5 வழிகள்... மூளைத்திறன் மேம்பட!

மனிதனின் அத்தனை செயல்பாட்டிற்கும் முதன்மையாக இருப்பது மூளைதான்.  
5 வழிகள்... மூளைத்திறன் மேம்பட!


மனிதனின் அத்தனை செயல்பாட்டிற்கும் முதன்மையாக இருப்பது மூளைதான்.  

அத்தைகைய மூளையின் செயல்திறனை சிறப்பாக வைத்துக் கொள்ள ஐந்து விஷயங்கள் அடிப்படையாக தேவைப்படுகின்றன.

தொழில்முனைவோருக்கு உடல் தகுதி மட்டுமே போதுமானது அல்ல. அறிவுத் திறனும் தொழில்முனைவோருக்கு மிக அவசியம்.  தொழில்முனைவோர் தம் அறிவுத் திறனை மேம்படுத்துவதற்கு இந்த வழிகள் நிச்சயம் உதவியாக இருக்கும். 

உடலை மேம்படுத்துவதற்கும், உடல் சிறப்பாக இயங்குவதற்கும் உடற்பயிற்சிகள் இருப்பதுபோல் அறிவுத் திறனை மேம்படுத்துவதற்கு சில அவசியமான பயிற்சிகள் தேவை. 

பயிற்சிகள் என்றவுடன் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அன்றாடம் நாம் மேற்கொள்ளும் நமது பழக்க வழக்கங்களின் மூலம் ஆரோக்கியமான செயல்திறன்மிக்க மூளையை நம்மால் உருவாக்க முடியும்.

ஒமேகா-3 உள்ள உணவு வகைகளை உள்கொள்ளுங்கள்:

ஒமேகா-3 உள்ள உணவு வகைகளைச் சாப்பிடப் பழகுங்கள். நமது தசைகள் வலுப் பெறுவதற்கு புரதம் சாப்பிடுவதுபோல், நமது எலும்புகள் வலுப் பெறுவதற்கு கால்சியம் உள்ள உணவுகளைச் சாப்பிடுவது போல் நமது மூளை வலுவடைய செயல்திறன் மிக்கதாக மேம்பட ஒமேகா-3 உள்ள உணவு வகைகளை சாப்பிட வேண்டும். மனித மூளை 60 சதவீத கொழுப்பால் ஆனது. அதற்குள் மிகப்பெரும் அளவு ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் தான் உள்ளது. தொழில் முனைவோர்கள் மிக வேகமாகவும், அதிக செயல்திறனுடனும் செயல்பட வேண்டியதாக இருக்கும். அதற்கு தேவையான நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு இது உதவுகிறது.   

ஒமேகா- 3 இருக்கும் உணவு வகைகள் மட்டும் தான் நமது சிந்தனைத் திறனை மேம்படுத்தும். நினைவாற்றலை அதிகரிக்கும். 

கவனத்தை ஒருங்கிணைக்கும். இன்னும் சொல்லப்போனால் மனிதனின் மனநிலை மற்றும் மனித முகத்தின் கவர்ச்சி போன்றவற்றை தீர்மானிப்பதிலும் கூட ஒமேகா-3 - இன் பங்கு இருக்கிறது. 

அதையும் தாண்டி தகவல்களை ஒருங்கிணைத்து சரியான தீர்வினை எடுப்பதற்கான திறனையும் இது வழங்குகிறது. ஒமேகா 3 மீன் உணவுவகைகளில் இருக்கிறது. 

சதுரங்கம் விளையாடுங்கள்: 

தொழில்முனைவோர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள - இன்றைய சந்தையில் தங்கள் வணிகத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமென்றால் கடுமையாக உழைப்பதுடன், சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

பொதுவாக மூளையின் இடது பகுதி ஆப்ஜெக்ட்டை  ஒழுங்கமைக்கிறது எனவும், வலது பகுதி பேட்டர்னை  ஒழுங்கமைத்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் செஸ் எனப்படும் சதுரங்கம் விளையாடுவது மூளையின் இரு பகுதிகளையும் பயன்படுத்துவதாக 2010- இல் வெளிவந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

மேலும் மூளையினுடைய dendrites வளர்ச்சியை தூண்டுவதுடன் ஒரு நியூரானிலிருந்து தொடர்புடைய நியூரான்களுக்கு சமிக்ஞைகளையும்   விரைவாக கொண்டு செல்கின்றன. 

இந்த வேகமான நியூரான்களால் பொது நுண்ணறிவும், செயல்திறனும் உயரும். இதன் மூலம் தகவல்களைக் கொண்டு நமது நுண்ணறிவால் மிக விரைவாக செயல்பட முடியும்.

