

முன்னேற்றக் காற்றை மூச்சுக் காற்றாகச் சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாருடைய மனதிலும் சிறகு விரிப்பதுண்டு. அந்த எண்ணம்தான் வெற்றியை நோக்கி மனிதர்களை இயக்குகின்ற உந்துசக்தியாக விளங்குகிறது.
மேலும், ஒவ்வொருவரும் ஏதாவது ஓர் உன்னத இலக்கை வைத்துக் கொண்டு, அதை நோக்கி தங்களுடைய வாழ்க்கையைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்ல முடியும்.
ஆம். லட்சியமில்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகு போன்றது. அது காற்றுக்கு அசையலாம்; ஆனால், கரையைச் சென்று சேராது. அவ்வாறு தாங்கள் நினைத்த இலக்கை அடைவதற்கு அறிவு மட்டுமே போதும் என்றே பலர் எண்ணுகின்றார்கள். அதன் வெளிப்பாடாகத்தான், பெரும்பாலான பெற்றோர் தங்களுடைய குழந்தைகளைப் போட்டி போட்டுக் கொண்டு மதிப்பெண்களை மட்டுமே கொட்டுகின்ற இயந்திரங்களாக மாற்றுவதற்குத் துடிக்கிறார்கள். மேலும், அதற்கேற்றவாறே இன்றைய பள்ளிகளிலும், மதிப்பெண்களைக் குறிவைத்தே பாடங்கள் போதிக்கப்படுகின்றன.
ஒரு சமுதாயம் அறிவு சார்ந்ததாக மலர்வது வரவேற்கத்தக்கதுதான். "அறிவு அற்றம் காக்கும் கருவி' என்றார் வள்ளுவர்.
அறிவார்ந்த செயல்பாடுகளும் உழைப்பும்தான் ஒருவரை வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கின்றன என்றாலும், அறிவை மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவரால் வெற்றிச் சிகரத்தை எட்டமுடியுமா, ஒருவேளை எட்டினாலும் அங்கே தொடர்ந்து நிலைத்து நிற்க முடியுமா என்ற கேள்விகள் நமக்குள் எழ வேண்டும்.
"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர்' என்று மனிதப் பண்புகளின் அவசியத்தை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
திறமையும் அறிவும் இருந்தால் ஒருவனால் சிகரத்தைத் தொடமுடியும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. ஆனால், ஒழுக்கமில்லை என்றால், ஒருவன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அங்கிருந்து வழுக்கி விழுவதைத் தடுக்க முடியாது. எனவே, அறிவைவிட ஒழுக்கமே முன்னேற்றத்துக்கு மூலதனமாக அமைகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய அன்றாட நடைமுறை வாழ்க்கையில், பலர் தங்களுடைய அறிவின் மூலம் உயரிய பதவிகளை அடைந்திருந்தாலும், நேர்மை, சுய ஒழுக்கம், கை சுத்தம், மனிதப் பண்புகள் முதலான அறநெறிகளைக் கடைப்பிடிக்காத காரணத்தினால், உயரத்தில் இருந்து வழுக்கி விழுந்து சிதறிப் போவதை தினமும் படிக்க நேரிடுகிறது.
அதாவது, ஒழுக்கமில்லாத மனிதர்கள், சமுதாய வயல்களில் களைகளாகவே இருப்பதால், எவ்வளவு உயரமாக அவர்கள் வளர்ந்தாலும் என்றாவது ஒருநாள் வெட்டி வீழ்த்தப்படுவது உறுதி.
இளமைப் பருவம் முதலே, நமது பிள்ளைகளுக்கு அறநெறிகளைப் போதித்து ஒழுக்கசீலர்களாக வளர்ப்பது பெற்றோர், ஆசிரியர்களின் முதன்மையான கடமையாகும். இதைத்தான் சமுதாயம் காலங்காலமாக வலியுறுத்தி வருகிறது. "கல்வியின் நோக்கம் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதுதான்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களில் அறநெறி (Moral Science) வகுப்புகள் நடத்தப்படும். ஆனால் இப்போது அதற்கெல்லாம் பள்ளிகளில் நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்பதுடன் அவற்றுக்கெல்லாம் பாடத் திட்டத்தில் இடமுமில்லை என்பதும் உண்மைதான்.
