நூல்களைத் தேட ஓர் இணையதளம்!

தமிழ் மொழியில் ஆய்வு செய்பவர்கள் பலர் தங்களுடைய ஆய்வுக்குத் தேவையான நூல்களைத் தேடித் தங்களது கல்லூரி அல்லது பல்கலைக்கழக நூலகங்கள் மட்டுமின்றி, அரசுப் பொது நூலகங்கள்,
நூல்களைத் தேட ஓர் இணையதளம்!
Updated on
1 min read

தமிழ் மொழியில் ஆய்வு செய்பவர்கள் பலர் தங்களுடைய ஆய்வுக்குத் தேவையான நூல்களைத் தேடித் தங்களது கல்லூரி அல்லது பல்கலைக்கழக நூலகங்கள் மட்டுமின்றி, அரசுப் பொது நூலகங்கள், தனியார் அமைப்புகளின் கட்டுப்பாட்டிலுள்ள நூலகங்கள், தனிநபர் நூலகங்கள் என்று ஒவ்வொரு இடமாகத் தேடி அலைவதுண்டு. சிலர் பழைய புத்தகக் கடைகளில் விலைக்கு வாங்கிவிடலாம் என்று ஒவ்வொரு புத்தகக் கடையாகத் தேடிக் கொண்டிருப்பதுமுண்டு. 


இப்படித் தேடி அலையும் ஆய்வாளர்களுக்குத் தேவையான புத்தகங்கள் எங்கு கிடைக்கும்? என்று தெரிந்தால், அவர்களுக்கான வேலையும் எளிதாகிவிடும், நேரமும் மிச்சமாகிவிடுமே என்று நினைத்த சென்னையைச் சேர்ந்த கோ. சந்திரசேகரன் 1861 முதல் நடப்பு ஆண்டு வரை வெளியான நூல்களைப் பற்றிய குறிப்புகளை ஆண்டுவாரியாகத் தொகுத்துத் தரும் வலைத்தளமாக, "அட்டவணை' எனும் பெயரிலான இணையதளத்தை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். 
இத்தளத்தில் தமிழில் வெளியான நூல்களை, நூலின் பெயர்களிலான அகரவரிசைப்படி வரிசைப்படுத்தி, நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, விலை, பன்னாட்டுத் தரக் குறியீட்டு எண் (ISBN) போன்ற தகவல்களையும், அடைப்புக்குறிக்குள் அந்த நூல் கிடைக்குமிடம், அதற்கான எண் போன்றவைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தளத்தில் இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கின்றன. 
இப்படி நூல்கள் அட்டவணைப்படுத்தப்படுவதால், எந்த நூலகத்தில் எந்த நூல் உள்ளது என்பதை உலகின் எந்த மூலையில் இருந்து எளிதில் அறிய முடியும். இதேபோல், நாம் தேடும் நூல் எந்த நூலகத்தில் உள்ளது மற்றம் அந்த நூல் வரிசை எண் ஆகிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒரே நூலின் பல்வேறு பதிப்புகள் இருந்தாலோ, பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருந்தாலோ அல்லது பல்வேறு வருடங்களில், பல்வேறு பதிப்புகளில், பல்வேறு பதிப்பகங்களின் மூலம் வெளியிடப்பட்டிருந்தாலோ, அவையனைத்தையும் இந்த தளத்தின் வழியாக எளிதில் அறிந்து கொள்ள முடியும். இதே போல் தற்போது உள்ள பதிப்பகங்கள் மூலம் வெளியிடப்பட்ட நூல் என்றால், அந்தப் பதிப்பக முகவரி மற்றும் தொலைபேசி எண்ணும் அளிக்கப்படுகிறது. 
இந்த அட்டவணை தளத்தில் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் கல்வித் துறையில் முக்கியமாக, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள நூல்களின் பட்டியலைப் பெற்று, இத்தளத்தில் பதிவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இவர், தனிப்பட்ட நபர்களிடமிருந்தும், படைப்பாளர்கள் மற்றும் பதிப்பகங்களிடமிருந்தும் நூல்களைப் பற்றிய குறிப்புகளைப் பெற்று அட்டவணைப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார். 
பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தனியார் நூலகங்கள், படைப்பாளர்கள், பதிப்பகங்கள் மற்றும் தனி நபர்கள், தங்களிடமிருக்கும் நூல்கள் குறித்த தகவல்களை gowthamwebservices@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால், மின்னஞ்சல் கிடைக்கப் பெற்ற சில நாட்களில் அந்த நூல்கள் குறித்த விவரங்கள் அட்டவணை தளத்தில் சேர்க்கப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கிறார். 
இந்தத் தளத்தைப் பார்வையிட விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் http://www.attavanai.com/ எனும் இணைய முகவரிக்குச் சென்று பார்க்கலாம்.
- மு. சுப்பிரமணி 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com