

உயர்கல்வி பயில விரும்பும் பெரும்பாலான மாணவர்களின் கனவு நிறுவனமாக இருப்பது, ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Technology - IIT) ஆகும். இதில் சேர்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் மாணவர்கள் இதற்கான நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் 23 இடங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் மொத்தம் 13, 376 இடங்கள் உள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2,050 இடங்கள் அதிகம். இந்த இடங்களுக்கு நிகழாண்டு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency) தகவல்படி 9,35,741 பேர். இதில் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 2.45 லட்சம். அட்வான்ஸ் தேர்வு எழுதியோர் 1.73 லட்சம் பேர்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது மாணவர்கள் இந்த அளவுக்கு ஆர்வம் காட்ட காரணம் இல்லாமல் இல்லை. உலகத் தரம் வாய்ந்த கல்வி, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், பேராசிரியர்களுடன் தொடர்புகொள்ள, கலந்துரையாட வாய்ப்பு, ஆராய்ச்சித் திட்டங்களுக்காக அமெரிக்காவின் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், ஸ்டேன்ஃபோர்ட் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களைப் பார்வையிடும் வசதி, ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி பெறுவது, படிப்பை முடித்தவுடன் பெரும் ஊதியத் தொகுப்புடன் சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் போன்ற பல பலன்கள் உள்ளன.
இதிலுள்ள இடங்களின் அளவு ஆண்டுக்காண்டு கணிசமாக அதிகரிக்கப்பட்ட போதிலும், விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதைவிட அதிகமாகிக் கொண்டே போகிறது. போட்டி அதிகமாகிறது.
இதனால், ஐஐடி-யில் சேர்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும், கனவோடும் படித்த மாணவர்கள், அதில் சேரமுடியாத நிலையில் மனச்சோர்வு அடைகின்றனர். அவ்வாறான துடிப்புமிக்க மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு செயல்திட்டத்தை ஐஐடி - காந்தி நகர் முன்னெடுத்து வருகிறது. கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) அல்லது பொறியியல் பட்டதாரி திறனறி தேர்வுகளில் (கேட்) தேர்ச்சி பெறாத திறன்மிக்க Humanities, Engineering, Science பிரிவு மாணவர்கள் காந்திநகர் ஐஐடி-யில் சேர்ந்து பயில அது வாய்ப்பு அளிக்கிறது.
பட்டம் அல்லாத திட்டம் (non-degree programme) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு முழுநேர மற்றும் பகுதிநேரப் படிப்பை காந்தி நகர் ஐஐடி வழங்குகிறது. மாணவர்கள் தங்கள் முழு கல்வியை இங்கு பயிலவும், இந்த ஐஐடி-யின் ஆய்வகங்கள், வளாக தங்குமிடம், இணையம், நூலகம், கணினி மையங்கள், விளையாட்டு, உணவு போன்ற அனைத்து கல்வி வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளவும் இந்த நிறுவனம் அனுமதிக்கிறது.
இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், அந்த நிறுவனங்களின் அனுமதியோடு இங்கு சேர்ந்து பயிலலாம். அவ்வாறு பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் வழக்கமான பாடத்திட்டத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு ஐஐடி-யின் பட்டம் அல்லாத பாடத்திட்டம் உத்தரவாதம் அளிக்கும்.
அதோடு, பிற கல்வி நிறுவனங்களில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் முடித்த மாணவர்களுக்கு காந்திநகர் ஐ.ஐ.டி. பகுதிநேர படிப்புகளை வழங்குகிறது. இங்கு சேர்க்கை பெற்ற மாணவர்கள் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்துவதோடு, சில விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
படிப்பின் முடிவில், பட்டம் அல்லாத திட்டத்தில் பயின்ற மாணவர்கள் அடுத்து வரும் மாணவர்களுக்காக பாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிசெய்யவும் பின்னூட்டங்கள் அல்லது பரிந்துரைகளை அளிக்கலாம். பாடத்திட்டம் முடிந்ததும் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
காந்திநகர் ஐஐடியில் முழுநேர மற்றும் பகுதிநேர கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் பருவம் 1-க்கு (ஆகஸ்ட்-நவம்பர்) ஜூலை 1, பருவம் 2-க்கு (ஜனவரி-ஏப்ரல்) டிசம்பர் 1-க்குள் இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டம் குறித்து காந்திநகர் ஐஐடி-யின் இயக்குநர் சுதிர் கே ஜெயின் கூறுகையில், "ஐ.ஐ.டி-யில் பயிலும் தகுதியுடைய பிற மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவதே பட்டம் அல்லாத திட்டத்தின் முக்கிய நோக்கம். ஐ.ஐ.டி.யின் கலாசாரத்திலிருந்து கற்றுக் கொள்ள விரும்பும் மற்ற மாணவர்களுக்கு இனி JEE அல்லது கேட் தகுதி என்பது தடையாக இருக்கப் போவதில்லை. இணையவழி கற்றல் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், ஐஐடி திட்டத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் நேரடி தொடர்பு கொள்ள முடியும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே காந்திநகர் ஐ.ஐ.டி.யில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஐ.ஐ.டி. நிறுவனங்கள் பிரத்யேகமானவை என்ற கருத்தை மாற்றுவதே! அது அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே தான் நாங்கள் இந்த முயற்சியைத் தொடங்கினோம். எனினும் இப்போது கூட பலருக்கு இந்தத் திட்டம் குறித்து தெரியாது'' என்கிறார் அவர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் ஐஐடி மட்டுமல்லாமல், சட்டீஸ்கர் மாநிலம் பிலாய், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர், மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பட்டம் அல்லாத திட்டம் (non-
degree programme) செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இரா.மகாதேவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.