சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் - 94

கரோனா வைரஸ் தாக்குதலினால் உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த கொடிய நோயானது கல்வியில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஒருபுறம் கவலையை
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் - 94

In every crisis, doubt or confusion, take the higher path - the path of compassion, courage, understanding and love.

Amit Ray, Nonviolence: The
Transforming Power

கரோனா வைரஸ் தாக்குதலினால் உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த கொடிய நோயானது கல்வியில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஒருபுறம் கவலையை அளித்தாலும், மற்றொருபுறம் கல்வியில் நாம் கனவிலும் எதிர்பாராத வியக்கத்தக்க மாறுதல்களை நமக்கு அளித்துள்ளது. குறிப்பாக நாம் பள்ளிக்குச் செல்லாமல் பல்வேறு முறைகளில் இன்றைய தொழில்நுட்ப உதவியுடன் சுயமாக கற்றுக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை மாணவர்களிடம் உருவாக்கியுள்ளது. மாணவர்கள் ஆசிரியர்கள் தரும் பாடங்களைத் தவிர, தாங்கள் விரும்பும் ஓவியம், இசை, நடனம், அயல்நாட்டு மொழிகள், மென்பொருட்கள் என தங்களுக்கு விருப்பமான பலதரப்பட்ட விஷயங்களை சுயமாக கற்றுக் கொள்வதற்கான அடித்தளத்தை நகர்ப்புற மாணவர்களுக்கு உருவாக்கியுள்ளது. இதன் வாயிலாக மாணவர்கள் இணையத்தில் தரப்பட்ட தகவல்களை சேகரித்து அவற்றில் எவை நன்றாக உள்ளன, எவற்றின் தரம் குறைவாக உள்ளன என நன்கு ஆராயும் வாய்ப்பு இத்தருணத்தில் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் எண்ணற்ற பெற்றோர்கள் மனதில் குழந்தைகளின் கல்வி எவ்வாறு மாற்றம் அடையும்? அவற்றின் தரம் எவ்வாறு இருக்கும் என்பன போன்ற எண்ண அலைகள் உருவாகி அவர்களது மனதில் குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. இதேபோன்று மாணவர்களும் தங்களது பள்ளிகளுக்கு திரும்பிச் செல்லக் கூடிய நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால், இந்த நோயின் கிருமிகள் தங்கள் குழந்தைகளுக்கும் பரவிவிடும் என்ற பய உணர்வு பெற்றோர்களிடம் உருவாகி இருக்கின்றது.

மறுபுறம் பெற்றோர்களுக்கு தங்களது பணி எவ்வளவு நிரந்தரமாக இருக்கும்; மீண்டும் பழைய பணிக்கான சூழல்மற்றும் வருமானம் தங்களுக்குக் கிடைக்குமா என்ற கவலையும் இருக்கிறது.

ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள், இச் சூழலின் தன்மையை அறியாமல் மாணவர்களின் அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நோய் எப்போது குணமாகும்? நல்ல பழைய சூழலை நமக்கு எப்பொழுது அளிக்கும் என்று எவராலும் கணிக்க முடியவில்லை. பள்ளிகள் பழைய சூழலுக்கு மாறுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று உறுதியாகத் தெரியவில்லை.

ஊரடங்கைத் தளர்த்தி விட்டால் - பெற்றோர்கள் வேலைக்குச் சென்றால்- மாணவர்கள் பள்ளிக்குச் சென்றால் அவர்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். பள்ளிகளில் மாணவர்களின் இடையே சமூக இடைவெளியைக் கொண்டு வருவதென்பது சாத்தியமே இல்லை. மேலும் தற்போது பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளின் அளவானது மாணவர்களின் எண்ணிக்கைக்கு உகந்ததாக இல்லாமல் இருப்பதால், நோய் எளிதில் பரவக் கூடிய சூழல் உருவாகும்.

இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கு பள்ளிகளிடம் என்னென்ன திட்டங்கள் உள்ளன? இத்திட்டங்களைப் பற்றி பெற்றோர்களுக்குத் தெரிவிப்பதற்கான முயற்சிகளை பள்ளிகள் மேற்கொள்ளவில்லை. அரசும் பொதுமக்களுக்கு எந்த ஒரு தகவல்களையும் தரக்கூடிய சூழ்நிலையில் இல்லை. எனவே பழைய கல்விச்சூழல் நமக்குத் திரும்பக் கிடைப்பதற்கு எவ்வளவு நாட்களாகும் என்று தெரியவில்லை.

