"வெற்றிக்கான வழி இருக்கவே செய்கிறது!'' ஸ்டீபன் ஹாக்கிங்
By DIN | Published On : 20th March 2018 11:43 AM | Last Updated : 20th March 2018 11:43 AM | அ+அ அ- |

கேள்விகளை முன் வைத்து தேடல்களை நிகழ்த்தி வந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று நம்மிடம் இல்லை. கல்லூரியில் கணிதத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்க நினைத்தவர் ஹாக்கிங். அவர் சேர்ந்த கல்லூரியில் கணிதம் முதன்மைப் பாடமாக படிப்பிக்கப்படவில்லை. வேறு கல்லூரியில் சேர்க்க ஹாக்கிங்கின் தந்தைக்குப் பொருளாதார வசதி இல்லை. வேறு வழியின்றி ஹாக்கிங் இயற்பியல் படிக்க ஆரம்பித்தார். புதிய பாதையில் புதிய வெளிச்சம் கிடைக்க விஞ்ஞானியாக செதுக்கப்பட்டார். சர்வதேச விருதுகள் பதின்மூன்று அவரை அலங்கரித்தாலும் நோபல் விருது மட்டும் அவரை விட்டு ஒதுங்கியே நின்றது.
"கருந்துளையினுள் ஒளி உட்பட எதுவுமே வெளியேற முடியாது என்று நம்பிக்கைக்கு மாறாக , கருந்துளையிலிருந்து சிறு துகள்கள் வெளியேறுகின்றன... கருந்துளைகளுக்கும் மனிதனைப் போன்று ஒரு முடிவு உண்டு' என்று ஹாக்கிங்கின் கண்டுபிடிப்பு சரியானதா அல்லது தவறான ஒன்றா என்று இன்றுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாகவே ஹாக்கிங்கிற்கு நோபல் விருது வழங்கப்படவில்லை.
இளம் வயதில் கொடிய நரம்பு நோய் தாக்க... எல்லா உறுப்புகளும் செயல் இழந்து சக்கர நாற்காலியில் தனது வாழ்நாளை முழுவதும் கழித்தவர். அவரைக் காப்பாற்ற செய்த அறுவை சிகிச்சையால் அவரது பேசும் திறமையும் போக ... அதிகம் போனால் இரண்டு ஆண்டுகள் வாழ்வார் என்று மருத்துவர்கள் முடிவு செய்தாலும்... ஹாக்கிங் சுமார் ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து காட்டினார்... அதுவும் உலகம் போற்றும் விஞ்ஞானியாக..!
பிரபஞ்சம் ஒரு சிறு புள்ளியிலிருந்து விரிந்து வளர்ந்த ஒன்று என்று சொன்ன ஹாக்கிங்சின் "THE BIG BANG THEOERY' தற்சமயம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் 1960 கால கட்டத்தில் ஹாக்கிங்கின் இந்த சித்தாந்தம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
குவாண்டம் கோட்பாடு, அண்டவியில் தொடர்பான ஆராய்ச்சிகளில் முந்தைய விஞ்ஞானிகளின் கருத்துகள் பொய்யானவை என்று நிரூபித்து உலகத்தின் தன பக்கம் திருப்பிக் கொண்டவர் ஹாக்கிங்.
"பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் மனிதர்கள் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறார்கள். இந்தப் பூமி நூறு ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் புலம் பெயர வேண்டிய காலகட்டம் இது.
மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இடைவெளியில் கிடைக்கும், ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன நலத்திற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது...'' என்று சொல்லி வந்தவர் ஹாக்கிங்.
அமெரிக்காவில் அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு அறுபது லட்சம் டாலர் பரிசு என்று அறிவித்தது. ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய "காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்' என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுக்க, பரிசும் கிடைத்தது .
எல்லா மதங்களும் சொர்க்கம், நரகம் குறித்து பேசுகின்றன. "சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை; எல்லாம் கற்பனைக் கதை'' என்று அதிரடியாகச் சொன்னவர் ஹாக்கிங்.
ஹாக்கிங் இரு முறை திருமணம் செய்து கொண்டவர். ஒரு மகளும் , இரண்டு மகன்களும் இருக்கின்றனர் .
விண்வெளியில் பயணிக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறவில்லை என்றாலும், புவி ஈர்ப்பு சற்றும் இல்லாத சூழலில், ஆய்வுக்கு கூடத்தில், சில மணி நேரம் விண்கலத்தில் ஹாக்கிங் கழித்திருக்கிறார்.
"எனது நூல்கள் சாதாரண கடைகளில் வைத்து விற்கும் ஒன்றாக இருக்க வேண்டும்..'' என்று சொல்லி வந்த ஹாக்கிங் சாமான்யர்களுக்கும் புரியும் விதத்தில் எழுதி அறிவியலை மக்களிடையே பரப்பினார்.
- கண்ணம்மா பாரதி