
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) கீழ் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-ஐஐ (நேர்முகத் தேர்வு பதவிகள்(குரூப்-2) மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் (குரூப்-2 ஏ))-இன் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் இப்போது புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால், போட்டித் தேர்வு எழுதுபவர்களிடையே தேவையற்ற அச்சமும், குழப்பமும் நிலவி வருகிறது. தேர்வில் வெற்றி பெறுவதற்கு பெரும்பாலானோர் ஆயுதமாகக் கருதி வந்த மொழித்தாள் நீக்கப்பட்டதே இந்த அச்சத்துக்கும், பதற்றத்துக்கும் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மொழித்தாள் நீக்கப்பட்டதால், கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளியில் பயின்று போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவோருக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் வலம் வருகின்றன. இதனால் படிப்பதில் கவனத்தை செலுத்த இயலாமல், போட்டித் தேர்வு எழுதுபவர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றுதான். இந்தப் பாடத்திட்டமும், தேர்வு முறையும் அனைவருக்கும் புதிதாகவே இருக்கும். பல ஆண்டுகளாகப் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வந்தவர்கள், புதிதாக போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள நினைப்பவர்கள் என அனைவருக்கும் குரூப்-2 தேர்வு அறிவிக்கை வெளியானவுடன் தேர்வுக்குத் தயாராகுவதற்கு மிகக் குறுகிய காலமே இருக்கும். அதனால், அரசுப் பணி பெற விரும்பும் அனைவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாகவே உள்ளது. இந்த குறுகிய காலத்தில் யார் ஒருவர் முயற்சி செய்து அயராது படிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பணி வாய்ப்புண்டு.
புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை:
முந்தைய தேர்வு முறையின்படி குரூப்-2 பணியிடங்களுக்கு மட்டுமே முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன. ஆனால் தற்போது குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய இரண்டு பணிநிலைகளுக்கும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டமாக தேர்வுகள் நடைபெறவுள்ளன. அதனால், பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் தற்போது சிறிது ஏமாற்றமடைந்துள்ளனர். குரூப்-2 முதல்நிலைத் தேர்வு மற்றும் குரூப்-2ஏ-க்கு கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 100 வினாக்கள் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழிப்பாடப் பகுதியில் இருந்து கேட்கப்பட்டன. மீதம் உள்ள 100 வினாக்களில் 75 வினாக்கள் பொதுஅறிவு பகுதியில் இருந்தும், 25 வினாக்கள் நுண்ணறிவுத் திறன் (Aptitude and Mental Ability) பகுதியில் இருந்தும் கேட்கப்பட்டன.
தற்போது மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதால், பொது அறிவு பகுதியில் இருந்து 175 வினாக்களும், நுண்ணறிவுத் திறன் பகுதியில் இருந்து 25 வினாக்களும் கேட்கப்படவுள்ளன. இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி அதிகார பூர்வ வலைதளத்தில் (http://www.tnpsc.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு அதை மட்டும் பயின்றாலே நிச்சயம் வெற்றி பெற முடியும். முதல்நிலைத் தேர்வு, கொள்குறி வினாக்கள் வடிவிலும், முதன்மைத் தேர்வு விரிவாக எழுதும் தேர்வாகவும் நடத்தப்படவுள்ளது. அதையடுத்து குரூப்-2 பணியிடங்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
முதல்நிலைத் தேர்வு:
முதல்நிலைத் தேர்வுக்கு, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்திய புவியியல் அமைப்பு, இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள், தமிழக நிர்வாக அமைப்பு, நுண்ணறிவுத் திறன் என 10 அலகுகளாகப் பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தில் இருந்து கொள்குறி வினா வடிவில் கேள்விகள் கேட்கப்படவுள்ளன.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ்நாடு பாடநூல்களைக் கொண்டு, டிஎன்பிஎஸ்சி கொடுத்துள்ள பாடத்திட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதில் கொடுக்கப்பட்ட பகுதிகளைத் தெளிவாக ஆழமாக படிப்பது முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். பள்ளி பாடநூல்கள் மட்டுமே பயில்வதாலும், தேர்வில் வெற்றி பெற இயலாது. நடப்பு நிகழ்வுகளுக்கு அன்றாட செய்தித்தாள்கள், பொது அறிவு பகுதிக்கென சில புத்தகங்கள், பாடத்திட்டம் தொடர்பான மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக, மாதங்களாக போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்தவர்கள் இந்தப் பகுதிகளை ஏற்கெனவே படித்திருப்பார்கள். முந்தைய பாடத்திட்டத்தில் மொழித்தாள் இருந்ததால், பொது அறிவுப் பகுதியில் சிலர் குறைவான கவனம் செலுத்தியிருக்கலாம். புதிய பாடத்திட்டத்தில் தமிழக வரலாறு, பண்பாடு, திருக்குறள் உள்ளிட்டவையே கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால், இதில் அச்சமடைய ஒன்றுமேயில்லை. நாம் ஏற்கெனவே படித்து தெரிந்து கொண்ட பாடப் பகுதிகளை தற்போது சற்று ஆழமாகப் படித்தாலே போதுமானது. அதனால் புலம்பிக் கொண்டு நேரத்தை வீணடிக்காமல், காரியத்தில் கவனம் செலுத்துவது சிறப்பு.
