கைகொடுக்கும் தொழில் நுட்பங்கள்!

தற்போது கரோனா நோய்த்தொற்று உலக நாடுகளுக்குப் பெரும் சவால் விடுத்து வருகிறது.
கைகொடுக்கும் தொழில் நுட்பங்கள்!

தற்போது கரோனா நோய்த்தொற்று உலக நாடுகளுக்குப் பெரும் சவால் விடுத்து வருகிறது. எனினும், கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் அதற்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதிலும் தொழில்நுட்பங்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.

கரோனா நோய்த்தொற்று தொடர்பான உண்மையான தகவல்களை வழங்குவதிலிருந்து நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் வரை தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவி வருகின்றன. முக்கியமாக, கரோனா நோய்த்தொற்று தொடர்பாகத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பதில் தொழில்நுட்பம் முன்னின்று வருகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியதால் அவர்களிடையே சமூக வலை
தளங்களின் பயன்பாடு மேலும் அதிகரித்தது. அத்தகைய சூழலில் கரோனா நோய்த்தொற்று குறித்த தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக வலம் வந்தன.

பொது முடக்கம் தொடர்பாக போலியான செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதால் அத்தியாவசியப் பொருள்களை மக்கள் அதிக அளவில் பதுக்கி வைக்கத் தொடங்கினர். அதன் காரணமாக அவற்றின் விலை அதிகரித்தது. சில இடங்களில் போலியான தகவல்கள் காரணமாக வன்முறையும் ஏற்பட்டது.

இவ்வாறு கரோனா நோய்த்தொற்று தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொழில்நுட்பங்களின் உதவியுடன் தடுக்கப்பட்டது. கூகுள், ஃபேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய வலைதளங்களில் போலியான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டன. கரோனா நோய்த்தொற்று தொடர்பான எந்தவொரு விவரங்களையும் உலக சுகாதார அமைப்பின் வலைதளத்திலிருந்து அறிந்து கொள்ளும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் பலர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தொழில்நுட்பம் மிக முக்கிய உதவிகளைச் செய்து வருகிறது. முக்கியமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விஞ்ஞானிகளின் பணிகளை எளிமைப்படுத்தி வருகிறது.

கரோனா தீநுண்மியின் தன்மையை ஆராய்வது, கரோனா நோய்த்தொற்று தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை விரைந்து ஆராய்வது, தடுப்பு மருந்தை தன்னார்வலர்களிடம் செலுத்தி பரிசோதனை செய்வது, பரிசோதனை முடிவுகளை ஆராய்வது உள்ளிட்ட விவகாரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் பங்காற்றி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக குறிப்பிட்ட பகுதிகளில் வரும் காலங்களில் கரோனா நோய்த்தொற்று எந்த விகிதத்தில் பரவும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும். மேலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் உள்ளிட்டவற்றையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாகக் கண்டறிய முடியும். குறிப்பிட்ட நபருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அவை கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் தோன்றும் அறிகுறிகளா அல்லது மற்ற நோய்த்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள அறிகுறிகளா என்பதையும் இத்
தொழில்நுட்பம் மூலமாகக் கண்டறிய இயலும்.

அதன் மூலமாக அந்த நபருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்து விட முடியும். இதன் வாயிலாக கரோனா பரிசோதனைக் கருவிகளுக்கான செலவும் குறையும். பொது இடங்களில் அதிகமானோர் கூடும் பகுதிகளில் யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா என்பதையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாகக் கண்டறிய முடியும்.

கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கண்டறிவதற்கும் தொழில்நுட்ப சாதனங்கள் பெரிதும் உதவி வருகின்றன. உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் கருவி, உடல் செல்களின் திசுக்களில் உள்ள உயிர்வாயுவின் (ஆக்சிஜன்) அளவைக் கண்டறியும் கருவி போன்றவை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க உதவி வருகின்றன.

அதேபோல், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் யாருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதைக் கண்டறியவும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் விதிமுறைகளை மீறி பொது வெளிகளில் சுற்றித் திரிகிறார்களா என்பதைக் கண்டறியவும் செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதியை இணைப்பதன் மூலமாக தனிமனித இடைவெளியை மீறுவோர், தனிமைப்படுத்தலை மீறி வீதிகளில் திரிவோர் உள்ளிட்டோரை எளிதில் கண்டறிய முடியும்.

கரோனா நோய்த்தொற்றானது ஒருவரிடமிருந்து மற்ற நபர்களுக்குப் பரவும் என்பதால் ரோபோ உள்ளிட்ட தானியங்கி இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. முக்கியமாக மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கான மருந்து, உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு ரோபாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கரோனா வார்டுகளில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

கரோனா நோயாளிகளை ஒரு வார்டிலிருந்து மற்றொரு வார்டுக்கு மற்றவர்களின் துணையின்றி அழைத்துச் செல்வதற்கான தானியங்கி இயந்திரங்கள் உள்ளிட்டவையும் பயன்பாட்டில் உள்ளன. அதேபோல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கும் வீடுகளுக்கும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு "டிரோன்கள்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த டிரோன்களைக் கொண்டு வீதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கரோனா நோய்த்தொற்றின் காரணமாக, பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்குவித்து வருகின்றன. ஆனால், பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுகையில் நிறுவனத்தின் தகவல்களைப் பாதுகாப்பாக வைப்பதில் பல சிக்கல்கள் எழுகின்றன.

அது போன்ற பிரச்னைகள் அனைத்துக்கும் தொழில்நுட்பங்களே சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறந்த தொழில்நுட்ப வசதிகள் காரணமாகவே இத்தகைய சூழலிலும் எந்தவிதப் பிரச்னையுமின்றி பலரால் வீட்டிலிருந்தே பணியாற்ற முடிகிறது. பள்ளி, கல்லூரி வகுப்புகளும் காணொலிக் காட்சி வாயிலாக எந்தவிதத் தடங்கலுமின்றி நடைபெற தொழில்நுட்பம் பெரிதும் உதவி வருகிறது.

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் தொடர்ந்து வருகிறது. அதன் காரணமாக புதிய நோய்களும் உருவாகி வருகின்றன. கரோனா நோய்த்தொற்று போன்று மனித சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய்த்தொற்று அடுத்து எப்போது ஏற்படும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், சிறந்த தொழில்நுட்ப வசதிகள் மூலமாக அவ்வாறான நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். எனவே, வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள்குறித்த அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com