கற்பனை அறிவின் அழகு! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

கற்பனை அறிவின் அழகு! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

ஒரு நாள் இராமநாதபுரம் மாவட்ட பாம்பன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

தன்னிலை உயர்த்து! 38
ஒரு நாள் இராமநாதபுரம் மாவட்ட பாம்பன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அது விமானத்தைப் பற்றிய பாடம். பாடத்தை நடத்தி முடித்துவிட்டு மாணவர்களிடம், "விமானம் எப்படி வானில் பறக்கிறது என்பதைப் பற்றி சரியாக புரிந்து கொண்டீர்களா?' என்று கேள்வி கேட்டார். வகுப்பில் நிசப்தம் நிலவியது. மாணவர்களுக்குப் புரியவில்லை என்பதை ஆசிரியர் புரிந்து கொண்டார். அவரது வகுப்பறை நேரம் முடிந்ததால், மாலையில் உங்களுக்கு நான் மீண்டும் பாடம் நடத்துகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினார். 
அன்று மாலை மாணவர்களை அந்தப் பள்ளிக்கூடத்திற்கு அருகாமையில் இருந்த கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். கடற்கரையில் மாணவர்களை நிற்க வைத்து, கடலிலும் கரையிலும் மீன்களை கொத்தித் தின்ன வந்திருந்த பறவைகளை உற்று நோக்கச் சொன்னார். பறவைகள் கால்களால் சிறிது தூரம் நடந்து சென்று, பின்னர் அவற்றின் இறக்கைகளை மேலும் கீழும் அழுத்தி பறப்பதை, விமானம் ஓடுதளத்தில் இருந்து வானத்தை நோக்கி பறப்பதைப் போல் வர்ணித்தார். பின்னர், பறவை தனது வாலை அசைப்பதன் மூலம் அது செல்ல வேண்டிய திசையை நோக்கிச் செல்வதை கூர்ந்து கவனிக்கச் செய்தார். 
பாம்பன் கடற்கரை மணலில் அத்தனை மாணவர்களும் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் மட்டும் அந்த பறவைகள் போலவே விமானத்தில் பயணமானான். அவனது எண்ணங்களெல்லாம் அந்த விமானத்தை ஓட்டுகின்ற ஒரு விமானி போல தன்னை சித்திரித்துக் கொண்டான். அவனது கற்பனை உலகில் அவன் ஒரு விமானி. அந்தக் கற்பனையை, ஒரு ராக்கெட் விஞ்ஞானியாகி நிறைவேற்றினான். தனது தள்ளாத வயதிலும் சுகாய்}30 ரக விமானத்தில் விண்ணில் ஒரு சிட்டுக் குருவி போல் மேலும் கீழும் பறந்து மகிழ்ந்தார். "அனைத்துமே கற்பனைதான். கற்பனைதான் வாழ்க்கையில் வரப்போகும் வசந்தங்களின் முன்னோட்டம்' என்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வரிகளுக்கேற்ப தனது கற்பனையால் வாழ்வின் சிகரம் தொட்டவர் நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். அவர், தான் உயர்ந்ததோடு இந்தியர் ஒவ்வொருவரும் உயரவேண்டுமென்பதற்காக "கனவு காணுங்கள்' என்று அறைகூவல் விடுத்தார்.
கற்பனை, சிந்தனையின் தனித்தன்மை; ஒரு மகாசக்தி; அது வளமான வாழ்விற்கு அஸ்திவாரம். கற்பனைதான் இந்த உலகின் வளர்ச்சி. அது ஒரு நிஜமில்லாத நிஜம்; நிழலைப் போன்ற ஓர் உண்மை. கற்பனைத் திறன் முன்னேற்றங்களுக்கு அடிப்படையான திறன்; இந்த உலகையே ஆட்சி செய்கின்ற திறன். கலைஞர்களிடமும், அறிஞர்களிடமும், சாதனையாளர்களிடமும் உருவாகும் கருதான் கற்பனை.
