தனிமையால் அதிகரிக்கும் மன அழுத்தம்!

எந்த ஒரு பிரச்னைக்கும் தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் அதற்கான தீர்வை தேடிக் கொண்டே பல நாட்கள், பல மாதங்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது மனிதர்களின் மனதில் மிகப்பெரும் மன
தனிமையால் அதிகரிக்கும் மன அழுத்தம்!

எந்த ஒரு பிரச்னைக்கும் தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் அதற்கான தீர்வை தேடிக் கொண்டே பல நாட்கள், பல மாதங்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது மனிதர்களின் மனதில் மிகப்பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.

அந்த வகையைச் சேர்ந்தது தான் இன்று உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா நோய்த்தொற்று. அதற்குதற்போது கூறப்படும் ஒரே தீர்வு தனித்திரு, சமூக இடைவெளியுடன் இரு, வீட்டில் இரு என்பதுதான்.

அப்படி ஒரு மனிதன் தனிமைப்படுத்தப்படும்போது அவன் மனதில் உருவாகும் மன அழுத்தங்களை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

கரோனா தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நபர்களின் மன அழுத்தமும், அவர்களுடைய சுவாசப் பிரச்னையும் அதிகரித்து வருவதாக சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பல மாதங்கள் தனித்து இருத்தலும், மற்றவர்களை விட்டு, சமூகத்தை விட்டு விலகி இருத்தலும் ஒருவருக்கு நோய் பாதிப்பின் அளவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர் ஷெல்டன் கோஹென் தெரிவிக்கிறார்.

அவர் மேற்கொண்ட உளவியல் ஆய்வுகளின் அடிப்படையில் நோய்த் தொற்றின் காரணமாக தனித்துவிடப்பட்டு இருப்பவரின் மனதில் தோன்றக்கூடிய பல்வேறு விஷயங்கள் நோய் பாதிப்பை அதிகரிக்கக் கூடிய தன்மையைப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

பொதுவாக ஏதோ ஒரு வகையான சாதாரண நோய் தொற்றுக்கு ஆளாகும் போது கூட ஒருவரின் வழக்கமான நடவடிக்கையில் மாறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதேபோல் சமூகமும் தன் பங்கிற்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விமர்சிக்கும்போது நோய்தொற்று கண்டவரின் வழக்கமான செயல்பாடுகளில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்படலாம். இது கூட நோய் பாதிப்பின் அளவை அதிகரிக்கலாம் என்கிறார் அவர்.

இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்ட நிலையில் நோய்த்தொற்று காலங்களில் இதுபோன்று ஏற்படும் உளவியல் மாற்றங்கள் முதன்முதலில் சுவாசக் கோளாறு பிரச்னைகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் தெரிய வருவதாகவும் கூறுகிறார்.

சாதாரண சளியைஏற்படுத்தும் எட்டு விதமான வைரஸ் பாதிப்புகளை அவர் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்.

கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களை அல்லது சளியால் பாதிக்கப்பட்டவர்களை இந்த சமூகம் நடத்தும்விதமும்,

அதனால் நோயால் மட்டுமல்ல, மனதாலும் பாதிக்கப்படும்போது எந்த வகையான தாக்கத்தை பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்புக்கு அவை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதையும் ஆய்வு செய்திருக்கிறார். அது நோய்த் தொற்றின் தீவிரத்தை தணிக்கிறதா? அல்லது குறைக்கிறதா? அல்லது நோயாளியைப் பாதுகாக்கிறதா? என்பது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்ட போது, அதிர்ச்சி தரும் முடிவுதான் அவருக்குக் கிடைத்ததாகக் கூறுகிறார்.

இந்த சமூகமும் பாதிக்கப்பட்டவரின் உளவியல் சிந்தனைகளும் நோய்த்தொற்றின் தீவிரத்தை அதிகரிப்பதாகவே அந்த ஆய்வுகள் காட்டுவதாக அவர் கூறுகிறார்.

நோய் தொற்று பரவாமல் இருக்க பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் இருக்கச் சொல்கிறோம். ஆனால் வீட்டில் தனித்து இருப்பவர்களுக்கு வேலை இல்லாத நிலைமை, குடும்ப பிரச்னைகளின் காரணமாக மன அழுத்தம் அதிகரித்து வருகிறது.

சமூக மற்றும் உளவியல் அழுத்தங்கள் பாதிக்கப்பட்டவரின் சைட்டோகைன்ஸ் உற்பத்தியை அதிகரிக்கின்றன. அதாவது தேவைக்கு அதிகமான நோய் எதிர்ப்புத்திறனை ஏற்படுத்துகின்றன. இதனால் நோய் பாதிப்புடன் கூட வேறுவிதமான உடல்நலப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

""சாதாரண சளி உள்ள ஒருவரையே அவரது உளவியலும், சமூக அழுத்தமும் சைட்டோகைனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நோய் தாக்கத்தை அதிகப்படுத்தும் நிலையில் கோவிட் தொற்று உள்ளவர்களுக்கு இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை சமூகம் உணர வேண்டும்'' என்கிறார் பேராசிரியர் ஷெல்டன் கோஹென்.

எனவே, நேர்மறை சிந்தனைகளும், மன அழுத்தத்தை போக்கும் நடைமுறைகளுமே நோய்த்தொற்றின் தாக்கத்தை பெருமளவிற்கு குறைக்க வழி செய்யும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து பின்பற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com