நீ... நான்... நிஜம்! - 42: மனதின் வெறியா? அறிவின் நெறியா?

அண்மையில் ஒரு மாதம் அமெரிக்காவில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு விமான நிலையத்தில் என்னை வரவேற்று அழைத்துப் போக வந்த  நண்பர் ஒருவர்  செய்த சின்னத் தவறு, சிலமணித்துளிகள் எங்களைச் சிக்கலில்
நீ... நான்... நிஜம்! - 42: மனதின் வெறியா? அறிவின் நெறியா?

அண்மையில் ஒரு மாதம் அமெரிக்காவில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு விமான நிலையத்தில் என்னை வரவேற்று அழைத்துப் போக வந்த  நண்பர் ஒருவர்  செய்த சின்னத் தவறு, சிலமணித்துளிகள் எங்களைச் சிக்கலில் ஆழ்த்தியது. தமது காரை அவசரத்தில் "பார்க்' செய்துவிட்டு வந்திருக்கிறார்... அல்லது செல்பேசியில் பேசியபடியே கவனம் இங்கு இல்லாதபடி வந்திருக்க வேண்டும்.  எங்கே பார்க் செய்தோம் என்று அவருக்குச் சரியாக நினைவில் இல்லை. அங்கு கார் பார்க்கிங் கட்டிடங்கள் ஏழெட்டு மாடிகள் உடையவை. அதிலும் பல நூற்றுக்கணக்கான கார் ஒரு தளத்தில் நிற்கும். பார்க்கிங்கிற்கு அடையாள எண் உண்டு. அவசரத்தில் குறித்துக் கொள்ளாமல் வந்து படாதபாடு பட்டார். இந்தக் குழப்பங்கள் யாவுமே ஒருவரது விழிப்புணர்வற்ற நிலையின் விளைவே.

நம்முடைய ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு செயலுக்கும் ஏன் ஒவ்வொரு அசைவுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும். ஏன் செய்கிறோம்... என்ன செய்கிறோம்... எதற்காக இப்படிச் செய்கிறோம்...என்று விழிப்புடன் செய்ய வேண்டியது நம் கடமை. 

சர்க்கரை நோயாளியான ஒருவர், சர்க்கரை தன் உயிர் குடிக்கும் வெள்ளை விஷம் அது என்று அறிந்தும், மனைவிக்குத் தெரியாமல் சர்க்கரை போட்டு காப்பி சாப்பிட்டதைப் பெருமைபடப் பேசிக் கொள்கிறார். குடியை மறக்க வைத்தியம் செய்து குடும்பமே போராடி மீட்ட நண்பர் ஒருவர், குடித்துச் செத்துப் போய் குழிக்குள் போகிறார். ஏதோ ஒன்றைக் கண்டிப்பாகச் செய்தே ஆக வேண்டும் என்று மனம் பாடாய்ப் படுத்துவதை உளவியல் நிபுணர்கள் OCD என்கிறார்கள். ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்மனம் (அசேதன மனம்) தீர்க்கமாய் ஈடுபட்டு, பிடிவாதமாகச் செய்து முடித்து விடுகிறது. இந்த உலகில் நிகழும் பெருவாரியான பிழைகளுக்கு இதுவே காரணம். 

அமெரிக்காவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நாங்கள் பொருட்கள் வாங்கச் சுற்றியபோது தமிழகத்தின் பிரபல நடிகர் ஒருவரின் கதை எங்களுக்குச் சொல்லப்பட்டது. பரபரக்கும் கையரிப்பால் நான்கைந்து சின்னப்பொருட்களை அந்த நடிகர் தம் பெரிய பேண்ட் பாக்கெட்டில் சுருட்டிக் கொண்டு வாசலுக்கு வந்து விட்டார். பில் கொடுக்காமல் வெளியேறியதும் வாசலில் உள்ள வேவு பார்க்கும் பெருங்கருவி குரல் எழுப்பி ஊரைக் கூட்டி விட்டது. போலீசும் வந்து விட்டது. நடிகர் பெயர் பேப்பரில் வந்தால் அவமானமாகி விடுமே என்று அவருடன் குழுவில் வந்திருந்த வயதான நடிகர் திருடியதாகப் பலிகடா ஆக்கப்பட்டார். மனத்தின் பரபரப்பு தான் இந்தத் திருட்டின் காரணம். பணத்தின் ஆசையல்ல... இதுவும் ஒருவகை மனக்குழப்பமே...  மனித மனத்தின் செயல்பாடுகளை Conscious behavior மற்றும் Compulsive behavior என்று இரண்டாகப் பிரிக்கின்றனர். இன்று பலரிடமும் Conscious குறைந்து Compulsive அதிகமாகி வருகிறது.

