இது நன்னம்பிக்கைமுனை!

எங்கு பார்த்தாலும், எப்படி பார்த்தாலும் கரோனா என்பதே பேச்சாகிவிட்டது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இது நன்னம்பிக்கைமுனை!

எங்கு பார்த்தாலும், எப்படி பார்த்தாலும் கரோனா என்பதே பேச்சாகிவிட்டது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. புதிய தினங்கள் ஒவ்வொன்றும் புதுமையான உணர்ந்த இளைஞர்களால் வீட்டில் முடங்கிக் கிடக்க முடியவில்லை. அதைவிட, வீட்டில் "சும்மா' இருக்க முடியவில்லை.

எவ்வளவுநேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பது?, எவ்வளவு நேரம் செல்லிடப் பேசியை நோண்டிக் கொண்டிருப்பது? நாளொருநாளாய் நகர்ந்தாலும் வாழ்க்கை மட்டும் உப்பில்லா பண்டமாகவே இருக்கிறது. புத்துணர்ச்சி இல்லாத இளைஞர்கள், புத்தெழுச்சிபெறாத நாள்கள். கரோனா தீநுண்மியும் நகர்ந்துபோகும், சோம்பல் நிறைந்த நாட்களும் நகர்ந்துபோகும். அதுவரை? ஒருவகையில் இது கடினமான காலம் தான். நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் சோர்வான, சோம்பலான காலத்தை தான் எதிர்கொண்டிருக்கிறார்கள். கல்வி தடைபட்டுள்ளதால் வருந்துகிறீர்களா? அப்படியானால், வீட்டில் இருக்கும் காலத்தைமுறையாக பயன்படுத்துங்கள். இது முடங்கியிருப்பதற்கான காலமல்ல, புதிய முயற்சிகளுக்கான காலம்.

எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான வாய்ப்பைத் தேடுங்கள். உங்களில் ஒளிந்திருக்கும் ஆற்றல், விருப்பம், நோக்கம், வாய்ப்புகள், இலக்குகளை அசைபோடுங்கள். கடந்த காலத்தில் செய்த சிற்சிறு தவறுகளை கண்டறிந்து, அவற்றில் இருந்து விடுபட்டு, செயல்திறனை மேம்படுத்துவது குறித்து ஆராயுங்கள். வழக்கமான பாடத்திட்டத்தில் இருந்து, உங்கள் ஆற்றலுடன் பொருந்தக் கூடிய, சிறந்து விளங்கும் பாடத்தைக் கண்டறிந்து, அதில் தேர்ச்சிபெற தேவையான முயற்சிகளில் ஈடுபடுங்கள். உங்களுடைய ஆர்வத்துடன் பொருந்தும் ஏராளமான இணையவழி பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் குவிந்துள்ளன. அவற்றை தேடிக் கண்டுபிடித்து, பயிற்சிபெறுங்கள். வழக்கமான பாடத்திட்டத்துடன் திறன்சார் கல்விக்கு வேலைவாய்ப்பின்போது முக்கியத்துவம் தரப்படுவதைக் கவனியுங்கள்.

பாதையின் குறுக்கே மலை நிற்பது போல "எல்லா முடிந்துவிட்டது' போல உணர்ந்தால், உங்கள் பெற்றோர், உடன்பிறந்தோர், குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகளிடம் பேசிப் பாருங்கள். இதேபோன்றதொரு கடினமான காலகட்டத்தை கடந்து பயணப்பட்டிருப்பதாக பல கதைகளைச் சொல்ல கேட்கலாம். கற்களும், முட்களும்நிறைந்த கரடுமுரடான பாதைகளை கடந்து வந்ததன் விளைவாக, தங்களை மேலும் வலிமையாக்கிக்கொண்டு, எதையும் தாங்கும் திறன்பெற்று, திறமையானவர்களாக தகுதிப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விமான ஓட்டியாகும் (பைலட்) தனது இளமைக்கால விருப்பத்தை மயிரிழையில் தவற விட்டார். இந்திய விமானப்படையில் 8 விமான ஓட்டி பணியிடங்கள் காலியாக இருந்தபோது, 9 -ஆவது இடத்தைப் பிடித்ததால் விமான ஓட்டியாகும் கனவு நனவாகவில்லை. எனினும், விஞ்ஞானியாகவும், குடியரசுத் தலைவராகவும் உருவெடுத்தார். அவர்,""சிக்கல்கள் நிறைந்த, கடினமான காலம்தான் வளர்ச்சிக்குத் தேவையான வாய்ப்புகளை அள்ளித்தரும். நம்பிக்கைகள், கனவுகள், இலக்குகள் சிதறடிக்கப்படும்போது, இடிபாடுகளின் சிதைவுகளில் தேடிப் பாருங்கள் பொன்னான வாய்ப்புகள் காத்திருக்கும்''என்றார்.

நீண்டகால இலக்குகளை குவிநோக்கமாக வைத்து வாய்ப்புகளைத் தேடுங்கள். தேர்வுகளில் மட்டுமே வெற்றி ஒளிந்திருப்பதில்லை. தேர்வுகள் வெற்றிக்கான ஆயிரக்கணக்கான படிக்கட்டுகளில் ஒன்று,அவ்வளவுதான். எனவே, வளர்ச்சிக்கான சிந்தனையோடு இக்காலத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொண்டால், வாழ்க்கையின் இலக்கு வசப்படும்.

தீர்வைநோக்கிய சிந்தனை மனதை நிறைத்திருந்தால், வளமான, வலிமையான எதிர்காலத்தை கட்டமைக்க செங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக்கொண்டிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். கரோனா காலம், எதிர்கால கனவுகளுக்கு மிகச்சிறந்த நன்னம்பிக்கைமுனை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com