எனவே பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்ற கவலையை பெற்றோர்களும் மாணவர்களும் மறந்து தற்பொழுது நமக்கு கிடைத்த இந்த அரிய நேரத்தை எவ்வாறு பயனுள்ள நேரமாகப் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட வேண்டும். நமது சுய முன்னேற்றத்திற்குத் தேவையான திட்டங்களை நாமே உருவாக்கி அவற்றை நிறைவேற்றக்கூடிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே பெற்றோர்களும் மாணவர்களும் இந்த அரிய வாய்ப்பினை ஆக்கப்பூர்வமாக மாற்ற வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி நிறைய கவலைப்படாமல், இத்தருணத்தில் நம்மை முன்னேற்றிக் கொள்ள என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இணையம் வழியாக உலகெங்கிலும் தரக்கூடிய நல்ல தகவல்களைப் பயன்படுத்தி தனிமனித வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும். காலத்தின் கட்டாயம் நமக்கு அளித்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையை நோக்கி நாம் நகர வேண்டும்.

நாம் இப்பொழுது மாணவர்களை 3 பிரிவினராக வகைப்படுத்தி, ஒவ்வொரு பிரிவினரும் என்னென்ன முயற்சிகளை எடுக்கலாம் என்பதனைச் சிறிது ஆராயலாம்.

முதலில் எட்டாவது வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கு பெற்றோர்கள் தங்களால் இயன்றவரை அவர்களுக்கு பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும்.

ஓவியம் வரையச் சொல்லலாம். தங்களது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி எவ்வாறு கட்டுரை எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து கட்டுரை எழுதச் சொல்லலாம். அவர்களுக்குத் தெரியாத புதிய தகவல்களை அவர்களுக்கு தெரிவிக்கலாம். உதாரணமாக உலகின் பல்வேறு நாடுகள், அவற்றின் தலைநகரங்கள், அங்கு புழக்கத்திலுள்ள பணம், மற்றும் அந்நாட்டின் சூழல்களை நமது நாட்டுடன் ஒப்பிட்டு வேறுபாடுகளை அவர்கள் புரியும் வண்ணம் விளக்க வேண்டும். பழைய தமிழ் களஞ்சியங்களை குறிப்பாக திருக்குறள், ஆத்திச்சூடி ஆகியவற்றை வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். வாசித்ததை எழுதச் சொல்லி அதற்கும் அவர்களைப் பழக்கவேண்டும். இது தவிர அவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து அவற்றில் அவர்கள் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதனை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் பெற்றோர்கள் பாராட்ட வேண்டும். இந்த பாராட்டுகளினால் மாணவர்கள் மீண்டும் மீண்டும் அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வம் பிறக்கும். இன்னும் ஆழமாக அவற்றில் சிந்தனையை செலுத்தி மென்மேலும் பாராட்டுகள் பெற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுடைய சிந்தனைத் திறனை இன்னும் அதிகமாகிவிடும். இது தவிர பெற்றோர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ளவற்றைப் பற்றி தாங்கள் அறிந்த சிறப்பான தகவல்களை மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உதாரணமாக, நமது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கோயில்கள் எவை? அவை எங்கு உள்ளன? சுற்றுலாத் தலங்கள் எங்கு உள்ளன? முக்கியமான திருவிழாக்கள் எவை? அவை எப்போது நடைபெறும்? ஏன் இந்த திருவிழாக்கள் நடைபெறுகின்றன? நமது முக்கிய பண்டிகைகள் எவை? இப்பண்டிகைகளின் சிறப்புகள் எவை? இந்தப் பண்டிகைகள் ஏன் கொண்டாடப் படுகின்றன? பண்டிகைக்கால உணவுகள் எவை? வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய நிலங்கள் இருந்தால், விவசாயத்தில் என்னென்ன பொருட்கள் அங்கே உருவாக்கப்படுகின்றன? ஒவ்வொரு பொருளும் எப்போது விளையும்? உதாரணமாக மாம்பழம் ஏன் இந்த பருவ காலத்தில் மட்டும் கிடைக்கின்றது? இதற்கான காரணங்கள் எவை என்பன போன்ற பல தகவல்களை கேள்வியாகவே மாணவர்களிடம் கேட்டு அதற்கான விளக்கங்களையும் பெற்றோர்கள் மாணவர்களிடம் சொல்ல வேண்டும்.