இப்போது நெடுஞ்சாலைகளில் நிகழும் கோர விபத்துக்களைக் குறைக்க அரசுகள் ஏகப்பட்ட முயற்சிகள் எடுத்து வருகின்றன. என்றாலும் தொற்று நோய்களால் நிகழும்  மரணங்களை  விடவும் சாலை விபத்து மரணங்கள் அதிகம் என்கிறது புள்ளி விவரம். நாகா என்கிற புத்தகப் பிரியர் தம் புத்தகத்தில் இதுபற்றி எழுதிய வரிகள் என்னை வெகுவாகத் தைத்தன. அவர் எழுதுகிறார். "தமிழக நகரங்கள் பலவற்றிலும் பறக்கும் பைக்குகளில் செல்லும் இளஞர்களைக் கண்டால் வருத்தமாக உள்ளது. பைக்குகளில் செல்பவர்கள் தங்களைத் "தல', "தளபதி' என்று நினைத்துக் கொண்டு, நிழலை நிஜமாக்க முயன்று வன்முறை அல்லவா நிகழ்த்துகிறார்கள். இப்போதெல்லாம் டூ வீலர்கள் சாலையில் நேராகச் செல்வதில்லை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?! இளைஞர்களின் பைக்குகள் ஆங்கில எழுத்து "ந' போன்று சாலைகளில் இடம்}வலம்}இடம் என்று சாலைகளை அளந்து, கூட்டிப் பெருக்கி செல்கிறது. சிறிய சந்து கிடைத்தால் போதும் வளைந்து குனிந்து, போகும் போக்கில் மற்ற பயணிகளை நடு நடுங்க வைத்துப் போவதை எல்லாருமே பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? வளைந்து நெளிந்து வாகனங்களுக்கு இடையில் கிடைக்கும் சிறிதளவு இடைவெளியில் பறவைகளைப் போல வண்டிகளைப் பறக்கவிடும் நபர்களைப் பார்த்து, பயந்து போய் விடுகிறேன்.

வேகம் மட்டுமின்றி, லேன் (Lane) டிசிப்ளின் என்ற ஒழுக்கத்துடன் ஓட்டும் பழக்கம் இப்போது வழக்கொழிந்தே போய் விட்டது. சாலையின் இடதுபுறத்தில் செல்க என்ற அறிவுரைகள் காற்றில் கரைந்து போய் காலம் பல கடந்துவிட்டது. 

6 வழிச்சாலையோ, 4 வழிச்சாலையோ, எதுவாகினும் கார்களுக்கு நடுவே டூ வீலர்கள் அடைத்தபடி செல்வதால், லேன் டிசிப்ளின் என்ற ஒரு விஷயமும் சுத்தமாக மறைந்தே போய்விட்டது, கொடுமையிலும் கொடுமை! இளைஞர்களும், இளைஞிகளும் "வண்டி ஓட்டுவதே த்ரில்லுக்குத்தான் அங்கிள்' என்று நம்மை ஏளனத்துடன் வயதானவராகப் பார்க்கிறார்களோ? 

முன்பு, ஏதோ, அங்கொன்றும், இங்கொன்றுமாக இப்படி சாலையில் சர்க்கஸ் காண்பித்தவர்கள் இப்போது பல்கிப் பெருகி சாலையை "ரேஸ்' நடக்கும் பந்தய மைதானமாக மாற்றிவிட்டார்கள். இவ்வளவு விரைவாக  வண்டியைச் செலுத்தும் நம்மூர் "பைக்கிகள்' Grand Prix எனப்படும் ரேசுக்குப் போய் தங்கள் திறமைகளைக் காண்பித்தால் நமக்கு நான்கு பதக்கங்களாவது மிஞ்சும்! இப்போது ஊனமுற்றவர்களை உருவாக்கி கொண்டு இருக்கிறோம்' என்று வருந்துகிறார் நாகா.  