அமெரிக்க நாட்டின் பிரபல கல்வி நிபுணர் ப்ரெஸ்காட் லெகி என்பவர்"மனிதன் தோல்வி அடைவதற்குக் காரணம் அவனது கற்பனையில் தோல்வி சித்திரத்தைக் காண்பதுதான்' என்கிறார். தோல்வி பற்றிய கற்பனை மனத் தடைகளை ஏற்படுத்தி நிச்சயம் தோல்விக்கு வழிவகுக்கிறது. மாறாக வெற்றியடைவது போல் கற்பனை செய்து, அதற்காக உயிருள்ள மனச்சித்திரங்களை உருவாக்கி, அதனை அகக் கண்களிளே தினமும் காணும்போது வெற்றி நிச்சயமாகிறது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தினுடைய புகழ் பெற்ற உளவியலாளர் வில்லியம் ஜேம்ஸ், "உலகில் நடைபெற்ற சரித்திர நிகழ்வுகளெல்லாம் கற்பனைச் சித்திரத்தின் மூலம்தான் அரங்கேறியிருக்கின்றனஎன்பதை இந்த உலகம் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது' என்றார். ஆம்! இந்த உலகில் நித்தமும் நம்மை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் கின்னஸ் சாதனைகள் அனைத்தும் இதற்குச் சான்றுகள்.
கற்பனை வளம் கொண்டவர்கள், அறிவுத்திறன் மிக்கவர்கள். ஆக்கப்பூர்வமான கற்பனை வளத்தை விரிவுபடுத்துகிறவர்கள், வாழ்வில் நம்பிக்கையானவர்கள். 
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
என்ற தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப ஒரு மனிதனின் மனதில் உருவாகும் கற்பனை வளத்திற்கேற்ப ஒரு மனிதரின் வாழ்க்கை உயர்கிறது. 
கற்பனை என்பது வெறுமனே பெரிதாய்ச் சிந்திப்பதல்ல. சவால்களும், பிரச்னைகளும் கண்முன்னே நிற்கின்ற பொழுது அவற்றைத் தகர்த்தெறிந்து, அவற்றைத் தாண்டி பயணிப்பதைப் பற்றி கற்பனை செய்வதாகும். ஒரு முறை அமைச்சர் பீர்பால் அக்பரின் அரசவைக்குள் நுழைந்தார். அப்பொழுது அக்பர் அனைவர் முன்னிலையிலும் "நான் இப்பொழுது ஒரு கோடு வரைகிறேன். அதனை அழிக்காமலே யாராவது அதைச் சிறியதாக்க முடியுமா?' என்று கேட்டார். இருக்கின்ற கோட்டினை அழிக்காமலே எப்படிச் சிறியதாக்க முடியும்? என்று மற்றவர்களெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தபோது, மன்னர் வரைந்த கோட்டிற்கு அருகிலேயே மற்றொரு பெரிய கோட்டினை வரைந்தார் பீர்பால். "மன்னரே! இப்பொழுது தாங்கள் வரைந்த கோடு சிறியதாகிவிட்டதா?' என்றார். "இது எப்படி சாத்தியமானது?' என்ற அக்பரின் கேள்விக்கு, மன்னா! மற்றவர்களெல்லாம் கோட்டினைப் பற்றிச் சிந்தித்தார்கள். எனது சிந்தனையில் "ஒன்றைச் சிறிதாக்க வேண்டுமென்றால் மற்றொன்றைப் பெரிதாக்க வேண்டுமென்று' கற்பனை செய்தேன் இது சாத்தியமாயிற்று என்றார். வேறு எவரும் யோசிக்காதவற்றை யோசித்து, யாரும் வாசிக்காததை வாசித்து, வாழ்க்கையை வளப்படுத்தினால் யாரும் சாதிக்க முடியாதவற்றை சாதிக்க முடியும். 
