அஞ்சுவது  நன்று!:  தன்னிலை உயர்த்து! - 33

ஒரு நாள் சுவாமி விவேகானந்தர் காசியில் இருக்கும் கங்கை நதிப் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தார். அப்பொழுது சில குரங்குகள் அவரைத் துரத்தின. விவேகானந்தரின் மனதில் சிறிது பயம். நடையை ஓட்டமாக்கினார்.
அஞ்சுவது  நன்று!:  தன்னிலை உயர்த்து! - 33

ஒரு நாள் சுவாமி விவேகானந்தர் காசியில் இருக்கும் கங்கை நதிப் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தார். அப்பொழுது சில குரங்குகள் அவரைத் துரத்தின. விவேகானந்தரின் மனதில் சிறிது பயம். நடையை ஓட்டமாக்கினார். அவர் ஓடியதும் குரங்குகள் முரட்டுத்தனமாய்த் துரத்தின. மேலும் வேகமாக ஓடினார். அவர் பயந்து ஓடுகிறார் எனத் தெரிந்ததுமே மேலும் சில குரங்குகள் ஒன்று சேர்ந்து அவரைத் துரத்த ஆரம்பித்தன. இக்குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்கு வழியில்லை  என்று நினைத்து விவேகானந்தர் ஓடியபோது,  "நில்!  குரங்குகளை எதிர்த்து நில்!' என்றது ஒரு சன்னியாசியின் உரத்த குரல்.

அதைக் கேட்டதும் ஒரு புதிய ஊக்கம் பெற்றவராய் துணிவுடன் திரும்பினார் சுவாமி விவேகானந்தர். அதைச் சற்றும் எதிர்பாராத குரங்குகள் பயந்தன. மேலும், அவர்  குரங்குகளை நோக்கி முன்னேற, அவை சிதறி ஓடின. நம்பிக்கையோடு பாலத்தைக் கடந்தார் சுவாமி விவேகானந்தர். பயம் ஒரு பனித்துளி. அதன்மேல் துணிவு என்னும் சூரிய ஒளி படும்போது பயம் காணாமல் போய்விடும். 

புரிந்து கொள்ளாததால் உண்டாகும் உணர்வு, பயம். பயம் சிந்தனையின் உறை பனிக்கட்டி; முயற்சியின் முற்றுப்புள்ளி; பயத்தின் பார்வையில் கயிறுகள் பாம்பாகும்; நண்பன் தீவிரவாதியாய்த் தெரிவான்; துடிக்கின்ற இதயம் படபடக்கும். கைக்கெட்டிய வெற்றி கூட தோல்விப் பரிசாகும்; வாழ்கின்றபோதே நரகம் தெரியும். மொத்தத்தில் மனிதனைப் பலவீனப்படுத்தும். 

புரியாத பயம், ஒரு பலவீனம். நல்ல செயல்பாடுகளுக்கு முயற்சிக்கும்போது அதில் தோல்வியடைந்து விடுவோமோ என்று பயப்படுவது; எடுக்கும் முடிவு தவறாகிவிடுமோ என்பதற்காக முடிவெடுக்காமல் விடுவது, "கல்லாதது உலகளவு, கற்றது கைமண்ணளவே' என நினைத்து அவையில் பேச மறுப்பது; புறக்கணிக்கப்படுவோமோ என நினைப்பது; நிறைய தயாராக வேண்டுமென காலம் தாழ்த்துவது என மனதில் தோன்றும் பயம், பலவீனம். 

புரிந்து கொண்ட பயம், ஒரு பலம். தவறு செய்வதற்குத் தயங்குவது; தீங்கு செய்வதற்கு யோசிப்பது; ஆபத்தான செயலுக்கு அஞ்சுவது; பொய் சொல்லக் கூசுவது என உலகம் ஏற்றுக் கொள்ளாத செயல்களுக்கு தயங்கும் பயம் ஒரு பலமேயாகும்.

"நான் புனிதமற்றவற்றையும், தவறானவற்றையும் செய்துவிடுவேனோ என்ற பயத்தை தவிர வேறெந்த பயமும் எனக்கில்லை'  என்றார் சாக்ரடீஸ்.  நாம் பயப்படுவதும், பயப்படக்கூடாததும் அறிவினால் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்று திருக்குறளில் திருவள்ளுவர், அஞ்ச வேண்டிய தீங்கிற்கு அறிவார்ந்தவர்கள் அஞ்சுவர். அதனை அறியாதவர்களை  முட்டாள் என்கிறார். உண்மையில் பயத்திற்கான காரணத்தை தெளிவாகப் புரிய ஆரம்பிக்கும்போது பயம் மறையும். மனது தெளிவடையும். மனிதன் வலுப்படுவான். 