எது இளைஞர்களை இப்படி பிணமாகவோ நடைப்பிணமாகவோ ஆக்குகிறது. வெறி...வெறி... முட்டாள்தனமான வெறி.  என்ன செய்கிறோம்... ஏன் செய்கிறோம்? இதன் விளைவு என்னாகும்? எதிர்பாராமல் என்ன என்ன நடக்க வாய்ப்பு உண்டு? இப்படி விழிப்புணர்வுடன் சிந்தித்து மனத்தின் வெறியை  விட அறிவின் நெறி முக்கியம் என்கிற தெளிவு ஏற்பட்டால் விபத்துகள் நடக்குமா?

செல்ஃபி என்றொரு பைத்தியம் இன்று மக்களைப் பேயாய்ப் பிடித்து ஆட்டுகிறது! ஆபத்தான மலையுச்சி, ஓடும் ரயில், விபத்து விளையும் விபரீத இடங்களில் கூட "செல்ஃபி... செல்ஃபி' என்று இளைஞர்கள் பரபரக்கிறார்கள். 

பலர் செத்துப் போன செய்தி கேட்ட பின்னும் அது என்னவோ அடுத்தவனுக்கு மட்டும் தான் நடக்கும் என்று அறிவீனமாகக் கருதியபடி தங்கள் முட்டாள்தனத்தைத் தொடருகிறார்கள். அதுமட்டுமா? ஆண்மை அழிந்தாலும் ஈரல் கிழிந்தாலும் குடலே கருகி சுடலை ஆனாலும் குடி... குடி... என்று குடித்து அழிகிறார்கள். எல்லாமே விழிப்புணர்வின்மையின் விளைவுதான்.

ஓர் இளைஞன்  விழிப்புணர்வுள்ளவன் எப்படி இருப்பான் என்பதற்கு Positive உதாரணம் சொல்லட்டுமா? 

பகத்சிங். ஸ்காட்டைக் கொல்ல முயன்றவன், சட்டமன்றத்திற்குள் கையெறி குண்டுகளை வீசிய தீவிரவாதி எப்படி விழிப்புணர்வுள்ளவன் என்று நீங்கள் கருதலாம்.  பகத்சிங் வாக்கு மூலத்தைப் 
பாருங்கள். 

"தனிப்பட்ட  வன்முறைச் செயல்களால் உலகத்தில் யாருமே எங்குமே வெற்றிபெற்றதில்லை என்பது நமக்குத் தெரியும். நமது நோக்கம் சிலரைக் கொல்வதல்ல.. மாறாக இச்சமூக அமைப்பை மக்களுக்கான குடியரசாக மாற்றம் செய்வது' என்று தன் செயலின் நியாயத்தை அவன் தெளிவு செய்தான்.

1929 ஏப்ரல் 8 டெல்லி மைய மண்டபத்தில் இந்திய வைஸ்ராயாக இருந்த வெள்ளைக்காரன் இர்வின், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தொழில் தகராறு சட்ட விதிகளை அறிமுகப்படுத்தினான். அவைத் தலைவர் விவாத இறுதியில் பேசமுற்பட்ட போது "இன்குலாப் ஜிந்தாபாத்' என்று குரலெழுப்பிய படி கையெறி குண்டினைச் சட்டமன்ற மையத்தில் நடைபாதை ஒன்றில் வீசினான் பகத்சிங். இதில் முக்கியமான விழிப்புணர்வு... எவருக்கும் உயிராபத்து ஏற்படக் கூடாது என்கிற கவனத்துடன் குண்டு எறியப்பட்டது. இதுதான் முக்கியம். பின்னர் இன்னொரு குண்டும் வீசப்பட்டது. 

