காய்ச்சல்... கரோனா!

தற்போதைய சூழலில் உலக மக்களின் செவிகளில் அதிகமாக பாயும் சொல் "கரோனா'. அந்த அளவுக்கு உலக நாடுகளை கரோனா நோய்த்தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது.
காய்ச்சல்... கரோனா!
Published on
Updated on
2 min read


தற்போதைய சூழலில் உலக மக்களின் செவிகளில் அதிகமாக பாயும் சொல் "கரோனா'. அந்த அளவுக்கு உலக நாடுகளை கரோனா நோய்த்தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. கரோனா நோய்த்தொற்று ஒருபுறமிருக்க பருவமழையும் தீவிரமடைந்து வருகிறது. 

பருவநிலை மாற்றம் காரணமாக சிலருக்கு சளி, காய்ச்சல் ஏற்படுவது வழக்கமானதே. ஆனால், கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கான முதல்கட்ட அறிகுறிகளாக சளியும் காய்ச்சலும் உள்ளதால் சாதாரண சளி, காய்ச்சல் ஏற்பட்டாலே பலருக்கு அச்சம் ஏற்பட்டுவிடுகிறது. நமக்கும் கரோனா நோய்த்தொற்று பாதித்துவிட்டதோ என்று அவர்கள் அஞ்சி நடுங்குகின்றனர். 

ஆனால், இந்த விவகாரத்தில் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கரோனா நோய்த்தொற்றுக்கும் சாதாரண காய்ச்சலுக்கும் ஏற்படும் அறிகுறிகள் ஏறத்தாழ ஒன்றுபோலவே இருப்பதன் காரணமாகவே மக்களிடையே அச்சம் ஏற்படுகிறது. 

இரண்டுக்கும் இடையேயான சிறிய வித்தியாசங்களைத் தெரிந்து கொண்டால் தேவையற்ற அச்சத்திலிருந்து தப்ப முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிக அளவிலான உடல் வெப்பம் (காய்ச்சல்), மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி உள்ளிட்டவை கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளன. 

சாதாரண காய்ச்சல் ஏற்படும்போதும் சளி, மூக்கடைப்பு போன்றவை ஏற்படுகின்றன. முதலில் நமக்கு காய்ச்சல் ஏற்படுவது ஏன் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளை சரிசெய்து கொள்ளும் திறன் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உள்ளது. 

நமக்குத் தீங்கு ஏற்படுத்தும் வைரஸ் உடலுக்குள் நுழையும்போது அதை எதிர்த்துப் போராடுவதற்கான பணிகளை நோய் எதிர்ப்பு மண்டலம் மேற்கொள்கிறது. அந்த வைரஸýக்கு எதிரான நோய்எதிர்பொருளை (ஆன்டிஜென்) எதிர்ப்பு மண்டலம் உருவாக்குகிறது. அந்த நோய்எதிர்பொருளானது நமது உடலில் நுழைந்த வைரஸýக்கு எதிராகப் போராடுகிறது. 

தீங்கு விளைவிக்கும் வைரஸýக்கு எதிராக நோய்எதிர்பொருள் வேலை செய்யும்போது நமது உடலின் வெப்பநிலை இயல்புநிலையை விட அதிகரிக்கிறது. அதுவே நமக்கு காய்ச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தவொரு வைரஸýக்கு எதிராகவும் நோய்எதிர்பொருள் உருவாகும். அப்படி உருவாகும்போது காய்ச்சல் ஏற்படுவது இயல்பானதே. 

கரோனா வைரஸýக்கு எதிராகவும் நோய் எதிர்ப்பு மண்டலம் நோய்எதிர்பொருளை உருவாக்கும் என்பதால்தான் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. எனினும், சாதாரண காய்ச்சலுடன் ஒப்பிடுகையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதீத காய்ச்சல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 

சாதாரண காய்ச்சல் ஏற்படும்போது உடல்வெப்பநிலை இயல்புநிலையை விட சிறிதளவே அதிகரித்துக் காணப்படும். கரோனா வைரஸôனது உலக நாடுகளில் புதிதாகப் பரவி வருவதால் அதற்கு எதிரான நோய் எதிர்பொருள் நமது உடலில் தோன்றியிருக்காது. அதன் காரணமாக அந்த நோய்எதிர்பொருளை உருவாக்குவதற்கு எதிர்ப்பு மண்டலம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டியிருப்பதால் காய்ச்சல் அதிக அளவில் ஏற்படுகிறது. 

சாதாரண காய்ச்சலுக்கு எதிரான நோய்எதிர்பொருள் நமது உடலில் ஏற்கெனவே இருக்கும். ஏனெனில் கடந்த காலங்களில் நமக்கு காய்ச்சல் ஏற்பட்டபோது அதற்கான நோய்எதிர்பொருளை நமது உடல் உருவாக்கியிருக்கும். குறிப்பிட்ட வைரஸýக்கு எதிராக நமது உடலில் ஒருமுறை நோய்எதிர்பொருள் உண்டாகிவிட்டால் அதற்குப் பிறகு எத்தனை முறை அந்த வைரஸ் நமது உடலுக்குள் நுழைந்தாலும் அது பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தடுக்கப்பட்டுவிடும்.  

சாதாரண காய்ச்சலுக்கான நோய்எதிர்பொருள் உடலில் ஏற்கெனவே இருப்பதன் காரணமாகவே நமக்கு அதிக அளவில் காய்ச்சல் ஏற்படுவதில்லை. அதேபோல் சாதாரண காய்ச்சலின்போது நமக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. மூக்கடைப்பும் சளியும் மட்டுமே இருக்க வாய்ப்புண்டு. 

கரோனா நோய்த்தொற்றானது முக்கியமாக நுரையீரலைத் தாக்கும் நோய் என்பதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. கரோனாவுக்கான மற்றொரு முக்கியமான அறிகுறி நுகரும் திறனும் சுவை உணர்வும் இல்லாமல் போவது. எனினும், சாதாரண காய்ச்சல் ஏற்படும்போது நமக்கு சளியும் ஏற்படுகிறது. அதீத சளி காரணமாக ஏற்படும் மூக்கடைப்பினால் கூட நுகரும் திறன் இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 

நுகரும் திறனும் சுவை உணர்வும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எனவே, மூக்கடைப்பு காரணமாக நுகரும் திறனை இழக்கும்போது சுவை உணர்வையும் இழக்க நேரிடுகிறது. அதேபோல், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும்போது நுரையீரலுக்குச் செல்லும் உயிர்வாயுவின் (ஆக்சிஜன்) அளவு குறைகிறது. சாதாரண காய்ச்சலின்போது ஆக்சிஜன் அளவு பெரும்பாலும் குறைவதில்லை. எனவே, காய்ச்சல் ஏற்படும்போது ஆக்சிஜன் அளவைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.  

சாதாரண காய்ச்சல் ஏற்படும்போது ஏற்படும் சளியானது அதிக திரவத்தன்மையுடன் இருப்பதால் மூக்கில் ஒழுகும். ஆனால், கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் ஏற்படும் சளியானது அப்படி இருப்பதில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மூக்கில் அதிக அளவில் ஒழுகாமல் நுரையீரலில் மட்டுமே சளி இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

ஒட்டுமொத்தத்தில் காய்ச்சல் ஏற்பட்டாலே அது கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள காய்ச்சலா என்று நாம் அச்சப்படத் தேவையில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் காய்ச்சல் 2-3 நாள்களில் சரியாகிவிடும் தன்மை கொண்டது. மூன்று நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மருத்துவரைத் தொடர்பு கொள்வது அவசியம். 

அப்படியே கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் காய்ச்சல் ஏற்பட்டாலும் கூட அது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 65 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் முன்னின்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மற்ற நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் போது விரைவில் குணமடைவதைப் போன்று கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதில் இருந்தும் எளிதில் மீண்டுவிட முடியும். எனவே, காய்ச்சல் குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் எந்தவித நோய்த்தொற்றில் இருந்தும் மீண்டு விடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com