புதிய மொழி கற்றல்:

தொழில் முனைவோர்களின் பொதுவான விருப்பம் தங்கள் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்பது தான் .அதுவும் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தங்கள் தொழிலைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைப்பார்கள். அத்தகையவர்கள் புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் அதைச் செயல்படுத்த முடியும்.  புதிய மொழியைக்  கற்றுக் கொண்டு அவர்களின் கலாசாரத்திற்கு ஏற்ப நம்மால் புதிய விஷயங்களைத் தயாரித்துக் கொடுக்க முடியும். மேலும்  புதிய மொழியைக் கற்றுக் கொள்வதால் மனித மூளையும் வேகமாக வளர்ச்சி அடைகிறது. இதன் மூலம் நாம் நிறைய சாதிக்க முடியும்.  

மேலும் இது மூளை தசைகளை வலுப்படுத்தும். புதிதாக ஒரு மொழியைத் தொடர்ந்து கற்றுக் கொள்ளும்போது நமது ஹிப்போ காம்பல் அளவு அதிகரிக்கிறது.   இதனால் நமது நினைவாற்றல் அதிகரிக்கிறது எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தொழில் முனைவோர்களை பொருத்தவரை பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். கூடுதலாக மொழியை கற்று வரும் அல்லது கற்ற ஒரு தொழில் முனைவோர் மற்றவர்களைவிட சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் என்பதுடன் அந்த முடிவு உணர்வு பூர்வமாக இல்லாமல், அறிவுபூர்வமாக அமையும் என்கிறது சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். 

எழுத்துப் பயிற்சி:

பொதுவாகவே தொழில் முனைவோர்களுக்கு பலவிதங்களிலும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் ஏற்படும் பொழுதெல்லாம் விட்டமின் சி , விட்டமின் ஏ விட்டமின் டி , சின்க் உள்ளிட்ட மருந்து வகைகளையோ, உணவு வகைகளையோ அவர்கள் சாப்பிடுவது உண்டு. ஆனால் அதற்கு ஒரு மாற்று முறை இருப்பதே பலருக்கும் தெரியாது. 

மன அழுத்த நேரத்தில் ஏதாவது ஒன்றை நாம் எழுதத் தொடங்கினால் அது மன அழுத்தத்தை வெகுவாக சரிசெய்யும்.

இதற்காக மிக பெரும் எழுத்தாளராக மாற வேண்டிய அவசியமில்லை. சாதாரணமாக ஒரு விஷயத்தை மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதினாலே போதும் மன அழுத்தம் தானாகவே சரியாகிவிடும். கடந்த காலங்களில் எல்லாரும் கடிதம் எழுதும் வழக்கத்தை வைத்திருந்தோம். அதுபோன்று இப்பொழுதும் கூட உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதி நமது மன அழுத்தத்தைச் சரி செய்ய முடியும்.  எழுதுவது  எதைப் பற்றியும்  இருக்கலாம். 

தினமும் 15 முதல் 20 நிமிடம் வரை எழுதுவோருக்கு உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் மேம்பட்டு வருவதாக 2005 செப்டம்பரில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தினம்தோறும் டைரி எழுதும் வழக்கத்தைச் செயல்படுத்தி வந்தாலே மன அழுத்தத்தைத் தவிர்த்து விடலாம். 

ஆடல் பயிற்சி: 

இப்பொழுது பல இடங்களில் நாம் பார்த்திருக்க முடியும்.  திருமணம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளிலும்,  மரணம் போன்ற துக்கமான நிகழ்வுகளிலும், கோயில் திருவிழாக்கள், கொண்டாட்டங்களிலும் நடனம் ஆடுவது சாதாரணமாகிவிட்டது. 

ஆடல் பயிற்சி என்பது   மனிதர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன் ஒரு பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண்பதற்கும்  உதவுகிறது.

தொழில்முனைவோர்கள் பொருளை உற்பத்தி செய்வதுடன் அவர்களின் பணி நின்றுவிடுவதில்லை. உற்பத்தி செய்த பொருளை சந்தைக்கு கொண்டு சேர்த்து அதை விற்பது வரை பல இடங்களில் அவர்களின் பணி இருந்து வருகிறது. அனைத்திலும் கவனம் செலுத்தினால்தான் அவர்கள் வெற்றி காண முடியும். இந்த ஆடல் பயிற்சி புதுபுது உத்திகளையும், நுணுக்கங்களையும் அவர்களுக்கு அளித்து அவர்களின் சந்தை திறனை மேம்படுத்துகிறது என்கின்றன ஆய்வு முடிவுகள்.   ஆடலின் மூலம் உடலும், மனமும், அறிவும் ஆரோக்கியமாக இருக்கும்;  இதனால் தொழில் சிறப்பாக உயர்வடையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com