நனவாகப் போகும் விண்வெளி சுற்றுலா!

விண்வெளியைப் பற்றி தெரிந்துகொள்வதே சுவாரசியமான விஷயம் என்றால், விண்வெளிக்கு சுற்றுலா செல்வது எத்தனை ஆச்சரியங்களை அளிக்கும்?
நனவாகப் போகும் விண்வெளி சுற்றுலா!

விண்வெளியைப் பற்றி தெரிந்துகொள்வதே சுவாரசியமான விஷயம் என்றால், விண்வெளிக்கு சுற்றுலா செல்வது எத்தனை ஆச்சரியங்களை அளிக்கும்? அந்தக் கனவும் நனவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் வெற்றி மூலம் தெரியவந்துள்ளது.

விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தில் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள்தாம் இதுவரை வெற்றியடைந்துள்ளன. அந்த வரிசையில் இணைந்துள்ளது அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்பேஸ் எக்ஸ் என்கிற தனியார் நிறுவனம். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தனது சொந்த விண்கலத்தையே பயன்படுத்தி வந்தது. அதில் ஏற்படும் செலவு, பாதுகாப்பு விஷயங்களைக் கருத்தில்கொண்டு, 2011-ஆம் ஆண்டுமுதல் ரஷியாவின் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி வருகிறது.

இச்சூழ்நிலையில்தான் முதல் முறையாக ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த விண்கலம் மூலம் ஐஎஸ்எஸ்-க்கு இரு வீரர்களை அனுப்ப முடிவு செய்தது. அதன்படி, பாப் பென்கன், டக் ஹர்லி ஆகிய இரு வீரர்கள் இரு மாதங்களுக்கு முன்னர் ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த "டிராகன்' என்கிற விண்கலம் மூலம் ஐஎஸ்எஸ்-க்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 63 நாள்கள் அவர்கள் ஐ.எஸ்.எஸ்.ஸில் தங்கி ஆராய்ச்சிப் பணிகளை முடித்த பின்னர், கடந்த ஆக. 1-ஆம் தேதி மீண்டும் அதே விண்கலத்தில் பூமிக்கு திரும்பத் தயாராயினர்.

வழக்கமாக விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் ரஷியாவின் சோயுஸ் விண்கலமானது இறக்கைகளைக் கொண்டது. அது பூமிக்கு திரும்பும்போது ஓடு பாதையில் விமானம் தரையிறங்குவதுபோலத் தரையிறங்கும். ஆனால், டிராகன் விண்கலமானது குடுவை போன்ற வடிவமைப்பைக் கொண்டது. ஆனால், சோயுûஸவிட அதிக இடவசதி கொண்டது. டிராகன் விண்கலமானது ஓடுபாதையில் இறங்க வழியில்லாத நிலையில் கடலில் பாராசூட் உதவியுடன் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. உடனே, மீட்புப் படகுகளில் சென்று, விண்கலத்தையும், அதிலிருந்த வீரர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த வெற்றி அமெரிக்க மக்களை மட்டுமன்றி, உலகம் முழுவதும் விண்வெளி ஆர்வலர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் டிராகன் விண்கலத்தை தயாரிப்பதற்கு நாசா நிதியுதவி அளித்துள்ளது என்றாலும், டிராகன் மீது எந்த பிரத்யேக உரிமையும் நாசாவுக்குக் கிடையாது. அதுபோல வெறுமனே விண்வெளி வீரர்களை மட்டும் அனுப்பும் பணியுடன் நில்லாமல், அடுத்தகட்டமாக பொதுமக்களையும் விண்வெளிக்கு சுற்றுலா போல அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
"விண்வெளி வீரர்கள் தமது ஆய்வுப் பணிக்காக விண்வெளிக்குச் செல்கிறார்கள் என்றால், செல்வந்தர்கள் ஒரு புதிய பார்வையில் உலகத்தைப் பார்ப்பதற்காக இந்த விண்வெளிப் பயணத்தை விரும்புவார்கள்; விண்வெளி வீரர்களை முதலில் அனுப்பி, பாதுகாப்பாக அழைத்து வந்து நிரூபிப்பதன் மூலம் விண்வெளிப் பயணம் குறித்த அச்சத்தைப் போக்க முடியும்' என நம்பிக்கை தெரிவிக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

ஏற்கெனவே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு திரைப்படத்தை படம்பிடிப்பதற்காக ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸூடன் ஸ்பேஸ் எக்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால விண்வெளி சுற்றுலாவுக்கான சாத்தியம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் கூறுகையில், ""நாங்கள் நிலவுக்குச் செல்லப் போகிறோம்; செவ்வாய் கிரகத்துக்கும் மக்களை அனுப்புவோம்; இந்த நாள் விண்வெளிப் பயணம் மற்றும் ஆராய்ச்சியின் புதிய யுகத்தை தொடங்கி வைத்திருக்கிறது'' என்கிறார்.

அறிவியல் தொழில்நுட்பம் மூலம் எத்தகைய சாதனையையும் நிகழ்த்த முடியும் என்பதற்கு எடுத்துகாட்டாகத் திகழ்கிறது டிராகன் விண்கலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com