நீ... நான்... நிஜம்! -38: உறக்கம் விடு உள்ளே விழி!

தமிழாசிரியர் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் வரலாறு பற்றி மாணவர்களுக்குச் சொல்லி இருப்பார்கள்.
நீ... நான்... நிஜம்! -38: உறக்கம் விடு உள்ளே விழி!


தமிழாசிரியர் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் வரலாறு பற்றி மாணவர்களுக்குச் சொல்லி இருப்பார்கள். ஒரு முல்லைக் கொடி பற்றிப் படர வழியின்றி தவித்த போது, பாரி என்ற குறுநில மன்னன் கொடியாகத் தான் மாறி தவித்தான். ஒரு கணம் கூட தயங்காது தான் ஓட்டிவந்த தேரை, கொடி படரும் பந்தலாக்கிவிட்டு நடந்து போனான் என்பது இலக்கியச் செய்தி. இதை மாணவர்களிடம் சொல்லிவிட்டு ""இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? இந்தக் கொடை மடம் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்'' என்று ஆசிரியர் மாணவர்களைக் கேட்டார்.
""ஒரு கொடிபடர குச்சி போதும். நாலுகால் உள்ள பந்தல் போதும்... ஒரு மரம் போதும்... அப்படியிருக்க விலை மிகுந்த தேரைக் கொடுத்தது முட்டாள்தனம்'' என்றான் ஒருவன். ""அரசாங்கப் பணம் அநியாய விரயம்.. ஆடம்பர விளம்பரம்'' என்றான் மற்றவன். ""மரத்தை அழித்து தேர் செய்துவிட்டு, கொடிக்குக் கொடுப்பது, இயற்கையை மதிப்பதாகுமா? அறிவற்ற செயல்'' என்றான் ஒருவன். மற்றொரு மாணவன் மனம் பதறியபடி, ""தன் ஆட்சிக்குட்பட்ட மனிதர்கள் மட்டுமல்ல. செடிகொடி தாவரத்தின் தவிப்பைக் கூட மதிக்கும் மன்னன்.. மாமனிதன்... மிகச்சிறந்த மேன்மையான பெருமன்னன்'' என்று வியந்தான்.
""முல்லைக்குப் பந்தல் போட கான்ட்ராக்ட் விட்டு அதில் ஊழல் நிகழாமல் முந்திக் கொள்ளும் மன்னன்'' என்று நவீன அரசியலோடு முடிச்சுப் போட்டான் ஒருவன். ஒரே விஷயம் தான். ஒருவர் பார்வை மாதிரி மற்றவர், பார்வை இருப்பதில்லை. இதுதான் உலகம். இதில் யாருடைய பார்வை சரி? யாருடைய பார்வை தவறு? என்று ஆராய்வதைவிட, விதவிதமாக மக்கள் புரிந்து கொள்வார்கள்  என்பதைப் புரிந்து கொண்டு நகர்ந்து விட வேண்டும். ஆனால் இன்று பெருவாரியான மக்கள் பிறருடன் சண்டை போடுகிறார்கள். நான் எப்படி நினைக்கிறேனோ, அப்படியே நீயும் நினைக்க வேண்டும்.  நான் எப்படி புரிந்து கொள்கிறேனோ, அப்படியே நீயும் புரிந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். சண்டையிடுகிறார்கள்.
ஒவ்வொரு மதமும், கடவுளை ஒவ்வொரு கோணத்தில் புரிந்து வைத்திருக்கிறது. ஆனால், தான் மட்டுமே கடவுளைச் சரியாகப் புரிந்து கொண்டதாகவும், பிறர் தம் புரிதல் (ன்ய்க்ங்ழ்ள்ற்ஹய்க்ண்ய்ஞ்) தவறு என்றும் சாதிக்கிறார்கள். நம்மிலிருந்து மாறுபட்டு ஒருவர் நினைப்பதும் புரிந்து கொள்வதும் இயற்கை என்பதைப் புரிந்து கொள்வதே உண்மையான ஞானம். விழிப்படைதல். இதுதான் இன்றைய அவசர அவசியம். பெருவாரியான மதச் சண்டைகள், அரசியல் சித்தாந்தச் சண்டைகள் எல்லாவற்றுக்கும் இந்த முட்டாள்தனமே காரணம் இந்தியாவில் மதங்களை, தரிசனம் என்றே அழைத்தனர். தரிசனம் என்ற வடமொழிச் சொல்லுக்கு "பார்வை' என்றே பொருள். ஒரே பரம்பொருளை ஒவ்வொருவர் ஒவ்வொரு பார்வையில் உணர்கிறார்கள் என்ற பொருளில் தரிசனம் என்றனர்.