பிரிட்டாஷாரின் அடக்குமுறைச் சட்டங்களை எதிர்க்க இந்திய உறுப்பினர்களின் கண்திறக்க வைக்கவே இந்தக் குண்டுவீச்சு நிகழ்ந்தது. குண்டுவீச்சு அடக்குமுறைக்கான எதிர் ஆயுதமே ஒழிய, உயிரிழப்புக் கூடாது என்பதில் கூடுதல் கவனம். குண்டுகளைத் தொடர்ந்து துண்டறிக்கைகளை வீசி உலகின் கவனத்தை நியாயத்தின் பக்கம் திருப்பினார் பகத்சிங். கோழையைப் போல தப்பியோட வில்லை.  பிரிய முடியாத நட்பு காரணமாக, அவரது நண்பர் பி.கெ.தத்தான் இரண்டாவது குண்டு வீசியதாக வலிந்து வாக்கு மூலம் கொடுத்தார். இருவரும் துணிவுடன் கைதானார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த வாக்கு மூலத்தின் சில வைர வரிகளை வாசிப்போமா?  இதையும் நான் நாகாவின் நூலிலிருந்துதான் படித்தேன்.

"மனித சமூகத்தை நேசிப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. மனித உயிர் விவரிக்க முடியாத அளவு புனிதமானது என்று நாங்கள் அறிவோம். இங்கிலாந்தை அதன் கனவுலகிலிருந்து வெளியே கொண்டுவர கைக்குண்டுகள் தேவைப்படுகிறது. அதற்காகவே நாங்கள் குண்டுகளை எறிந்தோம். எங்களின் நோக்கம் செவிடர்களுக்கும் கேட்கும்படியாக உரக்க கத்திச் சொல்வது?'  குண்டு வீச்சுக்கான காரணத்தை இதை விட அழகாகச் சொல்ல முடியுமா என்ன?

பகத்சிங் மேலும் சொல்கிறார்.  "புரட்சி என்பது ரத்தகளறி அல்ல. அநியாயத்தின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கும் சமூக அமைப்பை மாற்றுவது வறுமையிலிருந்து மனித சமூகத்திற்கு விடுதலை கிடைக்க வேண்டும். புரட்சியின் பலி பீடத்திற்கு எங்களின் இளைமையின் நறுமணத்தைப் பூசுவதற்கு வந்திருக்கிறோம்.' பகத்சிங்கின்  இந்த வாக்குமூலத்தை வழக்கறிஞர் அஸப் அலி நீதிமன்றத்தில் பதிவு செய்தபோது அங்கிருந்த நான்கு நீதிபதிகளில் மூவர் கண்ணீர் சிந்தினர் என்கிறார்கள்.  

பகத்சிங்கின் கடைசி நாள் கூட வீரத்தின் தலை நாள் என்பதைப் படிக்கும் போது நெஞ்சு நிறைகிறது. "லெனின் வாழ்க்கை வரலாறு' என்ற நூலை ஒரே நாளில் படிக்க வேண்டும் என்ற துடிப்புடன் வலது கையில் புத்தகத்தைப் பிடித்தபடி படித்துக் கொண்டிருந்தார் பகத்சிங். 

ஒரு சிறை அதிகாரி தயங்கியபடி, ""சர்தார் உங்களை இன்றே தூக்கில் தொங்கவிடவேண்டும், என்று உத்தரவு வந்துள்ளது. தயாராகுங்கள்'' என்றார். லெனின் வாழ்க்கை வரலாற்றைக் படித்துக்கொண்டிருந்த  பகத்சிங், ""கொஞ்சம் பொறு ஒரு புரட்சியாளனை இன்னொரு புரட்சியாளன்  சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும் நேரம் இது. குறுக்கே வராதே'' என்று வாய்மூடவைத்தார்.  மரணத்தின் பிடியிலும் விழிப்புணர்வுடன் இருந்த பகத்சிங் எங்கே? வாழும் கணத்திலும் உறங்கிக் கிடக்கும் இன்றைய இந்திய இளைஞர்கள் எங்கே? அதனால் தான் ஜவஹர்லால் நேரு, "பகத்சிங் ஒரு குறியீடு' என்று சிலாகித்தார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com