உன்னதமான உறவு விசுவாசம்!: தன்னிலை உயர்த்து! - 37

கெளரவர்களும் பாண்டவர்களும் குருக்ஷேஷத்திரப் போருக்கு தயாராகின்ற நேரம். போரில் கர்ணன் நாகாஸ்திரத்தைப் பயன்படுத்தி பாண்டவர்களின் உயிரைப் பறிக்க திட்டமிட்டார்.
உன்னதமான உறவு விசுவாசம்!: தன்னிலை உயர்த்து! - 37

கெளரவர்களும் பாண்டவர்களும் குருக்ஷேஷத்திரப் போருக்கு தயாராகின்ற நேரம். போரில் கர்ணன் நாகாஸ்திரத்தைப் பயன்படுத்தி பாண்டவர்களின் உயிரைப் பறிக்க திட்டமிட்டார்.  இதனை அறிந்த கிருஷ்ணர், குந்திதேவியிடம் சென்று, கர்ணன் உங்களது மகன் என்ற உண்மையைக் கூறி "கர்ணனை பாண்டவர் பக்கம் அழைத்து வாருங்கள்' என்றார். அதன்படி குந்திதேவியும் கர்ணனின் அரண்மனைக்குச் சென்றார். 

அங்கு குந்தியோ தனது தாய் என்பதை உறுதி செய்த கர்ணண் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தார். அப்பொழுது குந்திதேவி, "மகனே! நீ தான் எனது மூத்த மகன். சூரிய பகவான் அருளால் கிடைத்த குழந்தை. உனக்கு பணிவிடை செய்ய உனது தம்பியர் ஐவரும் காத்திருக்கிறார்கள். நாட்டை ஆளும் உரிமை உனக்கே. ஆதலால் வா! பாண்டவர் ஐவரல்லர்.  ஆறு பேர் என்பதை நிரூபி' என்று பாண்டவர்கள் பக்கம் போரிட அழைத்தார்.

கர்ணன் அன்பில் வயப்பட்டிருந்தாலும், விசுவாசம் அவரது மனதில் பீறிட்டது. "தாயே!  என்னைப் பெற்ற மறுகணமே அனாதையாக கங்கை ஆற்றில் மிதக்க விட்டீர். தேரோட்டியின் மகன் என்றும், அனாதை என்றும் பீஷ்மர் முதல் அனைவரும் என்னை ஏளனமாய்ப் பேசினர். அந்நேரத்தில் கர்ணன், தேரோட்டியின் மகன் அல்ல, எனது நண்பன். எனது அங்கத நாட்டிற்கு மன்னன் என்று முடிசூட்டினான் துரியோதனன். அன்னையே! ஓர் அனாதைக்கு ஆட்சியைத் தந்தவன்,  என் அல்லல் தீர்த்தவன், என் உடலில் ஓடும் குருதிக்கு உணவு தந்தவன் துரியோதனன். அவனது செஞ்சோற்றுக் கடன் தீர்க்க அவனுடன் இருப்பதுதான் தருமம், அதுதான் நியாயம்' என்று அன்னையின் அன்பை விட விசுவாசத்தை முன்னிறுத்தினார் கர்ணன். சகவாசம் சரியில்லை என்றாலும், விசுவாசத்தில் விஞ்சி நின்றார் கர்ணன். 

விசுவாசம், முழுமையான ஈடுபாடு கொண்ட நட்பு, பாசம் இணைந்த ஓர் உறவு. மனித குணங்களில் ஓர், உன்னதமான குணம். விசுவாசம் என்னும் விதை ஒரு மனிதச் செடியில் தனிமனித ஒழுக்கத்தை ஆணி வேராக்கி, நேர்மை என்னும் இலைகளைப் படரச் செய்து, அழகிய குடும்பம் என்னும் மலரினால் இப்பூமியை அழகாக்கும்.

ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் வாழ்ந்தவர் ஈஸாபூரோ யுனவ். அவர் ஹச்சிகோ என்னும் நன்றியுள்ள நாயினை வளர்த்தார். ஈஸிபூரோ தினமும் டோக்கியோ ரயில் நிலையத்தில் ரயிலேறி பணிக்குச் செல்வார். தினமும் அவரது அன்பு நாயும் அவரோடு ரயில் நிலையத்திற்கு வந்து அவரை வழியனுப்பும். மாலையில் பணி முடித்து திரும்பும்போது அவரை அழைத்துச் செல்ல ஆவலாய் வந்து நிற்கும். ஒரு நாள் அவர் பணியின்போது மாரடைப்பால் இறந்துபோனார்.  நாய் ஹச்சிகோ இதை அறியவில்லை. அன்று ரயில் நிலையத்தில் காத்திருந்தது. தனது எஜமானருக்காக நீண்ட நேரம் காத்திருந்து அவர் வராதது கண்டு ஏமாற்றமடைந்து வீட்டிற்குச் சென்றது.  

அதன் பின்னர் தொடர்ந்து பத்து வருடங்கள் அந்த ரயில் நிலையத்திற்கு காலையிலும், மாலையிலும் வந்திருந்து தனது எஜமானரின் வருகைக்காக ஏங்கி காத்திருந்தது. அது ஒரு நாள் இறந்து உடலளவில் மறைந்தது. ஹச்சிகோவின் விசுவாசத்தை அறிந்த ஜப்பான் அரசு டோக்கியோ ரயில் நிலையத்தில் அதற்கு ஒரு சிலை எழுப்பி உயிர்தந்தது.  

"நாம் கொடுக்கும் எலும்புகளுக்காகவும், உணவுகளுக்காகவும் தான் நாய்கள் வாலை ஆட்டுகின்றன என நினைப்பது தவறு. அவை, நம்முடைய அன்புக்காக மட்டுமே அதன் விசுவாசத்தைக் காட்டுகின்றன' என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர், டாக்டர் ஸ்டான்லிகேரரன். அதனால்தான் உறவின் பிரிவைக் காட்டிலும், தனது செல்ல நாயின் பிரிவிலிருந்து சிலரால் எளிதில் வெளிவர முடிவதில்லை. 

அருளும், பொருளும் நிறைந்தது இவ்வுலகம். இதில் பொருளினை மட்டுமே வாழ்க்கையென்று நினைப்பவர்கள் மனதில் அன்பும் நன்றியும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறது. அவர்களுக்கு தன்னை வளர்த்த நிறுவனத்திற்கு ஆண்டாண்டு காலம் உழைப்பது என்பது அடிமைத்தனம் என்கிற எண்ணம். அவர்கள் நேற்றையைவிட இன்று அதிகம் பணம் தரும் நிறுவனங்களுக்கு எவ்வித குற்ற மனமுமின்றி பயணிக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதனால்தான் சுன் சீ என்னும் சீன நாட்டு அறிஞர், "மனிதர்களிடம் பேராசையும், பொறாமையும், வெறுப்பும் மேலோங்கி நிற்கும்போது அவர்களிடமுள்ள விசுவாசமும், தன்னம்பிக்கையும் தகர்ந்து விடுகிறது' என்றார்.

அன்னையின் பார்வைக்கு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஏங்கி நிற்பது விசுவாசம். அஃதின்றேல் அது அன்னையின் தாய்ப்பாலுக்கு ஆவின் பாலின் விலையோடு கணக்கு போடும். அண்ணனும் தம்பியாய் ஒட்டி உறவாடி வாழ்ந்ததை நினைத்து உள்ளம் பொங்குவது விசுவாசம். இல்லையேல், ஒற்றையடி வரப்புக்காக கூடப்  பிறந்தவரை  ஓங்கி வெட்டத் துடிக்கும். 

கணவனும், மனைவியும் தங்களுக்குள் "எனக்காக அவள், அவளுக்காக நான்' என்ற ஒற்றைத் தாரக மந்திரத்தோடு பயணிக்கும்போது விசுவாசம் வேர்விடுகிறது.  மேலும், ஒருவரின் குறைகளைக் கணக்கிலெடுக்காமல் நிறைகளை உயர்த்திப் பார்க்கின்றபோது விசுவாசம் ஆலமரக்கிளையாய் அக்குடும்பத்தினைக் தாங்கி நிற்கும். தனக்கு விளையாடத் தெரியாவிட்டாலும், தங்களது குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டினை ஊக்குவித்து விளையாடுவதற்கு துணை நிற்கும் பெற்றோர்கள் விசுவாசத்தினை குழந்தைகளுக்குள் விதைப்பவர்கள். 