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதாவது ஒரு படைப்பாற்றல் திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது. அது சிப்பியைப் போல கடலின் ஓர் ஓரத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது. யாரொருவர் அதற்கொரு சிறகினைத் தருகிறார்களோ, அவர்களது வாழ்வு, வண்ணத்து பூச்சி போல் நித்தம் அழகாய்ச் சிறகடித்து பறந்து வாழ்வை வண்ணமயமாக்கும். வெற்றியாளர்களின் அடிப்படைத் திறமையே அவர்கள் ஒரு செயலைத் தொடங்கும்போதே தாங்கள் வெற்றி பெற்றதாக கற்பனைச் செய்து கொள்வதுதான். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, மகாகவி பாரதி இம்மண்ணில் இல்லை. இருப்பினும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே அவர் "ஆடுவோமே! பள்ளு பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே!' என்று பாடினார். பாரதியின் இத்தகைய கற்பனைத்துவமே அவரை மகாகவியாக்கியது. சுதந்திரம் பெறுவோம் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் விதைத்தது. சுதந்திரம் மலர உறுதியாயிருந்தது. 
ஏதேனும் ஒன்றை புதிதாகக் கண்டுபிடிப்பது; அதில் மகிழ்வது; ஒரு புதுக்கவிதை போல விதிகளைப் புறந்தள்ளி முன்னேறுவது; தவறிழைத்தாலும் அதனைப் புரிந்து கொண்டு ஒரு வேடிக்கையாகவே தொடர்ந்து மேற்கொள்வது என்று கற்பனை ஒரு புதுமையானது. இத்தகைய அற்புதமான கற்பனை கலைஞர்களை மட்டும் சார்ந்ததல்ல; விற்பனையை விண்ணுக்கு உயர்த்தும் வியாபாரிக்கு கற்பனை ஒரு புதிய யுக்தி. பொறியாளர்களுக்கு சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கின்ற ஒரு மந்திரக் கருவி. இந்த பிரபஞ்சத்தை ஒரே நோக்கில் பார்க்காமல் எல்லா திசைகளிலும் விரிந்து நோக்குகின்ற திறமையினை குழந்தைகளுக்கு வளர்க்க பெற்றோர்களுக்கு கிடைத்த அலாவுதீனின் அற்புத விளக்கு. 
இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த முகமாற்று அறுவைச் சிகிச்சை (Plastic Surgery) நிபுணர் மாக்ஸ்வெல் மால்ட்ஸ். அவர் தன்னிடம் அறுவைச் சிகிச்சை செய்தவர்களை ஆராய்ச்சி செய்தார். தங்களது முகத்தையும், மற்ற குறைகளையும் மாற்றிக்கொண்ட பின்னரும் சிலர் மனதளவில் எவ்வித மாற்றமும் அடையாமலிருந்தனர். அவர்களின் மனம் ஊனமாக இருந்ததால் அவர்களால் வாழ்க்கையில் எவ்வித உயர்வும் அடையவில்லை. இன்னும் சிலரோ, அறுவைச் சிகிச்சைக்கு அடுத்த வினாடியே தாங்கள் புதுப்பிறவி எடுத்ததுபோல் மகிழ்ந்தனர். அவர்களின் மனச்சித்திரம் மாறியதால் அவர்களது புதுப்பிறவியின் மூலம் வாழ்வில் பல வெற்றிகளை அடைந்தனர். மனச்சித்திரம் என்பது கற்பனையின் மறுபெயர். 
