்று பொட்டிலடித்த மாதிரி கர்ஜிக்கிறார். ""உழைப்பு அற்ற பக்தியைப் பாரதியார் ஏற்கவில்லை. உழைப்பு எப்போதும் உண்டு. தெய்வம் சரண் என்றிருப்போர் உள்ளத்திலே தாபமின்றி  உழைப்பார்கள். ஆனபடியால் அவர்களுடைய செய்கைக்கு வலிமை அதிகம். வேகம் அதிகம். உயர்வு அதிகம். அழகு அதிகம். பயன் அதிகம். உழைப்பு எப்போதுமுண்டு. தெய்வத்தின் தலையிலே சுமையைப் போட்டுவிட்டு நாம் கவலை, பயம் என்ற இரண்டு நாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்காமல் சந்தோஷமாகப் பாடிக் கொண்டு நிலத்தை உழுவது நல்லது.  அழுது கொண்டே உழுதால் உழவுக்குக் கெடுதி!'' என்று முழங்குகிறார் பாரதி. "ஊருக்கு உழைத்திடல் யோகம்' என்றவர் அல்லவா பாரதி. இதனை ஏன் எழுதுகிறேன் தெரியுமா?

விழிப்படைதல் என்று கடந்த சிலவாரங்கள் நான் கூறிவந்ததைத் தவறாகப் புரிந்து கொண்டு ஆசிரமங்களுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் அரைகுறை ஸந்யாஸிகளை நான் ஆதரிப்பதாகக் கருத வேண்டாம் என்பதைப் புரிய வைக்கவே எழுதுகிறேன். கர்மயோகிகளே சமூகத்தின் உடனடித் தேவை என்பதற்காகவே எழுதுகிறேன். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com