சுடச்சுட

  

  சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 33 - தா.நெடுஞ்செழியன்

  Published on : 12th February 2019 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  im1

  மார்ட்டின் ஓர் ஓய்வுபெற்ற ஆங்கில தலைமைக் காவலர் ஏப்ரல் 14, 1864 -ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் உள்ள பகவத் படித்துறை மண்டபத்தில் டவுன் மேல்நிலைப் பள்ளியை (TOWN HIGHER SECONDARY SCHOOL) தொடங்கினார். இப்பள்ளி வளர்ச்சிக்காக கும்பகோணத்தில் வசித்து வந்த பி.தம்புசாமி முதலியார் அவருடைய 1 லட்சத்து 800 ச.அடி பரப்பளவு உள்ள வாழைத் தோட்டத்தை மிக மிகக் குறைந்த விலைக்கு பள்ளிக்கு அளித்தார். இப்பள்ளியின் அடிக்கல் நாட்டுவிழா போர்ட்டர் (PORTER) என்ற ஆங்கிலேயரால் டிசம்பர் 29, 1881 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. தம்புசாமி முதலியார் இப்பள்ளியின் மெயின் பில்டிங் கட்டுமானத்தை அன்றாடம் கவனித்து வந்தார். எதிர்காலத்தில் தமிழகத்திலேயே சிறந்த பள்ளியாக விளங்கும் என்ற நம்பிக்கையுடன், அவருடைய சிறப்பான மேற்பார்வையால் உருவாக்கப்பட்ட அப்பள்ளி, எண்ணற்ற மாணவர்களை இன்றும் உருவாக்கி வருகிறது. இப்பள்ளியின் மெயின் பில்டிங் டாக்டர் டங்கன் என்ற பள்ளிக் கல்வி இயக்குநர் 1881 -ஆம் ஆண்டு திறந்து வைத்தார். இதே போன்று, இப்பள்ளியின் முதல் தளம் அப்போதைய பள்ளி தாளாளர் சுப்ரமணிய ஐயர் மேற்பார்வையில் கட்டப்பட்டது. இப்பள்ளி வளர்ச்சிக்காக வி.ஸ்ரீனிவாச ஐயர், சாது சேஷய்யர், வி.கிருஷ்ண ஐயர், வீராசாமி ஐயர், நாராயணசாமி ஐயர் மற்றும் எண்ணற்ற குடந்தை மக்கள் இப்பள்ளி வளர பணத்தையும் மற்ற உதவிகளையும் அளித்தனர். இப்பள்ளியின் தொடக்க வகுப்புக்கான கட்டிடத்தை 1905 -ஆம் ஆண்டு அப்போதைய பள்ளி செயலாளராகப் பணியாற்றிய கிருஷ்ணசாமி ஐயங்கார் கட்டினார். தற்போது இக்கட்டிடம் "தம்புசாமி முதலியார் வளாகம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதே போன்று டி.கே. சிவராம ஐயர் 1915 -ஆம் ஆண்டு பள்ளிச் செயலாளராகப் பணியாற்றிய போது அறிவியல் ஆய்வகங்களையும், டைப்ரைட்டிங் ஹாலையும் கட்டினார். 1926 -ஆம் ஆண்டு பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் எஸ்.கிருஷ்ணசாமி ஐயர் நினைவாக வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரியால் திறக்கப்பட்டது. 
  1951 -ஆம் ஆண்டில் எஸ்.வைத்தியநாத ஐயர் மெயின் பில்டிங் முதல் தளத்தைக் கட்டினார். இதனை 1953 -ஆம் ஆண்டு டாக்டர் சி.பி. ரெங்கசாமி ஐயர் திறந்து வைத்தார். பின்னர் டாக்டர் எம்.வி. தியாகராச ஐயர் மற்றும் ஏ.ஆர். இராமய்யர் ஆகியோரின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்ட ஆபிஸ் செக்ரட்டரி கோர்ஸ் வகுப்பறையை 1960 -ஆம் ஆண்டு கந்தசாமி மூப்பனார் திறந்து வைத்தார். 