ஓர் ஆப்ரிக்கப் பழங்கதை ஒன்றைக் குறும்படமாக எடுத்திருந்தனர். இரண்டு விவசாயிகள் பக்கம்பக்கமான நிலத்தை உழுது பயிரிட, கருக்கிருட்டில் வயற்காடு போயினர். அவர்கள் தத்தம் நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது டிரம்ஸ் வாசித்தபடி தொப்பிக்காரன் ஒருவன், இவர்கள் வயலுக்கிடையில் இருந்த வரப்பில் நடந்து போனான். அன்று மாலை இருவரும் கள்ளுக்கடையில் குடித்தபடி பேசிக் கொண்டிருந்த போது, இருவருக்கும் சண்டை வந்துவிட்டது. கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி, அடிதடியில் இறங்கி, ஒருவர் துணியை ஒருவன் கிழித்தபடி, கட்டிப் புரண்டு சண்டையிட்டனர். காரணம் சின்னதுதான். காலைக் கருக்கிருட்டில் டிரம்ஸ் வாசித்தபடி வயல் வரப்பின் நடந்து போனவன் போட்டிருந்த சிவப்புத் தொப்பி பிரமாதம் என்றான் ஒருவன். மற்றவனோ உனக்குக் கண்ணவிஞ்சி போச்சா... அது பச்சைத் தொப்பி என்றான். இதில் தொடங்கிய சண்டை, இவன் மனைவி ஒழுக்கங் கெட்டவள் என்பது வரை வளர்ந்து, அடுத்தவன் அம்மா அவனை முறைகேடாகப் பெற்றாள் என்று பேச்சுவரை வீங்கி, தொப்பி மறக்கப்பட்டு, வேறுவேறு அசிங்கங்களாக வெடித்தது. இருவரும் குடிபோதையில் கோப வெறியில் சண்டையால் கீழே சாய்ந்த போது அந்த அதிசயம் நிகழ்ந்தது.
சாலையில், எவனுடைய தொப்பியைப் பார்த்து சண்டை பிறந்ததோ, அந்த மகானுபாவன் டிரம்ஸ் வாசித்தபடி கள்ளுக்கடையில் நுழைந்தான். அவன் தொப்பியைக் கழற்றி கீழே வைத்த போது இருவரும் பேயறைந்த மாதிரி விழித்தனர். அவன் தொப்பியில் பாதி பச்சைத்தொப்பி.. பாதி சிவப்புத்தொப்பி.. அவனவன் பார்த்த பக்கத்தை மட்டுமே வைத்து பச்சை, சிவப்பு என்று சண்டை போட்டதை  உணர்ந்து கூனிக் குறுகிப் போனார்கள். தாங்கள் முட்டாளக்கப் பட்டோம் என்று வெட்கினார்கள். ஆத்திரத்துடன் ஒருவன் பாய்ந்து, தன்னை முட்டாளாக்கிய அந்தத் தொப்பியை எடுத்து, காலில் போட்டு ஆத்திரத்துடன் மிதித்தான். அடுத்தவனோ ஆத்திரம் அடங்காமல் அதைத் தூக்கி வெளியில் இருந்த தண்ணீர் பீப்பாயில் எறிந்தான். பிறகு இருவரும் தங்கள் பழைய பகையை  மறந்து கட்டித் தழுவி கண்ணீர் விட்டார்கள். அடுத்து நடந்தது தான் இன்னும் முக்கியம். டிரம்ஸ்காரன் நிதானமாக நடந்து போய் தண்ணீர்ப் பீப்பாயில் நனைந்திருந்த தொப்பியை நன்கு கழுவிப் பிழிந்து  தலையில் அணிந்து கொண்டான். இப்போது அந்தத் தொப்பியில் பூசப்பட்டிருந்த  பச்சையும் சிவப்பும் போய் தொப்பி வெள்ளை வெளேர் என்று காட்சிதந்தது. உண்மையில் அது வெள்ளைத் தொப்பி... அதில் பூசப்பட்ட வண்ணம் சண்டையை விளைத்து விட்டது.
கடவுள் விஷயத்திலும் இன்று இதுதான் நடக்கிறது, அவனவன் மதம் பூசிய நிறமே உண்மை என்று, மனிதர்கள் மதபோதையில், கோபவெறியில் சண்டையிடுகிறார்கள். உண்மையில் அது நிறமற்றது. இந்தப்புரிதல் இன்று பலருக்கும் இல்லை. போதிக்கப்பட்ட மதம், திணிக்கப்பட்ட நம்பிக்கைகள், கருக்கிருட்டில் பார்த்த தொப்பியின் நிறம் போன்ற வெளிப்பூச்சுக்களில் கடவுளைப் பார்த்துவிட்டு, கொலை வெறியுடன் அலைகிறார்கள். உலகெங்கும் மதப்பகை இளைஞர்கள் மூலமே பரப்பப்படுகிறது. பகையாக்கப்படுகிறது. மதம் இல்லாத இடங்களில் ஜாதிப்பகை.. அல்லது மொழி, இன துவேஷங்கள்... இவையாவுமே அப்பட்டமான முட்டாள் தனங்கள். இளைஞர்கள் இதற்கு இரையாகாமல் விழித்துக் கொள்வார்களா என்பதே என் பெருங்கவலை. பெரிய பெரிய பட்டங்களை, விதவிதமான பல்கலைக் கழகங்களில் பெற்ற பலர் கூட, ஜாதி, மத இன மொழி எனும் வெறிநாய்க் கூட்டமாக அலைவது அதிக வேதனை தருகிறது.
வாழ்நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் ஓஷோ பேசிய பேச்சுகள் எழுநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக வந்துள்ளன. ஆனால் இவை அனைத்தும் ஒரே விஷயத்தைத் தான் திரும்பத் திரும்ப சொல்லின என்றால் நம்புவீர்களா? ஒரு வார்த்தை கூட இல்லை... ஒரு சொல்... ஒரே ஒரு சொல் ஓஷோ  ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளின் அடிநாதம். என்ன அது? விழிப்புணர்வு... அஜ்ஹழ்ங்ய்ங்ள்ள்... உயிர்க்குலத்தின் பெருவாரியான பிரச்னைகளுக்கு ஒரே காரணம், மனிதர்களின் தூக்கம். கண்விழித்தபடி நிகழும் அறிவுத் தூக்கம்.  தூக்கத்தில் உளறுவதற்கும் பெருவாரியான மத போதகர்களின் பேச்சுக்கும், துளியும் வித்தியாசம் இல்லை.. அஞ்ஞானத் தூக்கத்தில் ஆழ்ந்தபடி பலர் உளறுகிறார்கள்.  விழிப்பற்ற இவர்கள் ஆளுமையை வேரொடு பிடுங்கி எறியாதவரை, இளமை உண்மையான வளர்ச்சி காணமுடியாது. உலகின் புறவெளியில் தினந்தோறும் பொழுது விடிந்து பொழுது முடிந்தாலும் பலரது அக உலகில் விடியல், இன்னும் விரல் பிரிக்கவில்லை.. கருத்துக் குருடர்கள் கருக்கிருட்டில் தூங்குகிறார்கள். "உத்திஷ்ட உத்திஷ்ட' என்பதே கூட இவர்களுக்குத் தாலாட்டாக அல்லவா தலைக்குள் இனிக்கிறது! 
உலகில் ஏகப்பட்ட தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, ஒரு கூட்டத்தை அடிமையாக்கிக் கொண்டு உலா வருவதுபோல், அண்ட வெளியில் ஆயிரக்கணக்கான கடவுள்கள் தங்கள் தலைமையைத் தக்க   வைத்துக் கொள்ள எப்போதும் போரிட்டுக் கொண்டா இருப்பார்கள்? இந்தக் கேள்வி உனக்குள் பிறக்க வேண்டாமா? தகுதியுடைய மற்ற ஜாதிக்காரன் பெற வேண்டிய வெற்றியைப் பிடுங்கி, தகுதியற்ற தன் ஜாதிக்காரனுக்குத் தருவது மானுட துரோகமல்லவா? எல்லோரும் படிக்க, எல்லோரும் வேலை பெற, எல்லோரும் உண்ண உடுக்க என்ன செய்யலாம்? இப்படி யோசிக்க வேண்டாமா? எனக்கா உனக்கா என்று, அன்றும் இன்றும் பிறர் பங்கினைத் திருடுதல்தான் சமூக வளர்ச்சியா?
யாரோ சொன்னது.. எப்போதோ கேட்டது.. எங்கோ எவராலோ திணிக்கப்பட்ட ஏகப்பட்ட நம்பிக்கைகள் இவற்றை மூட்டையாகச் சுமந்து திரிகிற முட்டாள் தனமா வாழ்க்கை? உன் கடவுள் என் கடவுள் என்ற பேச்சே முட்டாள் தனம் என்கிற புரிதல் வேண்டாமா? எல்லோரும் சாப்பிட உலகில் வழியே இல்லையா? தாயின் வயிற்றில் கண்மூடி  உறங்கும் காலம் முடிந்து விட்டது. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று பிறப்பதல்லவா ஞான விழிப்பு...  ஏதோ ஓர் அரசியல் கட்சியில் உறுப்பினராய் அலைதல்... எவரோ ஒரு தலைமையின் வெற்றிக்கு உயிர் கொடுத்தல்... எவன் வாழ்வையோ கெடுத்து தன் வாழ்வை வளப்படுத்தல்... யார் பணத்தையோ திருடி தன் வளத்தைப் பெருக்கல்... பிழையான உணவு.. முறையற்ற காமம்.. கொடூரமான துரோகம் இப்படி எத்தனை எத்தனை அறிவீனங்கள்.. கண் திறந்த தூக்கங்கள். உலகமே மனநோயாளிகளின் மைய மண்டபமாக அல்லவா இன்று ஆகிவிட்டது? எப்போது தெளிவு பெறல்? எப்போது கண்திறப்பு? எப்போது திருப்பள்ளி எழுச்சி? எப்போது விடியலின் விரல் பிரிப்பு?  ஒளிபடைத்த கண்ணினாய் வா..வா.. வா..
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com