வாழ்க்கையில் வெற்றி பெற...

நாம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்வி கட்டாயம் இருக்கும்.
வாழ்க்கையில் வெற்றி பெற...

 "நாம் பார்க்கும் ஒவ்வொரு உயிரிடமும் நாம் கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் உள்ளன.
 நாம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்வி கட்டாயம் இருக்கும். பள்ளிப்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு அடுத்து எந்த கல்லூரி, எந்த துறையை தேர்வு செய்வது? கல்லூரிப்படிப்பை முடிப்பவர்களுக்கு எந்த துறையில் பணியில் அமர்வது? ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு பணியில் அடுத்த கட்டத்துக்கு எவ்வாறு செல்வது? என்று ஒவ்வொருக்கும் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியும், அதில் குழப்பமும் இருக்கும்.
 அத்தகைய சமயங்களில் சரியான முடிவை நாம் எடுப்பது அவசியம். ஏனெனில் வாழ்க்கையில் சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளே நம்மை சிகரங்களில் கொண்டு நிறுத்தும். தேவைப்படும் நேரத்தில் எடுக்கப்படும் தவறான முடிவுகள் சில சறுக்கல்களைத் தந்தாலும், அடுத்த முறை சரியான முடிவெடுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால் சரியான நேரத்தில் எடுக்கப்படாத முடிவுகள், எடுக்க தயங்கிய முடிவுகள் நம்மை காலம் முழுவதும் வருந்தச் செய்யும்.
 ஆகையால் வாழ்க்கையில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு சரியான முடிவை பதிலாகத் தருவது அவசியம். சிலர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறி அவர்களுக்கான முடிவை பிறரை எடுக்க வைப்பர். அவ்வாறு நமக்காக பிறர் முடிவெடுப்பது நமக்கு அனைத்து நேரத்திலும் நன்மை பயக்காது. நமது விருப்பம் என்ன? ஆர்வம் என்ன? என்பதை நம்மைவிட யாராலும் தெளிவாக தீர்மானிக்க இயலாது. எனவே நமக்கான வெற்றி நம் முடிவிலேயே உள்ளது.
 இவ்வாறு வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கும் நமக்கான முடிவை எடுப்பது எவ்வாறு?
 
 ஆர்வத்தை கண்டறிவது
 வாழ்க்கைப் பாதை குறித்து திட்டவட்டமாக முடிவெடுப்பதற்கு முன்பாக, நமக்கு எதன் மீது ஆர்வம் என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அந்த ஆர்வம் ஒரு நாளிலேயோ, ஒரு வாரத்திலேயோ உருவாகி இருக்காது. சிறு வயதில் இருந்தோ அல்லது குறிப்பிட்ட காலமாகவோ நமக்கு ஒன்றன் மீது பேரார்வம் வளர்ந்திருக்கும். அதைக் கண்டறிந்து அதன் பின்னால் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும்.
 நமக்கான பாதையைத் தேர்ந்தெடுப்பது
 வாத்துக் கூட்டம் போல, அனைவரும் போகும் பாதையில் கண்ணை மூடிக் கொண்டு பின்னே செல்வது நமக்கான சரியான பாதையாக இருக்காது. பிறருக்கு வெற்றியாய் அமைந்த வாழ்க்கை பாதை நமக்கும் அவ்வாறே அமையும் என்பது நிச்சயமில்லை. தவளை நிலத்தில் தாவிக் குதிக்கிறது என்பதற்காக மீனும் தரைக்கு வந்தால் அறியாமையினால் அதன் வாழ்வும் முடிந்துவிடும். எனவே நமது திறமைகளுக்கான பாதை என்னவென்று தீர்மானித்து, நமது தனித்துவத்தை வெளிப்படுத்தும் பாதையில் செல்வதே வெற்றிக்கு வழிவகுக்கும்.
 கவனச்சிதறல்களைத் தவிர்ப்பது
 இந்த உலகில் நமக்கான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கான தடைகள் அதை விட அதிகமாக இருக்கின்றன. மனித மனம் மிகவும் சிக்கலான ஒன்று. ஒரு விஷயத்தில் நிலையாக நில்லாது மாறிக் கொண்டே இருக்கும். ஒன்றை விட மற்றொன்று சிறந்ததாக தோன்றும். எனினும் அதை கட்டுப்படுத்தி, நம்முன் இருக்கும் வாய்ப்புகளில் நமக்கு எதில் ஆர்வம் அதிகம் உள்ளது என்றறிந்து அதை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.
 பொறுமை
 பதறாத காரியம் சிதறாது என்பார்கள். நமக்கான வாழ்க்கைப் பாதையின் முடிவை எடுக்கும் போது பொறுமையுடன் சிந்திக்க வேண்டும். நாம் நமக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது அதில் பணவரவு இருக்காது, சிறப்பான பாதை இல்லை என்று நம்மைச் சுற்றி இருக்கும் சிலர் கூறுவர். அவை அனைத்தையும் பொறுமையுடன் கையாண்டு, பண வரவை வேண்டாது மன நிறைவை வேண்டி, நம்முடைய பாதையை எவ்வாறு வெற்றிகரமாக மாற்றுவது என்று யோசிக்க வேண்டுமே தவிர சோர்ந்து விடக் கூடாது. பிடித்த பாதையில் பயணிக்கும்போது தடைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
 வழிகாட்டியை தேர்ந்தெடுப்பது
 வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் யாரேனும் ஒரு வழிகாட்டி இருந்திருப்பார்கள். வழிகாட்டியின் போதனைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டு அதை அவர்கள் பின்பற்றியிருப்பார்கள். அதுபோல நாமும் வாழ்க்கை பாதையில் சிரத்தையுடன் பயணிக்க நமக்கும் ஒரு வழிகாட்டி நிச்சயம் அவசியம். நாம் பார்க்கும் ஒவ்வொரு உயிரிடமும் நாம் கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் உள்ளன. எதிர்மறை எண்ணங்கள் கொண்டவரைத் தவிர்த்து, நம்மீது உண்மையான அன்பு வைத்திருப்பவரையும், உலக அனுபவத்தில் சிறந்தவரையும் நமக்கு வழிகாட்டியாக கொள்ள வேண்டும்.
 திட்டமிடல்
 நாம் தற்போது இந்த பாதையைத் தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் எத்தகைய இடத்தில் இருப்போம் என்று முன்கூட்டியே தெளிவாக திட்டமிட வேண்டும். மேலும், அதற்கான வழிமுறைகளையும் திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.
 இவ்வாறு நாம் செய்வது வாழ்க்கையில் வெற்றி பெற நாம் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துவதோடு மட்டுமன்றி நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உணர்த்தும். அவர்களும் தயங்காது நம் வெற்றி பாதைக்கு ஆதரவளிப்பர். நம்மை தங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் வழிகாட்டியாய் பார்ப்பர்.
 -க. நந்தினி ரவிச்சந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com