
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த வனப்பு மிகு மாவட்டம். இங்கு இயற்கை காட்சிகளாகட்டும், பாரம்பரிய சின்னங்களாகட்டும், ஆங்கிலேயர் மிச்சம் வைத்துவிட்டுப் போனவையாகட்டும், பழங்குடியினராகட்டும், மலை ரயிலாகட்டும், வன உயிர்களாகட்டும் ஒவ்வொன்றுமே ரசிக்கக்கூடிய அம்சங்கள்தாம். ஆனால், இவை அனைத்தையும் எவ்வளவு பேர் ரசித்திருப்பார்கள் என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் அத்தகைய வாய்ப்புகள் கிடைக்காதோருக்கும் ஒரு நல்வாய்ப்பாக அமைந்திருப்பதுதான் உதகையில் காந்தல் பகுதியை சேர்ந்த புகைப்படக்கலைஞர் வி.மதிமாறன் நடத்தி வரும் புகைப்படக் கண்காட்சிகள்.
ஒரு மிகப்பெரிய வரலாற்றை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள். கடந்த கால பல நினைவுகளும் இவற்றை உணர்த்தியுள்ளன. அதைப்போலவே நீலகிரியைக் குறித்து மதிமாறன் எடுத்துள்ள புகைப்படங்கள் நீலகிரியின் வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்கும் விவரிக்கும் பொக்கிஷங்கள் என்றால் அது மிகையல்ல. இதை கருத்தில் கொண்டுதான் இவ்வாண்டு குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மதிமாறனுக்ரு சிறப்பு விருது வழங்கியும் கவுரவித்துள்ளார். தனி நபராகவும், பல்வேறு இயற்கை அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களோடு இணைந்தும், கல்லூரிகள், விழாக்கள் போன்றவற்றிலுமாக இதுவரை தனது படைப்புகள் அனைத்தையும் கடந்த 12 ஆண்டுகளில் 6,025 முறை காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தனது புகைப்படக் கண்காட்சிகள் குறித்து மதிமாறன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:
""தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் பண்டைய பழங்குடியினர் எனப்படும் 6 வகையான பழங்குடியினரும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் தோடர்கள் மற்றும் கோத்தர் இன மக்களைக்குறித்து வெளி உலகினர் தெரிந்து வைத்திருந்தாலும் ஏனைய பழங்குடியினரான குரும்பர், இருளர், பணியர் மற்றும் காட்டுநாயக்கர்களைக் குறித்து உள்ளூர் மக்களுக்கே அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. இவர்களையும், இவர்களது வாழ்க்கை முறை குறித்தும் புகைப்படமாக வெளிக்கொண்டு வந்த போதுதான் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கே அவர்கள் குறித்து ஓரளவுக்கு விவரங்கள் தெரியவந்தன. நான் எடுத்துள்ள பல புகைப்படங்களை உதகையிலுள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தினரும் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். பழங்குடியின மக்கள் இன்னமும் இயற்கையை காயப்படுத்தாமல் தங்களது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டுள்ளதால் பழங்குடியினரைக் குறித்து எனது புகைப்படங்கள் வாயிலாக தெரிவித்த கருத்துகள் மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை வரை கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் காரணமாகவே மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமும் எனக்கு விருது வழங்கி சிறப்பித்தது.
நீலகிரியில் வசிப்போரே நீலகிரியைக் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில்தான் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் எனது புகைப்படக் கண்காட்சியை நடத்துகிறேன். இதன் மூலம் தாங்கள் நேரில் காண முடியாத வெளியுலகக் காட்சிகளை புகைப்படங்கள் வாயிலாகப் பார்க்கும் ஏழை பள்ளி மாணவர்கள் இயற்கையை நேசிப்பதைக் குறித்தும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதைக் குறித்தும் இளம் வயதிலேயே ஆர்வம் உள்ளவர்களாக மாறிவிடுகிறார்கள். இதன் மூலம் எதிர்கால நீலகிரி காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை விதையையும் விதைத்து வருகிறேன்.
அதேபோன்று, மனித- விலங்கு மோதல் குறித்தும் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்துள்ளேன். இதன்மூலம் மனித-விலங்கு மோதலுக்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்யவும் வாய்ப்புக் கிடைக்கிறது. உதாரணமாக பர்லியார் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதற்கு அங்கு கடைகளில் விற்பனை செய்யப்படுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் பலாப்பழங்களே காரணம் என்பதை புகைப்படங்கள் மூலம் விளக்கியதையடுத்து தற்போது பர்லியார் பகுதியில் பலாப்பழம் விற்கவே மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இதைப் போலவே நீலகிரியின் புகழ் பெற்ற பாரம்பரிய சின்னங்கள், மலை ரயில், இயற்கை இடர்ப்பாடுகள் போன்றவற்றைக் குறித்தெல்லாம் தனித்தனி பிரிவுகளாக புகைப்படங்கள் எடுத்துள்ளேன். எந்த இடத்தில் என்ன தலைப்பில் புகைப்படக் கண்காட்சி வேண்டுமென கேட்கிறார்களோ அதற்கேற்றவாறு இட வசதிக்குட்பட்டு 1,000 படங்கள் வரை காட்சிப்படுத்துகிறேன். புகைப்படக் கலைஞராக கிடைக்கும் வருவாயைக் கொண்டே கண்காட்சிக்கான புகைப்படங்களுக்குச் செலவிடுகிறேன். எனது இத்தகைய முயற்சிகளை ஆதரிப்பவர்களும் உண்டு, அவமானப்படுத்தியுள்ளோரும் உண்டு. ஆனால், எதிர்மறை பேச்சுகள் என்னை ஊக்கப்படுத்தியே வருகின்றன' என்றார் மதிமாறன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.