இதனால் எந்த விஷயத்தையும் மாணவர்கள் அலசி ஆராயக்கூடிய பண்பினை அவர்களை அறியாமலே பெறுகிறார்கள். இது இன்றையச் சூழலில் மிக மிக இன்றியமையாத கல்வியாகும். இது ஆங்கிலத்தில் Context Based Learning என்று அழைக்கப்படுகிறது.

பெற்றோர்கள் தங்களுடைய அன்றாடக் கவலைகளை மறந்து தங்கள் குழந்தைகளிடம் இது போன்ற ஆக்கப்பூர்வமான உரையாடல்களில் ஈடுபடும்போது, மாணவர்கள் எதிர்காலத்தில் எந்தச் சூழ்நிலை வந்தாலும் தங்களால் அவற்றை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுகிறார்கள்.

குழந்தைகளுக்கு நிறைய வரலாற்றுக் கதைகளை பெற்றோர் வாயிலாக அல்லது புத்தகம் வாயிலாக அல்லது இணையம் வாயிலாக வாசிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். தமிழில் இதற்கான பல்வேறு தகவல்கள் சென்னையில் உள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளன. அந்த இணையதளத்தின் முகவரி: http://www.tamilvu.org/ta/library-libcontnt-273141

இந்த இணையதளத்தில் இளம் சிறார்களுக்கு "சிறுவர் இலக்கியங்கள்' என்ற பகுதியில் கவிஞர் அழ. வள்ளியப்பன் படைப்புகள் மற்றும் கவிஞர் பூவண்ணன் படைப்புகள் உள்பட குழந்தைகளுக்கான எண்ணற்ற தமிழிலக்கிய கதவுகளைத் திறந்து விடுகின்றன.

இதே பகுதியில் சங்க இலக்கியங்கள், தமிழ் இலக்கணம், பதினெண்கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறி நூல்கள், சித்தர் இலக்கியம், இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள், மற்றும் நாட்டுப்புற இலக்கியங்கள் என பல்வேறு தலைப்புகளில் எண்ணற்ற தமிழ் படைப்புகள் மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன. இவற்றை பெற்றோர்கள் சிறிது சிறிதாக எடுத்து தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் மாணவர்களுக்கு வாசித்துக் காண்பித்து அவர்களிடம் ஒளிந்திருக்கும் தமிழ் ஆர்வத்தைத் தூண்டி விடலாம். இணையம் வழியாக தொடர்பு கொள்ளமுடியாத பெற்றோர்கள் மாணவர்களின் பாடப் புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லலாம். இவ்வாறு வாசிப்பதின் மூலம் அவர்களின் மொழி உச்சரிப்பு மற்றும் வார்த்தைகளைக் கையாளும் விதம், சொற்களை அடுக்கும் விதம் என பல்வேறு விஷயங்களை இயல்பாகவே கற்றுக்கொள்கின்றனர். பெற்றோர்கள் இவர்களுக்கு உரையாடலின் வழியாக தங்களுக்குத் தெரிந்த பல தகவல்களை தங்களுடைய பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட பெற்றோர் - மாணவர் தகவல் பரிமாற்றத்தின் மூலமாக கிடைக்கக் கூடிய தகவல்களை மாணவர்கள் எக்காலத்திலும் மறக்க மாட்டார்கள். குறிப்பாக பெற்றோர்கள் வாயிலாகக் கிடைக்கக் கூடிய தகவல்கள் பசுமரத்து ஆணி போல இவர்களது நெஞ்சங்களில் பதிவாகிவிடும். எனவே பெற்றோர்கள் தங்களுக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை மாணவர்களுக்குத் தெரிவிப்பதன்மூலம் மாணவர்கள் ஊக்கமும் உற்சாகமும் அடையக்கூடிய ஒரு சூழலை உருவாக்க முடியும்.

(தொடரும்)

கட்டுரையாசிரியர் சமூக கல்வி ஆர்வலர்

www.indiacollegefinder.org
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com