  இப்பள்ளியின் நூற்றாண்டு விழா 1964 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 -ஆம் தேதி சுவாமிநாத உடையார் தலைமையில் நடந்தது. அப்போதைய தமிழக கவர்னராக இருந்த மைசூர் அரசர் பகதூர் ஜெய சாமராஜ உடையார் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பித்தார். இதேபோன்று எஸ்.திருவேங்கடம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அளித்த பண உதவியால் மதிய உணவுக் கூடம் அமைக்கப்பட்டு அதற்கு மதுரை கே.ஸ்ரீனிவாச ஐயங்கார் பெயரிடப்பட்டது. தாசரதி கலையரங்கம் 1977 -ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1977 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி இப்பள்ளி டவுன் மேல்நிலைப்பள்ளியிலிருந்து டவுன் உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. 
  1983 -ஆம் ஆண்டு ஜனவரி 21 -ஆம் நாள் இப்பள்ளியின் செயலராக நவநீத கிருஷ்ணன் பணியாற்றியபோது, பாரதியார் நூற்றாண்டு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, அது பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பி.எஸ்.மணிசுந்தரத்தால் திறந்து வைக்கப்பட்டது. இதேபோன்று இப்பள்ளியின் பொறியியல் பிரிவுக் கட்டிடம் மிகவும் சேதமடைந்த போது, அது முற்றிலும் இடிக்கப்பட்டு, ஜி.ஆர்.இராஜேந்திரன், கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி, 1989-90 -ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள், பிற அலுவலர்கள் ஆகியோர் அளித்த நன்கொடையால் இராமானுஜர் நூற்றாண்டு விழா கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. 1990 -ஆம் ஆண்டு நவநீத கிருஷ்ணன், இப்பள்ளியின் செயலராக இருந்த போது, கட்டிடம் ஒன்றைக் கட்டி தம்புசாமி முதலியாரின் பெயரை இக்கட்டிடத்திற்குச் சூட்டினார். இதன் இரண்டாவது தளத்துக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கோபால இரத்தினம் 2004- 05 -ஆம் ஆண்டு பண உதவி செய்தார். டாக்டர் டி.சீத்தாராமன் பள்ளிச் செயலராகப் பணியாற்றியபோது, மத்திய அரசிடமிருந்து ரூ.12 இலட்சம் நிதி உதவி பெற்று பொறியியல் பணிமனை, பள்ளியின் நூலகம் அருகே கட்டப்பட்டது. நூலகம், சயின்ஸ் கிளப், கம்ப்யூட்டர் ஆய்வகம் எல்லாம் புதுப்பிக்கப்பட்டன. இதற்கு குடந்தை லயன்ஸ் கிளப் ரூ.2 இலட்சம் நிதி உதவி அளித்தது. பின்னர் முன்னாள் மாணவர்களின் உதவியுடன் ரூ.20 இலட்சத்தில் பள்ளி கழிவறைகள் புதிதாக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டன. 
  இதேபோன்று முன்னாள் மாணவர்கள் உதவியுடன் கணிதமேதை இராமானுஜரின் பொற்சிலை, கணினிகள், புரஜெக்டர்கள், மல்டி மீடியா அறை என பல்வேறு வசதிகளுடன் கல்விச் சூழல் மேம்படுத்தப்பட்டது. 
  இப்பள்ளி 150 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பகோணத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்லாது, அதனைச் சுற்றியுள்ள எண்ணற்ற கிராம விவசாயிகளின் குழந்தைகளுக்கும் கல்வி கற்க உதவி வருகிறது. இப்பள்ளிக்காக மக்கள் அளித்த உதவியினால் மட்டுமே எண்ணற்ற மாணவர்கள் இப்பள்ளியில் மிகக் குறைந்த செலவில் தரமான கல்வி கற்க முடிந்திருக்கிறது. இப்பள்ளியின் குறிக்கோள் - "உண்மை, நேர்மை, சேவை மற்றும் தியாகம்' (TRUTH, HONOUR, SERVICE AND SACRIFICE) என்பதாகும். 
  இந்தக் குறிக்கோளுடன் இப்பள்ளி விதைத்த விதைகள் இன்று உலகமெங்கும் இப்பள்ளிக்குத் தனிச்சிறப்பைச் சேர்த்திருக்கிறது. இதற்கு இங்கு பயின்ற முன்னாள் மாணவர்களே சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளனர். 
