சுடச்சுட

  
  im9

  கர்நாடக மாநிலம், தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் . பிளஸ் 2 முடித்துள்ள இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள பெட்ரோல் நிலையம், கல்குவாரிகளில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றிவந்துள்ளார். இதில் இவருக்கு கிடைத்த ஊதியம், உணவு உள்ளிட்ட செலவுகளுக்கே போதவில்லை. இதனால், பிரசாந்த் எப்போதும் கடனாளியாகவே இருந்தார்.
  இந்த நிலையில், அவர் தீர்த்தஹள்ளியில் 5 நாள்கள் அளிக்கப்பட்ட பாக்கு அறுவடை பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார். பாக்கு மரத்தில் ஏறி, அதன் கனிகளை அறுவடை செய்யவும், பூக்களில் பூச்சிமருந்து தெளிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்குப் பிறகு, பிரசாந்த் தற்போது பாக்கு அறுவடைப் பணியில் சேர்ந்து நாள்தோறும் குறைந்தபட்சம் ரூ. 1500 ஊதியம் ஈட்டி வருகிறார். பணியில் சேர்ந்து 2 மாதங்களிலேயே ரூ. 75 ஆயிரம் சம்பாதித்த அவர், தன்னுடைய கடன் அனைத்தையும் அடைத்துவிட்டார்.
  பிரசாந்தைப் போல, கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், பர்தலா கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயதான இளைஞர் சுரேஷ். இவர், கர்நாடக மாநிலம், விட்டல் என்ற இடத்தில் நடைபெற்ற மற்றொரு பாக்கு அறுவடைப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இன்று அவரும் நாள்தோறும் ரூ. 1500 ஊதியம் ஈட்டி வருகிறார்.
  சர்வதேச அளவில் பாக்கு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கர்நாடகம், கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் மட்டும் பாக்கு பயிரிடுதல் அதிகமாகக் காணப்பட்டாலும், இதன் பயன்பாடு நாடு முழுக்க அனைத்து பகுதிகளிலும் உள்ளது.
  இந்தியாவில் 2013-14 கணக்கெடுப்பின்படி, 11 லட்சம் ஏக்கரில், 7.3 லட்சம் டன் பாக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், கர்நாடகம் மட்டும் 5.38 லட்சம் ஏக்கரில், 4.57 லட்சம் டன் பாக்கு உற்பத்தி செய்து, நாட்டில் முதலிடத்தில் உள்ளது. நாட்டின் பாக்கு உற்பத்தியில் 72 சதவீதத்தை கர்நாடக, கேரள மாநிலங்கள் தருகின்றன. 

  தற்போது கர்நாடகத்தில் மட்டும் 8 லட்சம் ஏக்கரில் பாக்கு பயிரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு, பாக்கு அறுவடை செய்ய திறன்மிகுந்த 60 ஆயிரம் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 1500 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தத் தொழில் ஆபத்து நிறைந்தது என்பதால், இதுவரை இளைஞர்களை அதிக அளவில் ஈர்க்காமல், ஆள்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. 
  ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஏப்ரல் மாதம் வரை பாக்கு அறுவடை காலமாகும். பாக்குமரப் பூக்கள், குருத்து ஆகியவற்றை அதிகமாக தாக்குவது பூஞ்சாண நோய். இந்நோய் தாக்கிவிட்டால், பிறகு நல்ல விளைச்சல் கிடைக்க எந்த வாய்ப்பும் இல்லை. இதனால், மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 முறை பூஞ்சாணக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. இதில், காலதாமதம் ஏற்பட்டால், விவசாயிகள் பேரழிவைச் சந்திக்க வேண்டியதிருக்கும். கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து மழை பெய்ததால், பூச்சிக்கொல்லி தெளிக்க இயலவில்லை. இதனால், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் கணக்கிட்டுள்ளனர்.
  இந்தச் சூழலே தீர்த்தஹள்ளியில் Elite Group என்ற விவசாயிகள் குழுவுக்கு பாக்கு அறுவடை குறித்த திறன் பயிற்சித் திட்டத்தை தொடங்கத் தூண்டியது. இதையடுத்து, இந்தக் குழுவினர் கடந்த 2017, அக்டோபரில் முதன்முதலாக 33 இளைஞர்களுக்கு 5 நாள்கள் திறன் பயிற்சி அளித்தனர்.
  இந்தத் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட, கர்நாடகத்தின் புகழ்பெற்ற கூட்டுறவுச் சங்கமான COMPCO, விட்டல் பகுதியில் உள்ள மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (CPCRI) இதே பயிற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. சிவமொக்காவில் உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகத்துடன் (UAHS) இணைந்து COMPCO நடத்தும் இந்தப் பயிற்சியில் 30 இடங்களுக்கு 90 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
  UAHS இன் வேளாண் பொறியியல் துறைத் தலைவர் முனைவர் கே.சி. சசிதர் இதுகுறித்து ஆய்வுசெய்து, அதற்கேற்ப ஒரு பொருத்தமான கருவியை உருவாக்கியுள்ளார். "இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவோர் தொடக்கத்தில் ரூ. 4500 செலவு செய்து இந்த உபகரணத்தை வாங்கி, பணியின்போது தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்'' என்கிறார் அவர். 
  இந்தப் பயிற்சி குறித்து UAHS இன் துணைவேந்தர் டாக்டர் எம்.கே. நாயக் கூறுகையில், "நாங்கள் ஏற்கெனவே 2 மையங்களில் நடத்திவரும் 2 ஆண்டு வேளாண் டிப்ளமா கோர்ஸில், பாக்கு அறுவடைப் பயிற்சித் திட்டத்தை சேர்க்க பரிசீலித்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார். 
  இந்தப் பயிற்சி குறித்து அறிந்துகொள்ள COMPCO தலைவரை presidentcampco@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், Elite Group தலைவரை drmanoharrao@yahoo.com என்ற முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.
  இரா.மகாதேவன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai