
காலச்சக்கரம் மிக வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. நாமும் அதனோடு சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த ஓட்டத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் நமக்கு ஒருவித விரக்தி ஏற்படுகிறது. என்னடா வாழ்க்கை இது? என்று புலம்பிக் கொண்டிருப்போம்.
ஏன் இந்த விரக்தி?
யார் ஒருவர் இரவு பகல் பாராது தனது பணி சிறக்க பணியாற்றுகிறாரோ அவரே இத்தகைய விரக்திக்கு பெரும்பாலும் ஆளாகிறார். அவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் சில இடங்களில் வீணாகும்போதும், அவர்களுக்கான சரியான அங்கீகாரம் பணியிடத்தில் கிடைக்காதபோதும் விரக்தி ஏற்படுகிறது.
இது தவிர, விருப்பமில்லாத துறையில் பணியாற்றுவது, பணியிடச் சூழல் ஒத்து வராதது, ஓய்வின்றிப் பணியாற்றுவது, பணியில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, பணி வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சரியான புரிதல் இல்லாதது என பல்வேறு காரணங்களால் ஒருவர் விரக்தியடைகிறார்.
இந்த விரக்தியில் இருந்து மீள்வது எவ்வாறு?
இலக்கை நிர்ணயிப்பது:
இலக்கற்று நாம் பயணிக்கும்போதே நமக்கு ஒருவித விரக்தி ஏற்படுகிறது. நாம் எதை நோக்கி பயணிக்கிறோம், நம் வாழ்க்கையின் இலக்கு என்ன என்பதை முதலில் நிர்ணயிக்க வேண்டும். அதன் பின்னர், அந்த இலக்கை நோக்கி பயணிக்கும்போது, நாம் ஆர்வத்துடன் செயல்படுவோம். நாம் பயணிக்கும் பாதையில் பல்வேறு தடைகள் வந்தாலும், விரக்தி ஏற்படாது.
வேறு வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பது:
இப்போதிருக்கும் துறை, நிறுவனம் பிடிக்கவில்லை என்றால், வேறு நிறுவனத்துக்கு மாறிச் செல்லலாம். துறை பிடிக்கவில்லை என்றால், நமக்கு எது மனநிம்மதி அளிக்குமோ, அதைத் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் நாம் வாழ்க்கையின் பாதி நேரத்தை நாம் பணியிடத்திலேயே செலவளிக்கிறோம். அந்த பணி நமக்கு பிடித்ததாகவும், திருப்தியளிப்பதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
பணியிடத்தில் சுமூகநிலையை உருவாக்குவது:
சிலர் அலுவலகத்தில் நண்பர்கள் அமையவில்லை. என்னிடம் யாரும் சரியாகப் பேசுவதில்லை என்று அற்ப காரணங்களைக் கூறிக் கொண்டு தேவையின்றி விரக்தியில் இருப்பர். நாம் அலுவலகம் வருவது பணியாற்றுவதற்காகவே தவிர நண்பர்களைத் தேடவோ, நேரம் செலவழிக்கவோ அல்ல. அதனால், சக பணியாளர் எத்தகைய நபராக இருந்தாலும், நாம் செய்யும் புன்முறுவல், அவரது முகத்திலும் பிரதிபலிக்கும். அவர்களுடன் நாம் இன்முகத்துடன் பழகும்போது, நமக்கு எந்தச் சூழலும் சரியாகிவிடும்.
கடின உழைப்பு மட்டும் போதாது:
பணி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு கடின உழைப்பு மட்டும் போதாது. சாதுர்யத்துடன் கூடிய புத்திசாலித்தனமே நம்மை உயரக் கொண்டு செல்லும். அதனால் கடினமாக உழைத்தோம்; ஆனாலும் பலனில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதை விடுத்து, எதைச் செய்ய வேண்டுமோ அதை யோசித்து செயல்படுத்த வேண்டும்.
அனுபவசாலிகளிடம் தெரிந்து கொள்ளுங்கள்:
பணியில் ஓர் கட்டத்தில் விரக்தி ஏற்படும்போது, எது செய்தாலும் பணியை சிறப்பாகச் செயலாற்ற முடியாதபோது, நம்மை விட வயதில் மூத்த அனுபவமிக்க பணியாளர்களிடம் அதுகுறித்து அறிவுரை கோரலாம். ஏனெனில் அவர்களும் நம் சூழ்நிலையைக் கடந்து வந்தவர்களாகவே இருப்பார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.