""பயம் சிறைப்படுத்தும், நம்பிக்கை விடுதலை தரும்; பயம் முடமாக்கும், நம்பிக்கை உத்வேகம் தரும்; பயம் மனமுடையச்செய்யும்; நம்பிக்கை ஊக்கப்படுத்தும்; பயம் காயப்படுத்தும், நம்பிக்கை ரணத்தை ஆற்றும்; பயம் யாருக்கும் உதவாது, நம்பிக்கை தொண்டு செய்யும்.  இவை அனைத்தையும் விட, பயம் வாழ்வை நம்பிக்கையற்றதாக்கும்; ஆனால் நம்பிக்கை கடவுளிடம் கொண்டு சேர்க்கும்''” என்கிறார் அமெரிக்க நாட்டு அறிஞர் ஹாரி எமர்சன் போஷ்டிக்.

கூடைப்பந்து விளையாட்டில் உலகின் மிகச்சிறந்தவர் அமெரிக்க நாட்டு கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டன். அவர் சண்ந்ங்ன் விளம்பரத்திற்காக பேசும்பொழுது, ""நான் ஒன்பதாயிரம் முறை பந்தினை கூடைக்குள் போடவில்லை. முன்னூறு முறை விளையாட்டில் தோல்வியடைந்துள்ளேன். இருபத்தியாறு முறை வெற்றியை நிர்ணயிக்கும் பந்தை கூடைக்குள் போடாமல் நழுவ விட்டிருக்கிறேன். எனது வாழ்க்கையில் தோல்விமேல் தோல்வியாக நிறைய தோல்வியுற்றுள்ளேன்.  அதனால்தான் நான் வெற்றி பெற்றேன்''  என்றார். ""எல்லாரும் சிலவகையில் தோல்வியடைவதால் நானும் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், முயற்சிக்காமல் அதை ஏற்றுக் கொள்ளமுடியாது''  என்றார். அதைப்போலவே, தோல்வியைச் சந்திக்க மறுக்கின்ற பயத்தினை வெளியேற்று; வெற்றிக்கான துணிவையும், தைரியத்தையும் மனதிலேற்பர், வெற்றியாளர்கள்.    திறமைகளில்லாத மனிதனே இல்லை. திறமைதான்  மனிதனின் வெற்றிப் படிக்கட்டு. திறனாளிகளிடம் தோல்வி பயம் எழும்போது தன் திறமை மீதே சந்தேகம் வலுப்படும். அதனாலேயே புதிய முயற்சியைக் கைவிடுவார். தோல்வி ஓர் அனுபவம். ஆனால், அதை அவ்வப்போது ரசிப்பவர்களுக்குத்தான் வெற்றி விளிம்புகளின் ஆனந்தம் புரியும். உலகில் மிகச்சிறந்த வெற்றியாளர்கள் தங்களின் அறுபது சதவீத முயற்சிகளில்தான் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. எனவே "தோல்வியடைந்தால் பிறர் நம்மை எள்ளி நகையாடுவார்களே' என்ற உள்ளூர பயத்தால் முயற்சிக்காமல் விடுவது தவறு. மனதிலிருக்கும் ஆராயப்படாத அச்சம்தான் முதல் எதிரி. தெளிவாகிய பின்பும், தயங்கி நிற்கும் நொடிகள்தான்  முதல் தோல்வி. 

பள்ளத்தாக்குகளும், சிகரங்களும்தான் ஒரு மலைக்கு அழகு. பள்ளத்தாக்குகள் தோல்வி என்றால், சிகரங்கள் வெற்றியின் அடையாளம். பள்ளத்தாக்குகள் இல்லையெனில் சிகரங்கள் என்பது ஏது? ஒரு சிகரத்தினை அடைவது வெற்றியல்ல. உயரிய சிகரத்தை அடைவதுதான் வெற்றி. சிகரத்தின் உச்சியிலிருந்து ஒரு சிறு பள்ளத்தாக்கைக்கூட கடக்காமல் மறு சிகரத்தினை அடைய முடியாது. எனவே, தோல்வி ஒரு பயம்; ஒரு மாயை.

பயத்தை அகற்ற துணிவைப் பெருக்குதல் அவசியம். அதனை மனதில் தினமும் உரமேற்று வளர்க்க வேண்டும்.    மகாத்மா காந்தி அவர்கள், தினசரி காலையில் ஒவ்வொருவரும் பின்வருவனவற்றை நம்முடைய முதல் செயலாக தீர்மானம் செய்தல் வேண்டும் என்கிறார். அவை: “நான் இந்த உலகத்தில் யாருக்கும் அஞ்சமாட்டேன். நான் கடவுளுக்கு மட்டுமே அஞ்சுவேன். நான் யாருடனும் பகைமை கொள்ள மாட்டேன். நான் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டேன். நான் உண்மையைக் கொண்டு பொய்மையை வெல்லுவேன் மற்றும் பொய்மையை எதிர்த்து அதனால் வரும் அனைத்து இன்னல்களையும் எதிர்கொள்வேன்” என்பதாகும். எனவே எதிர்மறை பயத்தினைக் களைந்து நேர்மறைத் துணிவினை நித்தமும் மனதில் நீர்ப்பாய்ச்சுவோம்..  

அமெரிக்க அதிபராக ஃபிராங்கிளின் ரூஸ்வெல்ட் பதவி ஏற்ற போது அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் சீரற்று இருந்தது. வேலையில்லாத் திண்டாட்டமும், வங்கிகளில் பணமின்மை போன்றவற்றால் மக்கள் தங்கள் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையின்றி பயத்துடன் இருந்தனர். இந்நிலையில் இரண்டாம் உலகப் போர் அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

""பயத்திற்கு மட்டுமே நாம் பயப்பட வேண்டும். ஏனெனில் அது இனம்புரியாத, ஆதரவற்ற, உண்மையைச் சாராததாக இருக்கிறது. மேலும், அது நம்மை முன்னேறவிடாமல் நம்மைச் செயலிழக்க வைப்பதிலேயே வல்லமை கொண்டதாக இருக்கிறது''  என்று அவர் கூறியதைக் கேட்டதும் மக்களின் பயம் அகன்று நம்பிக்கை ஒளி ஒளிர்ந்தது. உலகப்போரில் வல்லரசு நாடாக மாறியது.

பாம்பு கடித்து இறப்பதைவிட, பாம்புதான் கடித்தது என்று தெரிந்தவுடன் இறப்பதற்கு காரணம்,  பாம்பின் விஷத்தை விட கொடிய பாம்பின் மீதுள்ள பயம் தான். அதனால்தான், ஒரு கமாண்டோ பயிற்சி பெறுபவர்கள் மிகவும் கடினமான சாகசங்களைச் செய்கின்றபோது, ஒவ்வொரு சாகசத்தை எட்டும் தறுவாயிலும் “நான் ஒரு கமாண்டோ” என்று உரக்கக் கத்துவார்கள். அது அவர்களுக்கு தன்னைக் கவ்வ வருகின்ற பயத்தைப் போக்கி, நம்பிக்கையைத் தரும்.  

மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திசூடியை “"அச்சம் தவிர்'” எனத்தொடங்கி "கீழோர்க்கு அஞ்சேல்", "சாவதற்கு அஞ்சேல்', "தீயோர்க்கு அஞ்சேல்', "பேய்களுக்கு அஞ்சேல்'  என அச்சத்தின் அச்சாணிகளை முறித்தெறிந்தார். மேலும், “"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்... அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே'” என்ற வீர வரிகளை ஒவ்வொருவரின் மனதிலும் பாய்ச்சினார். இத்தகைய வரிகளே துணிவின் வரிகள். பயத்தை வேரறுக்கும் வரிகள்.

இளங்கன்று பயமறிவதில்லை. அதுபோல குழந்தைப் பருவத்தில் நாம் எதற்கும் பயப்படுவதில்லை. மனிதன் வளர வளர அறியாமை அகல வேண்டும். அறியாமையால்தான் பயம் தொற்றிக் கொள்கிறது. அப்பயத்தினை போக்க ஒரே வழி, எது நமக்கு பயம் தருகிறதோ, அதோடு இணங்கியிருப்பதேயாகும். தண்ணீரைக் கண்டு பயமெனில், தண்ணீருக்குள் குதிப்பது. இருளில் அமர்ந்து இருள் பயம் போக்குவது, ஆங்கிலத்திலேயே பேசி ஆங்கில பயத்தை அகற்றுவது, மேடைப் பேச்சின் பயம் போக்க, ஒவ்வொரு திண்ணையையும் மேடையாக்குவது என பயமுறுத்துவதோடு இணங்கியிருக்கும் பொழுது பயம் பறந்துவிடும்.

ஓர் ஆசிரமத்தில் இருந்த குருவைப் பார்க்க, அவரது பழைய சீடன் வந்திருந்தான்.  மாலை வீடு திரும்பும் நேரம் கடந்தது. வனத்தினுள் இருள் கவ்வியது. சீடனின் மனதில் பயம் கவ்வியது. எனவே குருவிடம் ""சுவாமி! எனக்கு ஒரு விளக்கினைக் கொடுங்கள்'' எனக் கேட்டு வாங்கிப் புறப்பட்டான். சற்று தூரம் சென்றதும், ""நில்!'' என்றார் குரு. சீடன் நின்றதும், குரு கையிலிருந்த விளக்கின் ஒளியை வாயால் ஊதி அணைத்துவிட்டு ""இனி புறப்படு'' என்றார். சீடன் திகைத்தான். ""சீடனே!  உன்னுள் பயமிருப்பதால்தான் விளக்கு தேவைப்படுகிறது. உள்ளத்தில் துணிவிருந்தால் விளக்கு தேவையில்லை. இதே இருளும், இதே பாதையும் இந்த வனத்தினுள் என்றுமே இருக்கும். அதில் பயணிக்கவேண்டுமெனில் துணிவு ஒன்றுதான் வேண்டும்'' என்றார். அகல் விளக்கு அணைந்து, அக விளக்கு எரிந்தது சீடனுக்கு. பயணம் அற்புதமானது.

நல்ல செயல்களுக்கு பயம், ஒரு பலவீனம்;
தீய செயல்களுக்கு பயம், ஒரு பலம்!

(தொடரும்)


கட்டுரையாசிரியர்:  காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com