கற்பனையின் விளைவு ஆர்வமான கண்டுபிடிப்பு. கற்பனைத் திறன் ஒருவர் இருக்கின்ற உலகத்திலிருந்து, அற்புத உலகிற்கு அழைத்துச் செல்லும். "கற்பனைத் திறனே உண்மையான அறிவு' என்னும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "ஒளியின் வேகத்தில் நான் ஓடினால் என்ன நடக்கும்?' என்று கற்பனை செய்தார். விளைவு சார்பியல் கோட்பாடு (Theory of Relativity) இவ்வுலகிற்கு அதிசயமாய்க் கிடைத்தது. கற்பனைச் சக்தி புதுமையின் தொடக்கம். எந்த செயல்பாட்டில் ஒருவருக்கு கற்பனை வருகிறதோ, அச்செயலின் மீது அன்பு செலுத்தி, அதிலே மூழ்கிவிட வேண்டும். பின்னர் அச்செயல்பாடாகவே மாறவேண்டும். கடைசியில் அதில் முழுமையடைய வேண்டும். 
கற்பனை ஒரு சராசரி அல்ல, அது ஒரு மாபெரும் விசை. நிஜத்திற்கும் ஒரு பிரமாண்டத்திற்கும் ஒரு தொடர்பினை தருவதுதான் கற்பனை. கற்பனை என்றுமே கடினமானதல்ல, கற்பனை மகிழ்வானது. ஜே.கே. ரவுலிங் கற்பனை புதினங்கள் எழுதுவதில் புதிய சகாப்தத்தினை உருவாக்கியவர். அவர், மனிதனுக்கு கற்பனை என்ற வியப்பிற்குரிய ஒரு திறனை இயற்கை கொடையாகவே தந்துள்ளது. அத்திறன் மூலம் எது சரி, எது சரியல்ல என்று ஆராய்ந்து அறியமுடியும். "ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் புதுமைக்கும் அந்த திறனே அடிப்படை நிலை' என்கிறார். 
கற்பனை கவிதைக்கு மட்டும் அழகல்ல; வாழ்க்கைக்கும் அதுவே அழகு. அமெரிக்காவில் பிறந்த வால்ட் டிஸ்னி கற்பனை வளம் மிக்கவர். அவர் இயற்கைக் காட்சிகளையும் விலங்குகளையும் அழகாய் வரைபவர். கதையைக் கூட கரும்பலகையிலே படம் வரைந்து கொண்டே சொல்வார். அவர், முதலில் ஒரு கேலிச்சித்திரப் படத்தினை உருவாக்கினார். அதில் தோல்வியடைந்தார். மனம் தளரவில்லை. தயாரிப்பாளரின் உதவியுடன் ஒரு கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அது நன்றாக ஓடியது. ஆனால், தயாரிப்பாளரோ டிஸ்னியை ஏமாற்றி விட்டார். 
டிஸ்னி தனது சகோதரனிடம், "நமது வாழ்க்கையை ஓர் எலி ஏற்றமுறச் செய்யப் போகிறது' என்றார். "ஓர் எலியின் மூலம் நமது வாழ்க்கை உயருமா? என்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லையே' என்றார் அவரது சகோதரர். "அண்ணா! எனது கற்பனையில் அது சாத்தியமாயிற்று' என்றார். மூன்றே வட்டங்களில் ஒரு முகம், இரண்டு காது கொண்டு, ஒரு கற்பனை எலியான ‘Mickey Mouse’ உருவாக்கினார். அந்த அதிசய எலி, உலகின் ஒவ்வொருவர் வீட்டிற்கும் தொலைக்காட்சி வழியே சென்றது. அதன் குறும்புகளைப் பார்த்து தங்களை மறந்து மக்கள் சிரித்தனர். குழந்தைகளோ கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர். பெரியவர்கள் மீண்டும் குழந்தைகள் ஆயினர். எண்ணற்றோரின் கவலைகளை மறக்க வைத்தது அந்த கற்பனை. மிகச்சிறந்த கேலிச்சித்திரத்தை உருவாக்குவேன் என்ற கனவுக் கோட்டையுடன் இருந்ததால் அவரது வாழ்க்கை உலகம் வியக்க வளர்ந்தது. 
கலைக்கு அழகு கற்பனை!
அறிவின் அழகும் கற்பனையே!!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com