முதன்மைத் தேர்வு:
போட்டித் தேர்வு மூலம் அதிகாரிகளாக, உதவியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வர்கள், எழுத்துத் திறமையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி கருதுவதில் தவறொன்றுமில்லை. முதன்மைத் தேர்வில், தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் ஆகிய இரண்டும் சேர்ந்துள்ள பகுதிக்கு மட்டும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதியில், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பில் இருந்து விரிவாக்கம், திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல், அலுவல் சார்ந்த கடிதம் வரைதல் ஆகியவை உள்ளன. இரண்டாவது பகுதி முழுவதையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மட்டுமே எழுத வேண்டும்.
அலுவல் சார்ந்த கடிதம் வரைதல் தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளுக்கும் பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பகுதிகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி படித்து பயிற்சி பெறும்போது, மொழிபெயர்த்தல் எளிதாகிவிடும். தொடக்கத்தில் சற்று கடினமாக இருந்தாலும், 10 நாள்கள் பயிற்சி எடுத்தால் அவை மிகவும் எளிதாகத் தெரியும். அத்துடன், நாளிதழ்களில் வரும் செய்திகளை, ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒரே செய்தி எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை படித்தும் பயிற்சியைத் தொடங்கலாம்.
இந்த மொழிபெயர்த்தல் பகுதிகள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் குடிமைப் பணித் தேர்வுகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. அதனால், யுபிஎஸ்சி மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு பயிற்சி செய்யலாம்.
திருக்குறள்:
புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் பகுதி சேர்க்கப்பட்டுள்ளதால் போட்டித் தேர்வு எழுதுபவர்களில் சிலர், 1,330 திருக்குறள்களையும் எவ்வாறு படிப்பது என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர். திருக்குறள் அனைத்தையும் மனப்பாடமாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று பாடத்திட்டத்தின் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. உலகப் பொதுமறை (திருக்குறள்), மனித வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, அதிலுள்ள தத்துவக் கோட்பாடுகள், உலகுக்கு திருக்குறள் கூறும் தத்துவங்கள், தகவல் உள்ளிட்டவை குறித்தே கேள்விகள் கேட்கப்படும்.
அதனால் 1,330 குறள்களையும் படிக்க வேண்டும் என்று அச்சமடையாமல், திருக்குறளின் சாராம்சங்களைப் பயில்வது போதுமானதாக இருக்கும். திருக்குறளின் சில சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும்போது, அதற்கு தேவையான குறள்களை எடுத்துக்காட்டாகக் கூறினால் மட்டும் போதும். திருக்குறளை ஆங்கிலத்தில் எழுதலாமா என்றும் தேர்வர்கள் மனதில் கேள்விகள் உள்ளன. திருக்குறளை ஆங்கிலத்தில் கற்பதற்கும் புத்தகங்கள் உள்ளன. அவற்றைப் படித்தும் பயன்பெறலாம்.
நேர்முகத் தேர்வு
குரூப்-2 தரத்தில் உள்ள சில பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில், போட்டித் தேர்வர்கள், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா? என்பது மட்டுமே முக்கியமாக சோதிக்கப்படும். அதுமட்டுமன்றி, முதன்மைத் தேர்வுக்கு பின்னர், நேர்முகத்தேர்வுக்கு தயாராவதற்கு போதிய கால அவகாசம் இருக்கும்.
போட்டித் தேர்வுக்குத் தயாராவதற்கு இணையதளங்கள் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. அதனால், அனைத்து யு டியூப் வீடியோக்களையும் பார்த்து அச்சமடையாமல், ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வுக்கு ஆயத்தமாக வேண்டும்.
முதன்மைத் தேர்வின் பாடத்திட்டம் குறித்து கவலைப்பட்டுக் கொண்டு, முதல்நிலைத் தேர்வில் கவனம் செலுத்தாமல் பலர் உள்ளனர். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். அதுமட்டுமன்றி, முதன்மைத் தேர்வுக்கான பாடத்திட்டம் அனைவருக்கும் புதிதே. அதனால், முதல்நிலையில் வெற்றி பெற ஆயத்தமாக வேண்டும்.
தேவையற்ற அச்சத்தையும், குழப்பத்தையும் நீக்கிவிட்டு, பாடத்திட்டத்தில் முழுகவனம் செலுத்தி தேர்வுக்கு தயாராகுங்கள்...பரீட்சைக்கு நேரமாச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.