உண்மையில் விசுவாசம் என்பது மனம் சார்ந்தது. அது பணத்திற்கும் ஆசைக்கும் அப்பாற்பட்டது. தனக்கு நன்மை செய்தவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்ய எதிர்பார்க்கும், தனக்கு கிடைத்ததில் ஏதோ ஒரு பங்கைக் கொடுத்தோ, பணத்தினைத் தந்தோ, ஒரு பரிசளிப்பையோ கொடுத்து சமப்படுத்த நினைக்காது. அது எப்படியாவது தனது உன்னத குணத்தை வெளிக்கொணரத் துடிக்கும்.  

"நாடு உனக்கு என்ன செய்தது என்பதைவிட, நாட்டிற்காக நான் என்ன செய்தேன்?' என்ற அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடியின் வரிகள் விசுவாசத்தின் ஆணிவேர். பதினாறாம் நூற்றாண்டில் மகாரானா சங்கராம் சிங்கின் பணிப்பெண்ணாக இருந்தவர் பண்ணா தாய். அவர் சங்கராம்சிங்கின் மகனான உதய்சிங்கையும், அதே வயதிலிருந்து அவளின் குழந்தையையும் வளர்த்து வந்தாள். இளவரசனான விக்கிரமாதித்யனை சிரச்சேதம் செய்து, பண்ணா தாயின் வசமிருந்த குழந்தையான உதய்சிங்கை கொல்ல எத்தனித்தனர் கயவர்கள்.

இதையறிந்த பண்ணாதாய் தனது குழந்தைக்கு இளவரசனின் ஆடைகளை அணியச் செய்து, அரண்மனையில் வைத்தாள். இளவரசனை ஒரு கூடையில்,  வைத்து தப்பிக்க வைத்தாள். 

அதே நேரத்தில், அரசனின் அந்தப்புரத்தில் நுழைந்தவர்கள், "இளவரசன் எங்கே?' எனக் கேட்க, தனது குழந்தையின் இருப்பிடம் நோக்கி கை நீட்டினாள். தனது குழந்தை அழிந்தால்  அது தனக்கு மட்டும்தான் இழப்பு, இளவரசு இறந்தால் அது நாட்டிற்கே இழப்பாகும் என்பதால், தன்னை வளர்த்த மண்ணிற்காக தனது விசுவாசத்தினை வெளிக்கொணர தனது குழந்தையை தன் முன்னே துடிக்க துடிக்க கொல்வதையும் பொறுத்துக் கொண்டார். தேசப் பற்றிற்கும், விசுவாசத்திற்கும் பண்ணாத்தாய் ஓர் அற்புதமான சான்று. 

அன்பு, பரிவு, நேர்மை, பணிவு, வாக்குத் தவறாமை போன்ற ஆரோக்கியமான பண்புகள் ஒரு மனிதன் மீது நம்பிக்கையை உருவாக்கும். இத்தகைய பண்புகளை அடிக்கடி வெளிப்படுத்துகின்றபோது அவர் மீது நம்பிக்கை பன்மடங்காகும். அத்தகைய மனிதரோடு பழகிக் கொள்வதற்கும், அவர் இட்ட பணியைச் செய்வதற்கும் மக்கள் விரும்புவர். நல்ல இனிமையான சொற்களும் விசுவாசத்தை உருவாக்கும் ஒரு காரணியே.

"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்'    

என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துபவர் சொல்லும் பணியினைச் செய்வதற்கு இந்த உலக மக்கள் காத்துக் கொண்டிருப்பர்.  

மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ அதை நாம் பிறருக்குச் செய்தால் விசுவாசம் தழைத்தோங்கும். நம்மோடு இல்லாதவர்களிடம் நாம் காட்டும் விசுவாசம் நம்முடன் இருப்பவர்களுக்கு நம்மீது நம்பிக்கையை வளர்க்கும். 

மாறாக, பொய் பேசுதல், ஏமாற்றுதல், கோபப்படுதல் போன்ற பண்புகளால் நம்பிக்கை இழப்பதோடு விசுவாசமும் அழிந்து போகும்.  