மேலும், அன்றைய குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக விளங்கியதால், அனுபவ அறிவு மிகுந்த தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா போன்றவர்கள், தங்களுடைய வீட்டில் வளரும் சிறுவர்களைக் கண்காணித்து, அவ்வப்போது அறிவுரைகளைக் கதைகளாகவும், அனுபவப் பகிர்வுகளாகவும் பிஞ்சு மனங்களில் அள்ளித் தெளித்தார்கள்.
அவை இளையோர் நெஞ்சில் வேரூன்றி வளர்ந்து அவர்களுடைய வாழ்நாள் முழுவதும், நற்பண்புகளாக மலர்ந்து பயன் கொடுத்தன. மேலும், அவற்றின் மூலமாக செழிப்படைந்தவர்கள் தனிமனிதர் மட்டுமல்ல, இந்தச் சமுதாயமும்தான் என்பதை விளக்க வேண்டியதில்லை.
தற்போது நகர நெரிசலிலும் நாகரிக வளர்ச்சியிலும் கூட்டுக் குடும்பங்கள் சிக்கிச் சிதறுண்டு போனதுடன், கணவன்- மனைவி கூட தனித்தனியாக வாழும் அவலமும், அவசியமும் நேர்ந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதன் காரணமாக, குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்து போனதுடன், பெற்ற ஓரிரு பிள்ளைகளும், தந்தையிடமோ தாயிடமோ அல்லது விடுதிகளிலோதான் வளர்வதைப் பார்க்க முடிகிறது.
இவ்வாறாக, இளம்வயதில் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் முழுமையாகக் கிடைக்காமல் முறையாக அறத்தின் பாதையில் வளர்க்கப் படாதவர்களால் எப்படி நல்ல மனிதர்களாக வாழமுடியும்? இதைத்தான் ஒரு மாணவி, தனது உள்ளக் குமுறலாக இப்படி வெளியிட்டுள்ளார்.
"அப்பா சொன்னார்
டாக்டர் ஆகவேண்டும் என்று
அம்மா சொன்னார்
இன்ஜினியர் ஆகவேண்டும் என்று
அண்ணன் சொன்னார்
ஆடிட்டர் ஆகவேண்டும் என்று
அக்கா சொன்னார்
அட்வகேட் ஆகவேண்டும் என்று
ஆனால்
யாருமே சொல்லவில்லை
நல்ல மனிதராக
வேண்டும் என்று!'
ஆக, ஒழுக்கமற்ற சமுதாயமாக நமது சமுதாயம் மாறிவருகிறதோ என்ற அச்சம் பலருக்கு மனதில் உருவெடுக்கத் தொடங்கிவிட்டது. மேலும், ஒழுக்கமற்ற கல்வியின் வெளிப்பாடுதான், பாலியல் வன்கொடுமைகள், திருட்டுகள், வழிப்பறிக் கொள்ளைகள், போதைப் பழக்கம் என சிறார் குற்றங்கள் பெருகுவதற்கும், படித்த வாலிபர்களுடைய ஒழுக்கமற்ற செயல்களும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள் சமூக அறிவியலாளர்கள்.
வேகமாக வளர்ந்து வரும் அதிதொழில்நுட்பம், கணினி சார்ந்த ஊடகப் புரட்சியும் வளரிளம் சிறார்களைத் தாக்கி அவர்களின் திசையை மாற்றத் தொடங்கிவிட்டன. இவ்வாறான தற்சிதைப்பு நடவடிக்கைகளைத் தடுக்க ஆசிரியர்களும், பெற்றோரும் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும்.
பள்ளிகளும், இல்லங்களும், சிறார்களின் அறிவு வளர்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட ஒழுக்கம் சார்ந்த நுட்பங்களையும் பண்புகளையும் இளைய உள்ளங்களில் வார்த்தெடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில், இன்றைய இளையவர்கள்தான் எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகளாக, ஏன் நாட்டையே வழிநடத்தும் தலைவர்களாக உருவாக இருக்கிறார்கள்.
