தன்னிலை உயர்த்து! - 48: அழிவதற்கே ஆணவம்!

தன்னிலை உயர்த்து! - 48: அழிவதற்கே ஆணவம்!

ஒருமுறை தொண்டை மண்டலத்திற்கு அருணகிரிநாதர் பயணம் மேற்கொண்டார். அவரைக் கண்டதும் வில்லிபுத்தூரார் தன்னுடன் வாதுக்கு வருமாறு அழைத்தார்.

ஒருமுறை தொண்டை மண்டலத்திற்கு அருணகிரிநாதர் பயணம் மேற்கொண்டார். அவரைக் கண்டதும் வில்லிபுத்தூரார் தன்னுடன் வாதுக்கு வருமாறு அழைத்தார். வில்லிப்புத்தூரார் தமிழ்ப்புலவராக இருந்தாலும் தனது புலமைச் செருக்கால் ஆணவம் மிகுந்திருந்தார். எனவே, தன்னைவிட சிறந்த புலவர் எவருமில்லை என்பதை நிரூபிக்க மற்ற புலவர்களை வாதுக்கு அழைப்பார். அவர்கள் தோற்றுவிட்டால் அவர்களது காதுகளை ஒட்ட அறுத்து விடுவார். அன்றும் வில்லிபுத்தூரார் எப்பொழுதும்போல் தனது கையிலே நீளமான துரட்டியை வைத்திருந்தார். அதன் நுனியிலே இருந்த பதமான வளைந்த கத்தியை அருணகிரிநாதரின் காதில் வைத்தார். ""உங்களது வாத உரையில் ஏதாவது பிழை ஏற்பட்டால்  உங்கள் காது அறுபடும்'' என்று எச்சரித்தார். 

அருணகிரிநாதர்  சிரித்துக்கொண்டே, “""எனக்கும் ஒரு துரட்டியைக் கொடுங்கள். “உங்களது வாதஉரையில் தவறிருந்தால் உங்கள் காது அறுபடும்''” என்றார். அருணகிரிநாதரின் நிபந்தனையை வில்லிபுத்தூரார் எதிர்பார்க்கவேயில்லை. அருணகிரிநாதர் வில்லிபுத்தூராரைவிட தமிழ்ப்புலமை மிக்கவர். ஆனால் அடக்கமானவர். இதனை வில்லிபுத்தூரார் அறிந்ததில்லை. வில்லிபுத்தூராரின் ஆணவத்தை அறிந்தேதான் அன்று அருணகிரிநாதர் வந்திருப்பதையும் அவர் அறியாமலிருந்தார். எனினும் போட்டி தொடங்கியது. போட்டியில் வில்லிப்புத்தூரார் தோல்வியடைந்தார். நிபந்தனையின்படி தனது காதை அறுத்துவிடுமாறு அருணகிரியாரிடம் வேண்டினார். 

ஆனால், அதற்கு அருணகிரியார், “""உங்களது காதைக் கொய்வது எனது நோக்கமல்ல, புலவர்களின் காதை அறுத்து அவமதித்து, அவர்களுக்குக் கொடுமை செய்வதை இனி நீங்கள் நிறுத்தவேண்டும் என்பதுதான் எனது நோக்கம்''” என்றார். அந்நேரத்தில் வில்லிபுத்தூராரின் காதுகள் அறுபடாமல் போனாலும் அவரது அகந்தை அறுந்து விழுந்தது. “"அகந்தையை மட்டும் விட்டுவிடு; உன் எதிரிகள் பலர் ஆயுதத்தை இழப்பர்'” என்ற தத்துவமேதை எமர்சனின் வரிகளின்படி வில்லிபுத்தூராரின்  அகந்தை அழிந்ததால் புலவர்கள் அவருக்கு நண்பர்களாயினர். அதன் பின்னர்,  வில்லிபுத்தூரார் மனம் திருந்தி தனது முழு கவனத்தை புதிய செய்யுள் வகையில் இயற்ற ஆரம்பித்தார். அது “வில்லிபுத்தூரார் மகாபாரதமாக” உருவாகியது. பழுத்த பழங்களையுடைய மரங்களும், வளர்ந்த நெற்கதிரும்  தலைசாய்ந்து பணிந்து நிற்கும்.  நிறையக் கனிகளைத் தராத வெற்று மரங்களே வளைவின்றி நிமிர்ந்து நிற்கும்.  அதைப்போல் நன்கு கல்வி பயின்றவர்கள் பணிந்து நடப்பார்.  நன்கு கற்காதவரோ எவருக்கும் தலைவணங்காது  ஆணவத்தோடு காலம் கடத்துவர்.  

ஆணவம் ஆற்றலை அழிக்கிறது. அன்பைக் குறைக்கிறது. கோபத்தைப் பெருக்குகிறது. குறைகளைப் பெரிதாக்கிப் பார்க்கிறது. தன்னை மட்டுமே பெருமையால் வியந்து பார்க்கிறது. பிறரை மதிக்கத் தயங்குகிறது. மொத்தத்தில் மனிதமாய்ப் பிறந்து மனிதத்தை மதிக்க மறுக்கிறது. ஆணவம் அழிவின் அறிகுறி.  

"பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே' என்றார் நபிகள் நாயகம். நாம் பிறப்பதற்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இந்த உலகம் இயங்கியது. நாம் மடிந்தபின் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அது இயங்கவிருக்கிறது. அதில் ஒரு மனிதனின் வாழ்வு என்பது ஒரு நூற்றாண்டு மட்டுமே. நாம் தூங்கிவிட்டால் இந்த உலகம் இயங்காமல் நிற்கப் போவதில்லை. அதேபோல் நாம் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தாலும் இவ்வுலகில் நடப்பது நடந்துகொண்டேதான் இருக்கப் போகிறது. இத்தகைய சூழுலில் என்னால்தான் இவ்வுலகில் எல்லாம் நடக்கிறது என்று எண்ணுவது  மூடத்தனமே. அத்தகைய சூழலில் இந்த உலகில் நான் தான் பெரியவன் என்று சொல்லிக் கொள்பவரைப் பார்த்து இவ்வுலகம் கட்டாயம் சிரிக்கும். அதே நேரத்தில் யார் ஒருவர் தான் உண்ணும் உணவிற்கும், உடுத்தி மகிழும் உடைக்கும், வாழ்கின்ற இடத்திற்கும், ஒவ்வொரு செயலிலும் இறைவனை அல்லது இவ்வுலகை உருவாக்கிய சக்தியைப் புகழ்கிறாரோ அந்த மனிதனை இவ்வுலகம் புகழும்.

ஆணவம் என்பது ஒரு நோய். அது மனிதனைப்  பண்பில் மிருகமாக்கும். செயலில் அரக்கனாக்கும். சுயநலத்தின் உச்சகட்டமே ஆணவம். தன்னைத்தானே வியக்கும் சிறுமைதான் ஆணவம் என விளக்கும் வள்ளுவர்கதங்காத்துக்  கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து என்ற குறளின் மூலம், "யார் ஒருவர் கடும் சினத்தை வராது தவிர்த்து, கற்க வேண்டியவற்றைக் கற்று அதன்படி அடக்கத்தோடு வாழ்கிறாரோ அவரது வீட்டினை அடைய தருமதேவதை காத்திருப்பாள்' என அடக்கத்தை பெருமைப்படுத்துகிறார். அகந்தையைக் களை எடுத்து, அடக்கத்தைப் போதித்து மாணவனைப் பக்குவப்படுத்துவதே உண்மையான கல்வியாகும்.

ஒவ்வொரு வெற்றியிலும் மனிதனின் அகத்தில் துளிர்விடும் முள்தான் அகந்தை.  அது தனது வெற்றியில் கூர்மையாகும்.  பிறர் வெற்றியடைந்தால் தனது கூரிய முள்ளினால் குத்த நினைக்கும். தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமின்றி எப்படியாவது வெற்றிப் பெற்றவரை அவமானப்படுத்தத் துடிக்கும். முடிவில் அழிக்கவும் தயங்காது.  ஆணவம் மனிதத்தின் அரக்கன்.  அது மனிதனின் பலவீனம். "அகந்தையும், சினமும் அகிம்சையை ஏப்பம் விடும் அரக்கர்கள்' என்றார் மகாத்மா காந்தி. அகங்காரம் எவரையும் வளர்த்ததாக சரித்திரமில்லை. மனிதர்களை நேசிக்கத் தெரியாதவனின் யோசிக்காத எண்ணம் தான் அகந்தை. இந்திய நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்தபோது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.  "உலகத்தில் சூரியனே அஸ்தமிக்காத நாடு'  என்று அவர் மார்தட்டிக் கொண்டதால் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்து இந்தியர்கள் சுதந்திரத்திற்காக போராடுவதை அவரால் ஏற்க முடியவில்லை.  "காந்தி' என்ற பெயர் சர்ச்சிலுக்கு எரிச்சலை ஊட்டியது.  சர்ச்சில் நம் சுதந்திரப் போராட்ட தியாகிகளை சாதாரண மனிதர்கள் என்றார். மேலும், ""சாதாரண இந்திய மக்களுக்கு, பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் துணிவைத் தூண்டி விடும் தேசத் துரோகி, காந்தி''  என்றார்.    மேலும், கர்வத்தோடு, ""காந்தி ஒரு சாதாரண வக்கீல்; இந்தியப்  பக்கிரிகளைப் போல் காட்சியளிப்பவர்;  அவர் ஒரு அரை நிர்வாண பக்கிரி போல் தோற்றமளிப்பவர். அதுபற்றிகூட நான் கவலைப்படவில்லை.  அதே அரை நிர்வாண உடையுடன், பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் பிரதிநிதியான வைஸ்ராய் வாழும் மாளிகைக்குச் செல்கிறார்.  அவருடன் சரிநிகர் சமமாக அமர்ந்து பேசுகிறார்.  இதைத்தான் என்னால் சகித்துக் கொள்ளமுடியவில்லை'' என்றார்.

