பெயர் சூட்டிய பெரியார்- கரோலஸ் லினேயஸ்! மு.கலிய பெருமாள்

இவ்வுலகின்கண் எண்ணற்ற பல உயிர்கள் இருக்கின்றன. ஒருபுறம் சின்னஞ்சிறிய கொசுப்புழுவிலிருந்து குன்றொத்த யானைகள் போன்றவை; மற்றொருபுறம் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள்.
பெயர் சூட்டிய பெரியார்- கரோலஸ் லினேயஸ்! மு.கலிய பெருமாள்
Updated on
4 min read

இவ்வுலகின்கண் எண்ணற்ற பல உயிர்கள் இருக்கின்றன. ஒருபுறம் சின்னஞ்சிறிய கொசுப்புழுவிலிருந்து குன்றொத்த யானைகள் போன்றவை; மற்றொருபுறம் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள். இன்னொருபுறம் கண்ணால் காணும் உயிர்கள்; பல வண்ணப் பறவைகள், அவற்றின் இனிய ஒலிகள்; எழில் மிகுந்த விலங்குகள், ஊர்ந்தும் விரைந்தும் அவை செல்லும் கவினுறு காட்சிகள்; அழகும் மணமும் மிக்க மலர்களைத் தூவும் மரங்கள், செடிகொடிகள் இவற்றில் பல குடும்பங்கள்; பல இனம்; பல வகை. பிறிதொருபுறம் நன்மையும் தீமையும் செய்யும் நுண்ணங்கள்(BACTERIA). இவற்றில் பல குடும்பங்கள்; பல இனம்; பல வகை. 

இவற்றையெல்லாம் உலகிலுள்ள எல்லா நாட்டு மக்களும் கண்டு ஆராய்ந்துள்ளனர். நமது நாட்டில் வாழ்ந்த பெரும்புலவர்கள் இயற்கையை நுணுகி ஆராய்ந்து தாம் கண்ட உயிர்ப்பொருட்களை வகைப்படுத்தி கூறியுள்ளனர். ஆவர்கள் வகைப்படுத்தியதில் செறிந்த நுட்பமும் ஆராய்ச்சித்திறனும் போற்றத்தக்கவையே. ஆனால் அதனை மேலும் இனப்படுத்தி உட்பிரிவுகளாகப் பிரித்து அறிவியல் அடிப்படையில் அவர்கள் ஆராயவில்லை. ஒல்காச் சிறப்புடைய தொல்காப்பியனார் நமக்கு நல்கிய தொல்காப்பியத்தில் சில கருத்துகள் வருகின்றன. அந்நூல் பொருளியலின் இறுதியில் நிற்பது மரபியல். இதில் உயிர்ப்பொருள்களின் தன்மைகளை நன்கு ஆராய்ந்து, அவற்றின் அறிவு, குணம், செயல், ஆண்பெண் பகுப்பு, அவற்றின் பெயர் வழங்கும்முறை, அறிவு முறையினால் உயிர்கள் படிப்படியாக உயர்ந்து செல்லுதல் முதலியவற்றை அளந்து கூறி அவற்றின் மன உணர்வினால் மற்றைய உயிர்களினும் உயர்வு பெற்றுள்ள மக்கட் பண்பினையும் அறுதியிட்டு உரைத்துள்ளார். உயிர்களை அவர் ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை பாகுபடுத்தி உரைக்கும் முறை இன்றைய உயிர்நூலார் உரைக்கும் பகுப்பு முறைக்கு ஒத்த ஒன்றாகும். அவை
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறிறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே 
(நூற்பா 571)
என்பனவாம். இதைவிட சிறப்பு என்னவென்றால் இந்த உயிர்கட்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுகள். 
உடம்பினால் மட்டும் அறியும் ஓரறிவுள்ள 
உயிர்களைப் பற்றி அவர், 
புல்லும் மரனும் ஓரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(நூற்பா 572)
என்று குறிப்பிடுகின்றார். தொட்டால் சுருங்கி என்று ஒரு சிறு செடியை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? கண்ணால் பார்ப்பதோடு மட்டும் நில்லாமல் கையால் தொட்டும் பார்த்திருக்கிறோம். மாப்பிள்ளை தொட்டதும் மணப்பெண் எப்படி நாணிக் கோணி முகம் கவிழ்ந்து மோனநிலை அடைவாளோ அதைப் போல் தொட்டால் சுருங்கியைத் தொட்டதும் அது தன் இலைகளை மடக்கிக் கொள்கின்றது. செடிகளுக்கு உயிர் உண்டு, அவை உடலினால் அறிவைப் பெறும் ஓரறிவு உயிர்கள் என்பதையே இச்செயல் காட்டுகின்றது. புல், மரம், செடிகொடிகள் இவையெல்லாம் ஓரறிவு உயிர்கள். 
"நந்தும் முரளும் ஈரறிவினவே 
(நூற்பா 573)
என்பது உடலினாலும் வாயினாலும் அறிகின்ற நத்தை, சங்கு , கிளிஞ்சல்கள் போன்றவற்றைக் குறிக்கின்றது. 
"சிதலும் எறும்பும் மூவறிவினவே' 
(நூற்பா 574)
உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் அறிகின்ற கரையான், எறும்பு போன்றவை மூன்றறிவுடையன.
"நண்டும் தும்பியும் நான்கறிவினவே' (நூற்பா 575).உடம்பு, வாய், மூக்கு, கண் இவற்றினால் அறிகின்ற நண்டு, தும்பி போன்ற உயிர்கள் நான்கறிவுடையன. 
"மாவும் புள்ளும் ஐயறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பை'
(நூற்பா 576)
அதாவது நாற்கால் விலங்குகளும், பறவைகளும் ஐந்தறிவுடையன. இவற்றோடு தவழ்வனவற்றுள் பாம்பு முதலியனவும், நீர் வாழ்வனவற்றுள் மீன், முதலை, ஆமை முதலியனவும் கொள்ளப்படும். 
"மக்கள் தாமே ஆறறிவுயிரே' 
(நூற்பா 577)
அதாவது, மக்கள் ஆறறிவுயிரெனப் படுவர்.
இவ்வாறு உயிர்களைத் தனித்தனி அறிவு முறை கொண்டு பகுத்துரைப்பதோடமையாது, அவ்வுயிர் வகைகளையும் இவ்விப் பெயரான் வழங்க வேண்டும் என்று வரையறுத்துக் கூறியுள்ளார். அன்றியும் அவ்வுயிர்களின் ஆண்மை, பெண்மை இயல்புகளை நன்கு நுனித்தறிந்து ஆண் வடிவாக இருப்பினும் அஃது ஆண்மையிற் திரிந்து பெண்மையியல்பாக இருக்குமானால் வடிவு பற்றிப் பகுக்காது உணர்வு பற்றிப் பெண்பாலாகப் பகுத்துணர்ப்பது இவர் தம் கூர்ந்த மதியையும் நுண்மாண் நுழைபுலத்தையும் காட்டுகின்றது. 
உலகிலுள்ள எல்லா நாட்டு மக்களும் இது போன்று ஆராய்ந்தாலும், சிறப்பாக ஐரோப்பிய மக்கள் இவற்றில் ஆழ்ந்த கவனம் செலுத்தினர்.
ஐரோப்பாவிலிருந்து வெளிநாடு சென்றவர்கள் ஆங்காங்கு தாங்கள் கண்ட செடி கொடிகளையும் பறவைகளையும் விலங்குகளையும் ஐரோப்பாவிற்குக் கொண்டு வந்தனர். அதற்கு முன் அத்தகையப் பொருள்களைக் கண்டிராத நிலையில் அவற்றைக் கண்டதும் அளவற்ற வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டனர். இவ்வாறு உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டு வந்த பொருட்களை ஓர் ஒழுங்குபடுத்தி அழகு காண விரும்புவது மனித இயல்பு அல்லவா?
எனவே ஆய்வகப் பெரியாரும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், அறிவுப் புரவலர்களும் தங்கள் சிந்தனைத் துளிகளைத் தந்தனர். அந்த பெருமுயற்சியில் ஈடுபட்ட பெரியாருள் ஒருவர் செடிகளை அவை கொடுக்கும் மலர்களின் வண்ணங்களைக் கொண்டு வகைப்படுத்தலாம் என்றார். காட்டாக, சிவப்புநிறப் பூக்களை எல்லாம் வரிசைப்படுத்தி அவற்றுக்குள் ஏதேனும் ஒருமைப்பாடும், அமைப்பில் ஒழுங்கும் இருக்கிறதா என்று காணலாம் என்றார் அவர். மற்றவர் செடிகளை அவற்றின் இலைகளின் அமைப்பிற்கேற்பப் பிரித்து வகைப்படுத்தலாம் என்றார். நீண்ட இலைகள் உள்ளவை, குறுகிய இலைகள் உள்ளவை; வட்டமான இலைகள் உள்ளவை; குழிவான (INDENTED) இலைகள் உள்ளவை எனப் பிரிக்கலாம் என்றார். இந்த முறைகளின் மூலம் அவர்கள் பலகாலம் பெரு முயற்சி செய்து ஆராய்ந்தபோதிலும் வெற்றி காண முடியவில்லை. காரணம், இந்த வகையில் அடங்காத வேறு சில செடிகளும் இருந்தன. செடிகளை வகைப்படுத்துவது போலவே விலங்குகளையும் வகைப்படுத்தி அமைக்கப் பலர் முயன்று வந்தனர். விலங்குகளைத் தடித்த மயிர் உள்ளவை என்றும், கொம்பு உள்ளவை, கொம்பு இல்லாதவை என்றும் பலமுறைகளில் வகைப்படுத்தி பிரித்தனர். ஆனால் அவர்கள் முயற்சி விழலுக்கு இரைத்த நீராயிற்று..
இது போன்றே மீன்களையும், பூச்சிகளையும் மேலோடு உள்ள உயிர்களையும் (CRUSTASCEANS) வகைப்படுத்தி பிரிக்க முயன்ற வேறு சிலரும் தோல்வியே கண்டனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்கள் எடுத்துக் கொண்ட முறைகள் அடிப்படையிலேயே தவறானவை. பொருள்களின் மேற்பரப்பில் கண்ணுக்குப் புலனானவற்றை அடிப்படையாக வைத்து வகைப்படுத்தினரேயன்றி, அவற்றின் உள் உறுப்புகளின் அமைப்புகளை அறிந்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்திலர். இந்த முயற்சி, 18 ஆம் நூற்றாண்டு வரை நடந்தது. அதன் பின்னர் தோன்றிய அறிவியலார் பொருட்களின் உள்ளுறுப்புகளைப் பகுத்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் வகைப்படுத்தினர். 
இப்படி அறிவியல் உலகம் ஒரு குழப்பத்தில் இருக்கும்போது 1707 - ஆம் ஆண்டு கார்ல் வான் லின்னி (CORL VON LINNE) என்பார் தோன்றினார். இவரே பிற்காலத்தில் கரோலஸ் லினேயஸ் (CAROLUS LINNAEUS) என்று அழைக்கப்பட்டார். ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்மாலாந்தைச் (SMALAND) சேர்ந்த ராஷல்ட் (RASHULT) என்பதே இவர் பிறந்த ஊர். இவருடைய தந்தை ஊரில் ஆடு மேய்ப்பவராக இருந்தார். எளிமையான ஒரு வீட்டில்தான் இவருடைய குடும்பம் வாழ்ந்தது. வீடு சிறியதானாலும் அது சிவப்பு வண்ணம் பூசப்பட்டு பச்சைப்புல்லால் வேயப்பட்டு அழகுற அமைந்திருந்தது. ஊரில் இருந்த மற்ற வீடுகளுக்கும் அதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. என்றாலும் மற்ற வீடுகளுக்கு இல்லாத ஒரு வாய்ப்பும் வசதியும் அதற்கும் லினேயசுக்கும் இருந்தது. அதுதான் வீட்டைச் சுற்றியிருந்த ஒரு சிறு தோட்டம். அந்தச் சிறுதோட்டமே, தான் ஓர் இயற்கை நூல் அறிஞராக ஆவதற்கு வித்தாக இருந்தது என்று பிற்காலத்தில் இவர் அடிக்கடி கூறியுள்ளார். 
பள்ளிப் பருவத்திலும் அவருடைய வாழ்வு சிறப்புடையதாக அமையவில்லை. பள்ளிப் பிள்ளைகளும் ஆசிரியர்களும் அவரின் அறிவின் ஆழத்தை உணர முடியாமல் அவரை ஒரு மக்கு என்று நினைத்தனர். 
ஒருமுறை இவருடைய தந்தை ஒரு மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தார். தந்தையுடன் சென்றிருந்த லினேயஸ் அங்கிருந்த ஒரு செடியைப் பற்றி அறிவதில் மிக ஆர்வத்துடன் இருந்தார். இதனைக் கண்ட அந்த மருத்துவர் லினேயசுக்கு இயற்கை நூல் கல்வி கற்பிக்கும்படி அவருடைய தந்தையிடம் கூறினார். 
ஆனால் ஏழ்மை நிலையிலிருந்த அவருடைய தந்தையிடத்தில் லினேயசைக் கல்லூரிக்கு அனுப்புவதற்குரிய பொருள் வசதியில்லை. என்றாலும் கல்வியின் பால் இருந்த ஆர்வத்தில் கல்லூரிப் படிப்புச் செலவிற்கு 40 டாலர் கொடுத்தார். அதற்கு மேல் வரும் செலவிற்குப் படிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் லினேயஸ் வேறு வேலை செய்து பொருள் ஈட்ட வேண்டியிருந்தது. தந்தை கொடுத்த பொருள் செல்வமாகிய 40 டாலருடன் அறிவுச் செல்வம் தேடிப் புறப்பட்டார் லினேயஸ். ஓராண்டு காலம் லண்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று பின் UPPSALA பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அக்காலத்தில் உப்சலாப் பல்கலைக்கழகத்தில் ஒலோப் ரூட்பெக் (OLOF RUDBECK) என்ற பேராசிரியரின் அரிய உழைப்பால் தாவர நூல் மிகச் சிறந்த முறையில் கற்பிக்கப்பட்டுள்ளது. 
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com