எனவே, பிஞ்சுகள் வெம்பிவிடாமல் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் சமூகப் பொறுப்புணர்வு. ஆனால், சமூகத்தின் செயல்பாடுகளாக நாம் கருதும் செய்தி ஊடகங்களும், திரைப்படங்களும், சின்னத்திரைக் காட்சிகளும் சமுதாயத்தைச் செதுக்கும் முயற்சிக்குப் பதிலாக, விழுமியங்களைச் சிதைக்கும் விதமாகவே உள்ளன என்பதுதான் பலரின் புலம்பல்களாக இருக்கிறது.
மேலும், அப்பாவி மக்களின் மனங்களில் நச்சு விதைகளைச் ஓசையின்றித் தூவி விடுகின்றன என்கிறார்கள் மனோதத்துவ அறிவியலாளர்கள்.
இத்தகைய சூழலில், நமது வளரும் பருவத்தினரைச் செம்மைப்படுத்துவதற்கு என்னதான் செய்ய வேண்டும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. பள்ளிகளும் பெற்றோரும் கட்டாயம் சமுதாயப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
ஆம்! பாடத்திட்டத்தில், இல்லை எனச் சொல்லி, நழுவிக் கொள்ளாமல், வாரத்தில் இரண்டு பாடப்பிரிவுகளையாவது அறநெறிக் கல்விக்காக பள்ளிகள் ஒதுக்க வேண்டும். மேலும், இதற்காக புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பகுதி நேர சேவைக்கு நியமிக்கலாம். அது இரு வழிகளில் நன்மை செய்யும். ஒன்று பள்ளிகளுக்குச் செலவைக் குறைப்பதுடன், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு உற்சாகத்தையும் நன்மதிப்பையும் கொடுக்கிறது.
இரண்டாவதாக, நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது தங்களின் குழந்தைகளுடன் பெற்றோர் அமர்ந்து பேசி, அவர்களுடன் மன ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். மேலும், தங்களுடைய அனுபவங்களையும் அறநெறிக் கருத்துகளையும் வாரிசுகளிடம் பகிர்ந்து அவர்களைப் பக்குவப்படுத்தி நன்னெறிப்படுத்த வேண்டும். அத்துடன் நீதி நூல்களை வாசிக்கும் பழக்கத்தையும் உருவாக்க வேண்டும்.
தங்களுடைய குழந்தைகளுக்குத் தேவையானதையெல்லாம் ஆசிரியர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று தங்களுடைய தார்மீகப் பொறுப்பை தட்டிக் கழிக்காமல், தாம் பெற்ற குழந்தைகளை ஒழுக்க நெறிகளுடன் வளர்த்து பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவது தங்களுடைய கடமைதான் என்பதை உணர்ந்து ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் விதமாகப் பெற்றோர் செயல்பட வேண்டும்.
அத்துடன் ஆசிரியர்களும் சம்பந்தப்பட்ட பெற்றோரும் இரு மாதங்களுக்கு ஒருமுறையாவது நேரில் சந்தித்து கலந்து ஆலோசித்து, வளரும் குழந்தைகளிடையே தோன்றியுள்ள களைகளைக் களைந்து ஊக்கப்படுத்தி பாராட்டு என்னும் உரமிட வேண்டும். குறைகளைக் காண்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், நிறைகளைக் கட்டாயம் கண்டறிந்து போற்ற வேண்டும். அதாவது, குழந்தைகளிடையே காணும் நற்பண்புகளைப் பாராட்டும்போது, அவை மேன்மேலும் வளரும் என்பதை நினைவில்கொண்டு செயல்பட வேண்டும்.
நிறைவாக, ஒழுக்கமும், தன்னம்பிக்கையும், மனிதப் பண்புகளும்தான் முன்னேற்றத்துக்கான உண்மையான மூலதனம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது தேசத்தின் கனவுகள்
நிறைவேறும். காலத்தின் நெஞ்சில் சுவடு பதிக்கும் திறன் மிக்கவர்களை உருவாக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.