இவற்றை அறிந்த ஓர் எதிர்க்கட்சி உறுப்பினர் சர்ச்சிலிடம், ""அப்படியென்றால் "நிராயுத பாணியாக நின்று போராடும் ஒற்றை மனிதரின் போராட்டத்தை வலிமை வாய்ந்த பிரிட்டிஷ் அரசால் ஏன் நசுக்க முடியவில்லை?'' என்றார். அதற்கு சர்ச்சில், ""காந்தியடிகள் கத்தியை எடுத்திருந்தால் நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன். துப்பாக்கியை எடுத்திருந்தால், நான் பீரங்கியைக் கொண்டு நசுக்கியிருப்பேன். ஆனால், அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக்கொண்டு போராடுகிறார். சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையே''  என்றார்.   ஆணவத்தை அகிம்சை என்னும் ஆயுதத்தால் அழித்தவர் மகாத்மா. ஆணவம் அழிவது உறுதி. ஆணவம் கொண்டவர்கள் ஆலயத்திற்குள் சென்றாலும், ஆண்டவனின் அருகில் செல்லமுடிவதில்லை. 

தன்னை முன்னிறுத்துவதுதான் ஆணவத்தின் முதற்படி.  ஆணவம் ஒரு தீராத பசிப்பிணி.  அதற்கு எவ்வளவு தீனிபோட்டாலும், அதன் பசி அடங்காது. ஆணவம் தீயகுணத்தின் காவல் நாய். அது எந்த நல்ல குணத்தையும் ஒரு மனிதனிடம் அண்டவிடாது.  ஆணவத்தால் உறவுகள் பிரியும்.  நட்புகள் சிதறும். மனங்கள் பிளக்கும். கர்வமானவர் சாதாரண மனிதனைப்போல் இருப்பதில்லை.  மற்றவர்கள்  மதிக்கவில்லையென்றால் அவர்கள் மகிழ்ச்சியடைவதே இல்லை.  அவரது மகிழ்ச்சி உணர்வில் இல்லை.  பிறர் மதிப்பதில்தான் உள்ளது.  

ஞானத்தில் சிறந்த துறவி ஒருவர் ஒரு நாட்டிற்குப் பயணம் செய்தார். அவரைக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவரிடம் ஆசி பெற்ற அனைவருக்கும் ஆனந்தம் கிட்டியது. இச்செய்தி அந்நாட்டு மன்னரின் காதுகளுக்கு எட்டியது.  மன்னன்  தனது படை  பரிவாரங்களுடன் துறவியைக் காணவந்தார். மன்னர் ஆசிரமத்தை அடைந்த நேரத்தில் துறவி தியானத்திலிருந்தார். கண்திறந்ததும் துறவி,  ""யார் நீங்கள்?'' என்று  மன்னரைப் பார்த்து கேட்டார்.

""மகானே! நான் தான் இந்த நாட்டினுடைய மன்னன், என்னையே உங்களுக்கு தெரியவில்லையா?''” என்றார். துறவி  புன்முறுவலோடு "" அது இருக்கட்டும், தாங்கள் வந்ததன் நோக்கம் என்ன?''  என்றார். ""நான் இந்த நாட்டிற்கே ராஜா ! என்னிடம் இல்லாத செல்வமே இல்லை. ஆனால் என்னுள் மகிழ்ச்சி இல்லை. அதனால் தான் இங்கு வந்தேன்'' என்றார் மன்னர்.

""அப்படியா? நீங்கள் இப்பொழுது போகலாம்''” என்றார் துறவி. ""மகானே! நான் எப்பொழுது வரவேண்டும்?'' என்றார். துறவி சிரித்துக்கொண்டே""நான் செத்த பிறகு வாருங்கள்'' என்றார். மன்னன் திடுக்கிட்டு, ""நீங்கள் செத்த பிறகு நான் வருவதா? அப்போது உங்களிடம் எப்படி என்னால் பேசமுடியும்?'' என்றார். துறவி மன்னரை ஏறிட்டுப் பார்த்து, “""நான் செத்த பிறகு என்பது என் மறைவுக்குப் பிறகு என்று அர்த்தமல்ல. "நான்' என்னும் உன்னுள் இருக்கும் "அகந்தையை' தவிர்த்து ஒரு சாதரண மனிதனாக வந்து என்னைக் காண்பது என்பதே''” என்றார். தனது ஆணவத்தை எண்ணி தலை கவிழ்ந்தார்  மன்னர்.  
ஆணவம் மிகுந்தால் அரக்கன்;

ஆணவம் அழிந்தால் ஆண்டவன்!

(தொடரும்)

 கட்டுரையாசிரியர்: காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com