ஐஐடியில் ஆன்லைன் படிப்புகள்!

இந்தியாவின் சிறந்த தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில் தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்) மற்றும் புரோகிராமிங் பாடத்திட்டங்களுக்கான ஆன்லைன் டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி பட்டப்
ஐஐடியில் ஆன்லைன் படிப்புகள்!
Updated on
2 min read


இந்தியாவின் சிறந்த தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில் தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்) மற்றும் புரோகிராமிங் பாடத்திட்டங்களுக்கான ஆன்லைன் டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி பட்டப் படிப்புகளை  அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியின் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைச் சென்றடைய சென்னை ஐ.ஐ.டி இலக்கு நிர்ணயித்துள்ளது. 
யார் சேரலாம்?: முதன்முறையாக, வயது அல்லது இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், பரந்த அளவிலான கல்விப் பின்னணியுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற எவரும் ஐ.ஐ.டி வழங்கும் ஆன்லைன் சான்றிதழ் படிப்பு , பட்டய படிப்பு,  பட்டப் படிப்பு   என எந்த படிப்புகளிலும் சேர்ந்து படிக்கலாம். பிளஸ் 2 முடித்தவர்களும்,  ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் மேலும் கல்லூரிகளில் வேறு இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.   பிளஸ் 2 முடித்தவர்கள் அடிப்படை வகுப்பில் (பவுண்டேஷன் கோர்ஸ்) தொடங்க வேண்டும், கல்லூரி அளவில் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக டிப்ளமோ மட்டத்தில் சேரலாம். தற்போது கல்லூரியில் படிக்கும் ஒருவர் இரண்டாம் பட்டமாக இந்த படிப்பை தொடரலாம். இளங்கலை பட்டம் படிப்பவர்கள், முடித்தவர்கள் எவரும் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் இந்தப் பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும் தங்களது கல்வித் தகுதியை உயர்த்த விரும்புபவர்களும் இதில் சேர்ந்து பயன் பெறலாம். இதில் சேருபவர்களுக்கு வயதுவரம்பில்லை. பாடங்கள் ஆன்லைனில் வழங்கப்படும் என்றும், தேர்வுகள் உள்பட அதன் மதிப்பீடு ஆஃப்லைன் பயன்முறையில் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழங்கப்படும் படிப்புகள்: ஆன்லைன் வழி பட்டப்படிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படுகிறது. 

அடிப்படைப் பட்டம்  (பவுண்டேஷன் புரோகிராம்)  - புரோகிராமிங்கில் டிப்ளமோ (டிப்ளமோ இன் புரோகிராமிங்)  

டிப்ளமோ பட்டம்   - தரவு அறிவியலில் டிப்ளோமா (டிப்ளமோ இன் டேடா சயின்ஸ்) 

இளநிலைப் பட்டப்படிப்பு   - புரோகிராமிங் மற்றும் தரவு அறிவியலில் பிஎஸ்சி பட்டம் (பி.எஸ்சி டிகிரி இன் புரோகிராமிங் அன்ட் டேடா சயின்ஸ்) 

பி.எஸ்சி டிகிரி இன் புரோகிராமிங் அன்ட் டேடா சயின்ஸ் படிப்பில் சேர்பவர்கள், மூன்று நிலைகளில் சொல்லித் தரப்படும் ஆன்லைன் படிப்பை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.  

ஏதேனும் காரணத்தால் அவ்வாறு முடிக்க இயலாதவர்கள் ஏதேனும் ஒரு நிலையில் படிப்பை விட்டு வெளியேறலாம்.  அப்படி வெளியேறியவர்களுக்கு அவர்கள் விலகிய நிலையைப் பொறுத்து ஃபவுண்டேஷனல் சர்டிபிகேட் ஐஐடி - மெட்ராஸின் தொடர்நிலைக் கல்வி மையத்தில் இருந்து வழங்கப்படும் அல்லது ஐஐடி - மெட்ராஸில் இருந்து டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். 

கட்டணம்: ஐ.ஐ.டி சென்னை அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய குறைந்த கட்டணக் கல்வி மாதிரியை முன்வைத்துள்ளது. தகுதியின் அடிப்படையில், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தகுதித் தேர்வுக்கு ரூ.3,000 கட்டணம் செலுத்த வேண்டும். சான்றிதழ், பட்டயம் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான கட்டணங்கள் தனித்தனியாக வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், நீங்கள் பதிவு செய்து படிக்கும் படிப்புகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். இது தொடர்பான கட்டணக் கட்டமைப்பு விவரங்கள், கட்டணச் சலுகைகள் தொடர்பான தகவல்களை ஆன்லைனில் சென்று தெரிந்து கொள்ளவும்.  

மாணவர்களுக்கு 4 பாடங்களில் (கணிதம், ஆங்கிலம், புள்ளிவிவரம் மற்றும் கணக்கீட்டுச் சிந்தனை) 4 வாரப் பாடநெறி உள்ளடக்கம் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்த மாணவர்கள் இணையத்தில் பாட விரிவுரைகளைக் கற்பதுடன், இணையத்தின் வாயிலாகவே தங்கள் கல்விப் பணிகளைச் சமர்ப்பிப்பார்கள். 
மேலும் 4 வாரங்களின் முடிவில் தகுதித் தேர்வை எழுதுவார்கள். குறைந்த எண்ணிக்கையிலான வளாக இடங்கள் காரணமாக தடை செய்யப்பட்ட ஐ.ஐ.டி.களின் வழக்கமான சேர்க்கை செயல்முறைகளுக்கு மாறாக, இந்தத் திட்டத்தில் அனைத்து மாணவர்களும் (ஒட்டுமொத்த மதிப்பெண் 50 சதவீதத் தேர்ச்சியுடன் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும்) அடிப்படைப் பட்டத்திற்குப் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள். வகுப்புகள் அக்டோபர் 5  -ஆம் தேதி முதல் தொடங்கப்படும்.  
படிப்பு காலம்: 3 - 6 ஆண்டுகள். இதற்கான காலம் கல்வித்திட்டத்தில் சேர்ந்து படிப்பவரின் திறன் மற்றும் மதிப்பீடுகளின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு பாடத்திட்டத்தின் காலமும் 12 வாரங்கள், ஒவ்வொரு வாரமும் 2-3 மணிநேர விடியோக்கள் மற்றும் ஆன்லைன் படிப்புகள் இருக்கும். ஒவ்வொரு பாடநெறிக்கும் 3 விநாடி வினாக்கள் மற்றும் ஒரு இறுதி கால தேர்வு 
இருக்கும்.   
விண்ணப்பிக்கும் காலம்: இந்த கல்வித் திட்டத்தில் சேர்வதற்கு 2.5 லட்சம் விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் அனுமதிக்கப்பட்டிருக்கும்.  
இந்தத் திட்டம் லாபகரமான ஒரு துறையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பிரகாசமாக்குவதுடன், பணிபுரியும் பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. 
மேலும் ஐ.ஐ.டி சென்னை போன்ற தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பையும் கற்பவர்களுக்கு வழங்குவதுடன் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய குறைந்த கட்டணக் கல்வி மாதிரியை முன்வைக்கிறது. இது ஐ.ஐ.டியில்  வேறு ஒரு பரிணாமத்தில் கற்பித்தலை விரிவாக்கும் என்பது சிறப்பு.

இந்த பட்டப்படிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு  https://wwwonlinedegree.iitm.ac.in என்ற இணையதளத்தைப் பாருங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com