ஸ்மார்ட் மாத்திரை!
By DIN | Published On : 12th February 2019 10:06 AM | Last Updated : 12th February 2019 10:06 AM | அ+அ அ- |

இன்றைய அறிவியல் உலகில் மாத்திரையை விழுங்காமல் வாழ்ந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உடலுக்கு சத்து அளிப்பது முதல் பல நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் இந்த மாத்திரைகளை விழுங்க விருப்பமில்லை என்றாலும், வேறு வழியில்லாமல் விழுங்கத்தான் செய்கிறோம்.
மாத்திரைகள் வயிற்றுக்குள் கரைந்த காலம்போய், விரிந்து உடல் நிலையைக் கண்காணிக்கும் கருவியாக - ஸ்மார்ட் மாத்திரையாக' இப்போது மாறியுள்ளது.
ஆம். அமெரிக்காவில் உள்ள எம்ஐடி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த விரியும் ஸ்மார்ட் மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளனர். விழுங்குவதற்கு முன் மாத்திரையாகவும், விழுங்கிய சில நொடிகளில் ஜெல்லி பந்தைப்போலவும் விரியும் இந்த மாத்திரையை பாலிமர் மற்றும் நீரை வைத்து உருவாக்கியுள்ளனர்.
சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் மாத்திரை வயிற்றில் ஒரு மாதம் வரை இருந்து உடல் நிலையைத் துல்லியமாக கண்காணிக்கிறது. ஸ்மார்ட் மாத்திரையின் மூலம் வயிற்று புற்றுநோய், அல்சர், வயிற்றின் சூடு ஆகியவற்றைக் கண்காணிக்க முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்மார்ட் மாத்திரையை வயிற்றில் இருந்து வெளியேற்ற கால்சியத்தை அருந்தினால்போதும், அது மீண்டும் பழைய அளவுக்கே சுருங்கி, உடலை விட்டு வெளியேறிவிடும்.
இந்த ஸ்மார்ட் மாத்திரையை பல்வேறு திரவ உணவுப் பொருள்களில் வைத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கேஸ் நிரம்பிய குளிர்பானங்களில் இந்த ஸ்மார்ட் மாத்திரை மிக வேகமாக 15 நிமிடங்களில் 100 மடங்கு அதிகமாக விரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த ஸ்மார்ட் மாத்திரையை வயிற்றில் இருந்து வேகமாக வெளியேற்ற தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- அ.சர்ஃப்ராஸ்