

மாணவர்களைப் பொறுத்தவரை ஒரு பள்ளி என்பது வீட்டிலிருந்து சற்றே தொலைவில் உள்ள மற்றொரு வீடாகும். என்றாலும், நம் நாட்டில் உள்ள பல அரசுப் பள்ளிகள் இந்த வீட்டுச் சூழலை இன்னும் அடையவில்லை. குறிப்பாக, மாநில அரசுப் பள்ளிகள் சிதைந்த உள்கட்டமைப்பு, பழைய கட்டடம் போன்றவற்றிலும், மின்சாரம், தண்ணீர், கழிப்பறை முழுவதும் இல்லாத அல்லது போதிய அளவில் இல்லாத நிலையிலும் இருந்துவருகின்றன.
நம் நாட்டின் கிராமப் பகுதிகளில் உள்ள 25 சதவீத அரசுப் பள்ளிகள் குடிநீர் வசதி இல்லாமலும், 26 சதவீத பள்ளிகள் கழிப்பறை, நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், 78.7 சதவீத பள்ளிகள் கணினி ஆய்வகம் இல்லாமலும் இருப்பதாக வருடாந்திர நிலை கல்வி அறிக்கை (ASER-2018) தெரிவிக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு அரசுப் பள்ளிகளுக்கு உதவும் பொருட்டு கடந்த 2003 இல் One School At A Time (OSAAT) என்ற அமைப்பை தொடங்கியது.
அரசுப் பதிவுபெற்ற, லாப நோக்கமற்ற இந்த அமைப்பு அரசுப் பள்ளிகளில் சிதைந்த நிலையில் உள்ள உள்கட்டமைப்புகளைச் சீரமைப்பது, ஸ்மார்ட் வகுப்பறைகள், தூய்மையான கழிப்பறைகள், விளையாட்டு மைதானம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளது. கர்நாடகம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை 24 பள்ளிகள் இந்த அமைப்பால் மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளன. தற்போது கர்நாடக மாநிலம், ராய்ச்சூர், மைசூரு மாவட்டங்களில் மேலும் 3 பள்ளிகளைச் சீரமைக்கும் பணிகளில் OSAAT ஈடுபட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பரெய்லி மாவட்டத்தில் உள்ள காயத்ரி தேவி உயர்நிலைப் பள்ளியில் 500 மாணவர்கள்படித்து வந்துள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரும் மோசமான தட்பவெப்ப நிலையில் நாள்தோறும் மரத்தடியில் அமர்ந்தே பாடம் கற்றுள்ளனர். இவர்கள் அமர்ந்து எழுதுவதற்கு பெஞ்ச், டெஸ்க் போன்றவை கிடையாது என்பதோடு, ஆசிரியர்கள் எழுதிப் போடுவதற்கு கரும்பலகையும் இல்லாத சூழல் இருந்துள்ளது.
இந்த நிலையை அறிந்து கடந்த 2017 இல் அங்கு சென்ற இந்த அமைப்பினர் அந்தப் பள்ளிக்கு சுகாதாரமான கழிப்பறைகளுடன் கூடிய 6 வகுப்பறைகள் கொண்ட கான்கிரீட் கட்டடத்தைக் கட்டிக்கொடுத்துள்ளனர். இதனால் கடந்த 2 ஆண்டுகளில் 44 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இதேபோல, கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள பசவருத் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி மழை பெய்தால் தண்ணீர் ஒழுகும் நிலையில் மோசமான நிலையில் இருந்துள்ளது. இந்தப் பள்ளியை OSAAT அமைப்பு அழகியல் நிறைந்த 7 வகுப்பறைகள், சுகாதாரமான கழிப்பறைகள் கொண்ட கட்டடமாக மாற்றியுள்ளது.
இதுகுறித்து OSAAT அமைப்பின் தலைவர் ரவிசங்கர் பைரப்பகெளட கூறுகையில், "ஒரு பள்ளியின் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் மாணவர்களின் கல்வியை மட்டும் உறுதிசெய்வதில்லை. அவர்களுடைய மனநலன், உடல்நலன் ஆகியவற்றையும் முன்னேற்றுகிறது. பாதுகாப்பான, சாதகமான சுற்றுச்சூழல் ஒவ்வொரு மாணவருக்கும் உரியது என எங்கள் குழு உறுதியாக நம்புகிறது. இதனால், அத்தகைய சூழலை உருவாக்கும் பணியில் கடந்த 15 ஆண்டுகளாக எங்களது குழு ஈடுபட்டுள்ளது'' என்கிறார்.
கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சீரமைக்கும் அமைப்பாக 2003 இல் OSAAT பதிவுசெய்யப்பட்டது. தொடக்கத்தில் 12 தன்னார்வலர்களை மட்டுமே கொண்டிருந்த இந்த அமைப்பில், இப்போது 100-க்கும் அதிகமான தன்னார்வலர்கள் உள்ளனர்.
இந்த அமைப்பு கிராமப்புறங்களில் நிதியில்லாத, மோசமான பழைய கட்டடத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை தங்களது குழு ஆய்வின் மூலமோ அல்லது தங்களது இணைய முகவரிக்கு வரும் பொது முன்மொழிவு மூலமாகவோ தேர்வு செய்கிறது. பிறகு இந்த அமைப்பின் சில தன்னார்வலர்கள் அந்தப் பள்ளிக்குச் சென்று அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பள்ளியின் நிதிநிலை, சொத்துப் பத்திரம் போன்றவற்றை ஆய்வு செய்கின்றனர். இவை அனைத்தும் திருப்தியாக இருக்கும் நிலையில், இந்த அமைப்பு பள்ளியை சீரமைக்கும் ஒப்பந்ததாரருடனும், பள்ளி நிர்வாகத்துடனும் ஒப்பந்தம் செய்து சீரமைப்புப் பணிகளைத் தொடங்குகிறது.
இந்தத் திட்டப் பணிகள் முடிவடைந்து வளாகம் முழுவதும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, OSAAT தன்னார்வலர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பள்ளியின் பராமரிப்பு குறித்து நேரில் வந்துபார்வையிடுகின்றனர்.
இதுகுறித்து இந்த அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவரான சதீஷ் கூறுகையில், "பள்ளிகளைத் தேர்வு செய்வதிலும், மறுகட்டுமானம் செய்வதிலும் கடுமையான நடைமுறைகளை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். காரணம், பள்ளிகளின் தேவையைப் பொருத்து ரூ. 15 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை கட்டுமானங்களுக்காக செலவு செய்கிறோம். நாங்கள் தன்னார்வலர்களிடம் இருந்து பெறும் தொகையில், நிர்வாக செலவுகளை சேர்க்காமல் 100 சதவீதம் பள்ளிகளுக்கு செலவு செய்வதை உறுதிசெய்கிறோம்'' என்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் 3 திட்டப் பணிகளுக்காக OSAAT அமைப்பு ரூ. 3.3 கோடி நிதி திரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தன்னார்வலர்களை எதிர்நோக்கியுள்ள இந்த அமைப்பு, நிகழாண்டு (2019) இறுதிக்குள் 100 பள்ளிகளை புதுப்பிக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது.
இரா.மகாதேவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.