இயற்கை ஒர் அழகான இல்லம்!

ஒரு மன்னர் தனது நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் சென்று கொண்டிருந்தார்.
இயற்கை ஒர் அழகான இல்லம்!
Updated on
4 min read

தன்னிலை உயர்த்து! 41 ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.
 ஒரு மன்னர் தனது நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் சென்று கொண்டிருந்தார். கடுமையான வெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அவர் கண்களில் ஒரு முதியவர் வெயிலைப் பொருட்படுத்தாது ஒரு பழம் தரும் மரக்கன்றை நட்டுக் கொண்டிருப்பதை பார்த்தார். உடனே மன்னர், ""முதியவரே! உங்களுக்கோ மிகவும் வயதாகிவிட்டது. இந்த மரக்கன்று வளர்ந்து, மரமாகி, கனி தர பல வருடங்கள் ஆகும். அதனால் உங்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. நீங்கள் ஏன் உங்கள் உடலை வெயிலில் வருத்தி இம்மரத்தினை நடுகிறீர்கள் ?'' என்றார்.
 அதற்கு அந்த முதியவர், ""மன்னா! இதோ நாம் நிற்கும் இந்த மர நிழலும், நாம் உண்ணும் இப்பழங்களும் நம் முன்னோர்கள் நட்டு வைத்தவையே. எனவே நமது சந்ததியினருக்கு நாம் நட்டுவைத்தால்தானே பயன் கிடைக்கும்?'' என்றார். மன்னர் அப்பதிலை கேட்டு மிகவும் மகிழ்ந்தார். "தன்னை நேசித்த இதயத்தை ஒரு போதும் இயற்கை கைவிட்டதில்லை' என்ற பிரிட்டன் நாட்டு கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ் வொர்த்தின் வரிகளுக்கேற்ப வாழும் அந்த முதியவரை அம்மன்னர் அவரது அரசவைக்கு அழைத்துச் சென்று பாராட்டினார்.
 ஆப்ரிக்க அமெரிக்க மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக இருந்தவர் மார்டின் லூதர் கிங். அவர் 1964- ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். அவரிடம், ""நாளைக்கு நீங்கள் இறந்து போவீர்கள் எனத் தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ""ஒரு மரம் நடுவேன்'' என்றார். "நிழல்தர மரமில்லையென்றால் கொளுத்தும் வெயிலைக் குற்றம் சொல்லக்கூடாது. மனிதனைத்தான் குற்றம் சொல்லவேண்டும்' என்கிறது சீனப் பழமொழி.
 "இவ்வுலகம் இனியது' என்பார் மகாகவி பாரதி ; அவரது பார்வையில் உலகிலுள்ள வானம், காற்று, தீ, நீர், நிலம், மழை, மின்னல், இடி, கடல், மலை, காடு அனைத்தும் இனியவை. ஆறுகள், உலோகம், மரம், செடி, கொடி, மலர், காய், கனி, பறவைகள், ஊர்வன, விலங்குகள், நீர்வாழ்வன அனைத்தும் நல்லவை என தன்னைச் சுற்றியுள்ள இயற்கையின் ஒவ்வோர் உயிரினத்தையும் கண்டு மகிழ்ந்தவர் பாரதியார்.
 இயற்கை மிகவும் அழகானது; இனிதானது; மகிழ்வானது. அது பிரபஞ்சத்தின் உன்னதம். இயற்கை உயிர்களின் கருவறை; அது மாபெரும் பிரம்மம்; உயிர்களின் ஆதாரமும், வாழ்வாதாரமும், இயற்கை. உயிர்களின் பிரமீடும் இயற்கையே.
 மனிதனும் ஓர் இயற்கை. இயற்கையோடு தொடர்பு கொள்ளும்போது மனிதன் ஆற்றல் பெறுகிறான். இயற்கையோடு இயைந்து வாழ்பவருக்கு இயற்கையானது, அறிவாகவோ, ஆற்றலாகவோ, செல்வமாகவோ தன்னை வாரி வழங்குகிறது. இயற்கையை நேசிப்பவர்களிடம் அன்பு மிகுதியாகும்; உள்ளத்தில் அழகு பெருக்கெடுக்கும்; ஆர்வம் துளிர்விடும்; மகிழ்ச்சி பன்மடங்காகும்; புதுமை புலப்படும்; கற்பனை மிகும்; கண்ணோட்டம் அழகு பெறும். மனம் ஆகாயமாய் விரிவடையும்.
 பூமியும் மனிதனும் வேறல்ல. பூமிக்கு நேர்வதெல்லாம் அதில் வாழ்கின்ற ஒவ்வோர் உயிரினத்திற்கும் நேர்கிறது. இந்திய பெருங்கடலிலே அமைந்துள்ளது மொரீசியஸ் மற்றும் மடகாஸ்கர் தீவுகள். இவற்றை பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்ச்சுகீசியர்களும், பின்னர் டச்சுக்காரர்களும் தங்கள் வசப்படுத்தினர். இந்த தீவுகளில் டோடோ என்னும் பறவைகள் அதிகமாகக்காணப்பட்டன. இவை வான்கோழியைவிட பெரியவை. இதன் உயரம் 3 அடி முதல் 4 அடி. இதன் எடையோ 15 கிலோவிலிருந்து 20 கிலோ வரை இருக்கும். டோடோவால் வேகமாக ஓடமுடியாது. எனவே, இப்பறவையை மனிதர்கள் இறைச்சிக்காக எளிதில் அடித்துக் கொன்று சாப்பிட்டனர். காலங்காலமாக வாழ்ந்த டோடோ பறவையினம் நூறு ஆண்டுகளிலேயே மனிதனுக்கு இரையாகி அழிந்தே போனது.
 1681ஆம் ஆண்டு டோடோ இனத்தின் கடைசிப் பறவையும், மனிதனுடைய ருசிக்கு இரையாகி, உலகில் டைனோசரைப் போல் அழிந்து விட்ட இனத்தில் அது சேர்க்கப்பட்டுவிட்டது. டோடோ பறவை அழிக்கப்பட்ட பிறகு மொரிசீயஸ் தீவினுடைய சூழ்நிலையிலே சில மாற்றங்கள் ஏற்பட்டன. அங்கே அதிக அளவில் இருந்த கல்வாரியா மரங்கள், அதன் பின்னர் புதிதாக எந்தவொரு மரத்தையும் உருவாக்கவில்லை. கல்வாரியா மரங்களின் பழமும், அதன் உள்ளே இருக்கின்ற விதையும் மிகவும் கடினத்தன்மை வாய்ந்தவை. அந்த பழங்களை டோடோ பறவைகள் மிகவும் விரும்பி உண்ணும். பின்னர், அவ்விதைகளை கழிவின் வழியே வெளியேற்றும். அப்போது அந்த கல்வாரியா விதைகள் மிருதுவாகி முளைக்கின்ற திறனை அதிகம் பெற்றிருக்கும்.
 கடந்த நானூறு ஆண்டுகளில் கல்வாரி மரங்களின் விதைகளைச் சாப்பிட டோடோ பறவைகள் இல்லாததால், அவ்விதைகள் அங்கே வெறும் மண்ணில் புதையுண்டுவிட்டன. ஒரு விதையிலிருந்து கூட புதிதாக ஒரு மரமும் முளைக்கவில்லை. மனிதன் பறவை இனத்தை அழித்தான். அதன் விளைவால் ஒரு மர வகையும் சேர்ந்து அழிந்துபோனது.
 நம்மைவிட வலிமையானவர்கள் நம்மை எவ்வாறு நடத்தவேண்டும் என நினைக்கின்றோமோ அவ்வாறு தான்
 நம்மின் வலிமை குன்றியவர்களை நடத்தவேண்டும் என்று
 வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
 மெலியார்மேல் செல்லு மிடத்து
 என்பார் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இவ்வுலகில் வாழ்கின்ற உயிரினங்களில் அறிவால், வலிமையால் உயர்ந்த இனம் மனித இனம். மற்ற உயிரினங்களெல்லாம் மனிதனுக்கு கட்டுப்பட்டுவிடும். அவ்வாறிருக்க, சரியாக பறக்க முடியாத பறவைக்கு நல்ல வாழ்வை அளிப்பது தான் மனிதனுக்கு அழகு. அதனை அழிப்பது அல்ல என்கிறது டோடோவின் குரல்.
 இயற்கையும், மனிதனும் பஞ்சபூதங்களின் தொகுப்பு. தன்னை வாழவைக்கும் இயற்கையை, அழித்துவாழும் ஓர் அதிசயப் பிராணியாக மனிதன் வாழ்ந்துவிடக்கூடாது. ஏனெனில் இயற்கைக்கு முரண்படுகின்ற ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுவது நிதர்சனம். உலகின் பல பிரச்னைகளுக்கும் ஆணிவேராய் இருப்பது இயற்கைக்கு எதிராய்ச் செயல்படுவதே ஆகும்.
 "இந்த பூமிப்பந்து குறித்த பாடலுக்கு மரணம் என்பதே கிடையாது' என்பார் }பிரிட்டன் நாட்டு அறிஞர் ஜான் கீட்ஸ். இயற்கை ஓர் அதிசயம். அது வானவில்லின் வண்ணம் கொண்டு, மேகத்தில் தூரிகையின்றி ஓவியம் வரையும். கீர்த்தனைகள் கற்காமலே குயில்களின் கீதம் மனதை அள்ளும். தாளங்கள் கேட்காமலே கார்மேக மாற்றத்திற்கு மயில்கள் தோகைவிரித்தாடும். குறும்புச்சண்டையில் மான்கள் மனதை குதூகலமிடும். மெல்லிய காளான் வெடித்துக் கிளம்பும். முதலைகள் நீர்வளம் காக்கும். வேடந்தாங்கல் கண்டம்விட்டு கண்டம்தாண்டி "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என பறவைகளை ஒன்றுசேர்க்கும்.
 சுவை தரும் மழை, வியர்க்க வைக்கும் வெயில், பருக முடியாத கடல், கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் என தன்னை உற்று நோக்குபவரையெல்லாம் கவிஞனாக்கும் உயர்ந்த கவிஞன்தான் இயற்கை. அதனால் தான் இயற்கையைக் கண்டு, "எனக்கு இந்த இடம் மிவும் பிடித்திருக்கிறது - எனவே எனது காலத்தை இங்கு கழிக்க சித்தமாயிருக்கிறேன்'' என்றார் ஷேக்ஸ்பியர்.
 "உலகில் உள்ள காடுகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நாம், நம்மைநாமே ஒருவருக்கொருவர் என்ன செய்து கொள்கிறோம் என்பதன் கண்ணாடி பிரதிபலிப்பு'' என்கிறார் மகாத்மா காந்தியடிகள்.
 ஒரு காட்டினுள்ளே இருந்த ஞானியைச் சந்தித்தான் ஒரு சிறுவன். "சுவாமி! நான் கடவுளைக் காண வேண்டும்'' என்றான். அதற்கு ஞானி, "கடவுள் என்பது உருவமல்ல; அது ஓர் உணர்வு'' என்றார். "சரி' என்று தலையசைத்தான் அந்தச் சிறுவன். காட்டிற்குள்ளே தெள்ளிய நீரோடையின் பிறப்பிடமான நீர்வீழ்ச்சிக்கு அருகில் அவனை நிறுத்தினார். ஒரு நிசப்தமான சூழலில், நீர்வீழ்ச்சியின் மெல்லிய ஒலியில் குளிர்ந்த காற்று உடலெங்கும் வீசிட, அவனது உள்ளத்திலே ஓர் அற்புதம் நிகழ்வதை உணர்ந்தான். "சுவாமி! இறைவன் இருப்பதை உணர்ந்தேன்'' என்றான்.
 அச்சிறுவன் கடவுளைக் கண்ட செய்தி அந்த நாடெங்கும் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக அதே அனுபவத்தை அனுபவிக்க அங்கு சென்றனர். காலங்கள் கடந்தன. இளைஞனான அச்சிறுவன் மீண்டும் அந்த அனுபவத்தைத் தேடி அதே இடத்திற்குச் சென்றான், அங்கே ஞானி இல்லை. இப்பொழுது அவ்விடத்திற்கு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. ஞானி இருந்த குடிலிலிருந்து நீர்வீழ்ச்சி வரை சுற்றிலும் பொம்மைக் கடைகள் நிறைந்திருந்தன. அவன் நின்று ரசித்த இடம் ஓர் ஆலயமாக மாறியிருந்தது. மக்கள் அனைவரும் அங்கே வரிசையாய் நின்று, இறைவனை தரிசித்துவிட்டு அந்த நீர்வீழ்ச்சியின் நீரினை தீர்த்தமாக அள்ளிக் கொண்டு வீடு சென்று கொண்டிருந்தனர். கண்ணை மூடி அங்கே நின்று பார்த்தான். எந்த அனுபவமும் ஏற்படவில்லை. அங்கே இருப்பவர்களிடம் ஞானியின் புதிய இருப்பிடத்தை அறிந்து இரண்டு மலைகள் தாண்டி அவரைச் சந்தித்தான்.
 "சுவாமி! கடந்த முறை நான் உங்களைச் சந்தித்தபோது இறைவனின் அனுபவத்தை தந்தீர்கள். மீண்டும் அதே அனுபவத்தை தேடியே வந்தேன்'' என்றான். அவ்விளைஞனை அழைத்துக் கொண்டு ஒரு மெல்லிய நீரோடை அருகில் சென்றார். நிசப்தமான அந்த காற்றினில் மெüனமாக ஓடும் நதிக்கு அருகில் அமர வைத்தார். அந்த இளைஞனுக்கு மீண்டும் அந்த பரவசம் உணர்வு தலைப்பட்டது. அந்த உணர்வின் மகிழ்ச்சியோடு ஞானியை வணங்கி, "இதே அனுபவத்தை இப்போது என்னால் அந்த பழைய இடத்திலே காணமுடியவில்லையே'' என்றான். அதற்கு ஞானி, "இயற்கையை அழிக்கத் தொடங்குகின்ற போது இறைவன் அங்கிருந்து வெளியேறி விடுகிறார்'' என்றார்.
 மனிதன் இயற்கையின் வரம்;
 இயற்கை ஓர் அழகான இல்லம்!
 (தொடரும்)
 கட்டுரையாசிரியர்:
 காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com