விசுவாசத்தை இழப்பவர்கள் வெளவால்கள் போன்றவர்கள். பழங்கதையில் ஒருமுறை பறவைகளுக்கும்,  விலங்குகளுக்கும் சண்டை மூண்டது. பறவைகள் ஜெயித்தபோது  அவைகளோடு இருந்த வெளவால்கள், விலங்குகள் ஜெயித்தபோது விலங்குகளோடு சேர்ந்து கொண்டது. இவ்வாறு பறவைகளோடும், விலங்குகளோடும் மாறி மாறி தங்களை இணைத்துக் கொண்டதால் கடைசியில் பறவைகளும் வெளவால்களை ஏற்றுக் கொள்ளவில்லை. விலங்குகளும் உடன் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆதலால்தான், பறவை வடிவில் ஒரு விலங்கினப் பாலூட்டியாக வெளவால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வெளவால்களைப் போலவே விசுவாசத்தை இழப்பவரும் தனிமைப்படுத்தப்படுவர். 

விசுவாசம் மறைகின்றபோது வீதிக்கு வந்துவிடுகிறது மனித உறவுகள். அமெரிக்க நிறுவனங்கள் தங்களது அரை சதவீத வாடிக்கையாளர்களை ஐந்து ஆண்டுகளில் இழந்து வருகின்றனர்.   நிறுவனத்திற்கு நிறுவனம் தாவும் மனிதர்களால் அரை சதவீத பணியாளர்களை நான்கே ஆண்டுகளில் நிறுவனங்கள் இழக்கின்றன. இணையங்களில் நடக்கின்ற வர்த்தகப் பரிவர்த்தனைகளில் மனித இதயங்கள் இணையாமலேயே போய்விடுகின்றன. மொத்தத்தில் விசுவாசம் மலிந்து வாய்ப்பு கிடைக்கின்றபோது மற்றவர்களை ஏமாற்றிவிடும் பழக்கத்தால் தவித்துக் கொண்டிருக்கிறது வணிகம். 

அழிவோம் எனத் தெரிந்தாலும் அன்பிற்காகவும், நன்றிக்காகவும் தனது உயிரையே விடத்துணிவதே  விசுவாசம். இலங்கையில் ராமனின் படைகள் முன்னேறித் தலைநகரை அடைகின்றன. தூங்கிக் கிடந்த கும்பகர்ணனை சிங்கரர்கள் எழுப்பினர். செய்தியறிந்து அச்சிறுமாமலை மனிதனான கும்பகர்ணர் அரண்மனை அடைந்தான். அண்ணன் இராவணனிடம், "நீங்கள் சீதையை விட்டுவிடுங்கள்'  என நல்மொழி கூறினான். அது இராவணனுக்குப் பிடிக்கவில்லை. "போருக்கு முன்னே நீ செல்கிறாயா? இல்லை நான் செல்லவா?' என்று கேட்க, அண்ணா "நான் போகிறேன்' என்று கிளம்பினான் கும்பகர்ணன்.  
வாசல்வரை வந்தவன் திரும்பினான். அண்ணனை நோக்கி, "அண்ணா! உன்னை ஒருமுறை கட்டி ஆரத்தழுவ வேண்டும் போல் உள்ளதே?' என்ற அன்பினால் பாச மழை பொழிந்தான். இராவணன் ஓடிவந்து கும்பகர்ணனைக் கட்டிக் கொண்டான். "தம்பி! போருக்குச் செல்லும்போது  போகிறேன் என்று சொல்லாதே,  போய் வருகிறேன்   என்று சொல்' என்றான்.  

"அண்ணா! நான் போர் புரியச் செல்வது வேறு யாருடன் என்றாலும் போய் வருகிறேன் என்று சொல்லியிருப்பேன். ஆனால் நான் போரிடத் துணிந்ததோ, தர்மத்தினைத் தாங்கி நிற்கும் ராமபாணத்தை எதிர்த்து. அதை நான் எப்படி வெல்லமுடியும்?' என்று கூற, இராவணனுக்கு கண்ணீர்துளிகள் மட்டுமே வார்த்தைகளாயின. 

தன்னை வளர்த்த அண்ணன் தவறு செய்தபோதும், "ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியதம்மா' என்ற கம்பனின் வரிகளுக்காக போரிலே தனது உயிரை மண்ணுக்கு இரையாக்கி விசுவாசத்தை விண்ணிற்கு உயர்த்தி நின்றான் கும்பகர்ணன். 

அற்புதமான உணர்வு நன்றி!!
உன்னதமான உறவு விசுவாசம்!!

(தொடரும்)

கட்டுரையாசிரியர்:  காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com