  இராமானுஜர்: 1887 -ஆம் ஆண்டு டிசம்பர் 22 -ஆம் தேதி ஈரோடு நகரில் பிறந்தார். இவருடைய தந்தை சேலை கடை ஒன்றில் கணக்கராகப் பணிபுரிந்தார். இவர்கள் கும்பகோணத்தில் சாரங்கபாணி சந்நிதி தெருவில் வசித்து வந்தனர். இவருடைய குடும்பத்தினருக்கோ, இவருடைய முன்னோர்களுக்காக கணிதத்தில் அபரிமிதமான திறமைகள் இல்லை. இவர் தனது 10 -ஆம் வயதில் 1897 -ஆம் ஆண்டில் டவுன் ஹைஸ்கூலில் வந்து சேர்ந்தார். இங்குதான் அவருக்கும் கணிதத்திற்கும் உள்ள கதவுகள் திறக்கப்பட்டன. இவர் தனது 11 -ஆம் வயதிலேயே கல்லூரியில் கற்றுத் தரப்பட்ட கணிதத்தைக் கற்றறிந்தார். அவருடைய கணிதத்திறமையின் காரணமாக இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் கேம்ப்ரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
  இவருக்கு எஸ்.எல்.லோனி (S.L.LONEY)யின் TRIGONOMETRY பழைய புத்தகம் கிடைத்தது. அந்த புத்தகத்தையும் முழுமையாகக் கற்றறிந்தார். 14 -ஆம் வயதில் நிறைய மெரிட் சர்டிபிகேட்களையும், ACADEMIC AWARDS வாங்கி பள்ளியின் சிறந்த மாணவராக விளங்கினார். இவர் இப்பள்ளியின் 1200 மாணவர்கள் மற்றும் 35 ஆசிரியர்களுக்கான LOGISTICS - ஐ மிக எளிதாக தனது 14 ஆம் வயதில் 
  பள்ளிக்கு வழங்கினார். 1902 -ஆம் ஆண்டில் CUBIC EQUATIONS - ஐ SOLVE செய்ய QUARTIC என்ற METHOD - ஐ உருவாக்கினார். 1903 -ஆம் ஆண்டில் QUINTIC என்ற மிகக் கடினமான கணிதத்தின் விடையை அறிய முற்பட்டார். இது பெரிய கணித மேதைகளாலும் முடியாத ஒன்று என கருதப்பட்டதாகும். அதே ஆண்டில் தனது 16 வயதில் ஒரு நூலகத்தில் இருந்து A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics (1886) என்ற கணித மேதை George Shoobridge Carr எழுதிய புத்தகத்தின் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட THEOREMS புத்தகத்தை நன்கு கற்று எல்லாவற்றையும் எளிதாக SOLVE செய்தார். இப்புத்தகம் இவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பள்ளி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அளித்த ஊக்கமும், உத்வேகமும் இராமானுஜரை கணித உலகிற்கு அடையாளம் காட்டியது என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்துமில்லை. இப்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் தனித்திறமையை மாணவர்களின் 10 முதல் 14 வயதுக்குள் கண்டறிந்து, அவர்களுடைய திறமையை ஊக்குவித்து மேன்மேலும் அவர்கள் வெற்றி பெறுவதற்கான கல்விச்சூழலை உருவாக்கியதே இராமானுஜர் என்ற ஒரு கணித மேதை உருவாகக் காரணமாக இருந்தது. இன்று இப்படிப்பட்ட சூழல் இல்லாததால் பல மாணவர்களின் திறமைகள் கண்டு கொள்ளப்படாமல் வீணாகிவிடுகிறது. சிறந்த ஆசிரியர்களை உருவாக்கும்விதமாக நமது ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் கற்பிக்கப்படாதது இதற்கு ஒரு காரணமாகும். 
  (தொடரும்)
  கட்டுரையாசிரியர்: 
  சமூக கல்வி ஆர்வலர்
  www.indiacollegefinder.org

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai