சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் - 100

இன்றையப் பொருளாதாரச் சிக்கல்களால் எண்ணற்ற குடும்பங்களின் வருமான வாய்ப்பு என்பது மிக மிகக் குறைவாக இருக்கிறது.அவர்கள் தங்களது குழந்தைகளின் கல்விச் செலவை முன்கூட்டியே திட்டமிடாத
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் - 100

இன்றையப் பொருளாதாரச் சிக்கல்களால் எண்ணற்ற குடும்பங்களின் வருமான வாய்ப்பு என்பது மிக மிகக் குறைவாக இருக்கிறது. அவர்கள் தங்களது குழந்தைகளின் கல்விச் செலவை முன்கூட்டியே திட்டமிடாத காரணத்தினால், அவர்களின் தற்போதைய மிகப் பெரிய கவலை என்பது கல்விக்கட்டணம் செலுத்துவது ஆகும். தற்போது தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு கல்விக் கட்டணத்தை உயர்த்துவதாகஅறிவித்துள்ளது.

இந்த தருணம் பள்ளிகளுக்கு ஒரு சவாலான தருணம் ஆகும். "இந்த மாணவர்கள் நிச்சயமாக நாம் விதைக்கும் விதைகள்; இவர்கள் பிற்காலத்தில் சமூகத்தில் மிக முக்கியமான பணியாற்றுவார்கள் மற்றும் பள்ளிக்கே பெருமை தேடித் தருவார்கள்' என்ற குறிக்கோளுடன் மாணவர்களை உருவாக்குவது பள்ளிகளில் அடிப்படைக் கடமையாகும். இவர்கள் தரும் கல்வியினால் எதிர்காலத்தில் மாணவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற உயரிய சமூக நோக்குடன், எண்ணங்களுடன் பள்ளிகள் செயல்பட வேண்டியது அவசியம்.

இந்தியாவைப் பொருத்தவரை கல்வி என்பது சமுதாய சேவை என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் அல்லது கல்லூரிகளை யாரேனும் தொடங்கினால், சொசைட்டி அல்லது டிரஸ்ட் ஆகவே இருக்க வேண்டும் என நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்தக் கரோனா கொடிய நோயினால், பள்ளிகளில் எண்ணற்ற கட்டுப்பாடுகள் அவசியமாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. உதாரணமாக, தனிமனித இடைவெளி என்பது, மிக முக்கியமான ஒன்றாகும். வகுப்பறையை மாற்றியமைப்பது அல்லது இரண்டு அல்லது மூன்று சுழற்சி முறையில் பள்ளியை நடத்தத் திட்டமிடுவது என தீவிரமாக ஆராய வேண்டிய சூழல் இது. வகுப்பறையில், 60 மாணவர்கள் அமர முடியும் என்றால், தற்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியதன் காரணமாக, 20 மாணவர்களைத்தான் அந்த வகுப்பறையில் அமர வைக்க முடியும். தற்போது இருக்கும் ஒரு வகுப்பறை மூன்றாக மாற்றப்பட்டால், இவர்களை எத்தனை வகுப்புகளாக மாற்ற வேண்டும்? மற்றும் இதற்கு பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட வேண்டும்? எதிர்பாராதவிதமாக ஆசிரியர் விடுப்பு எடுக்க வேண்டியிருந்தால் வகுப்புகளை நடத்த தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை உட்பட அனைத்தையும் பள்ளிகள் திட்டமிட வேண்டியுள்ளது. இவற்றைப் பற்றி எல்லாம் பெற்றோர்களுக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டியது பள்ளியின் முக்கிய கடமையாகும்.

பள்ளியில் மாணவர்கள் வகுப்பிற்கு வரக் கூடிய நேரத்தைப் பிரித்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் அளவுக்குத் திட்டமிடல் வேண்டும். பள்ளியில் பணிபுரியும் அனைவருக்கும் இந்த நோய் தொற்று உள்ளதா என்பதைத் தினமும் பரிசோதிக்க வேண்டும். பள்ளி முழுவதும் கிருமிநாசினி கொண்டு நாள்தோறும் சுத்தப்படுத்துவது என்பது மிகவும் இன்றியமையாததாகும். இதற்கு பள்ளிகள் தற்போது செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகைக்கும் மேலாக செலவிட வேண்டிய அவசியத்தில் உள்ளனர்.

மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்ற தகவலைப் பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பாகவே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

தனியார் பள்ளிகளின் நிர்வாகம், காவலர்கள், பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து, பள்ளி திறப்பதற்கு முன்னதாகவே ஒரு தெளிவான திட்டத்தை வரையறுக்க வேண்டும். இத்திட்டத்தில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களிடம் எவ்வாறு இந்தச் சூழ்நிலையைக் கையாளவேண்டும்? வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானத்தில் சமூக இடைவெளி எவ்வாறு இருக்க வேண்டும்? இந்த ஆண்டுக்கான பாடத்திட்டங்களை எவ்வாறு கையாள வேண்டும்? பாடத்திட்டத்தை முடிப்பதற்கு நேரம் இருக்கிறதா? தேர்வுகளுக்கு எவ்வாறு திட்டமிட வேண்டும்? ஒருவேளை தொற்று ஏற்பட்டால், மீண்டும் பள்ளியை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பாடத்திட்டங்களை எவ்வாறு முடிப்பது? மற்றும் எல்லா மாணவர்களையும், அழைத்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை, அருகாமையில் உள்ள கடைகள், இங்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் நடவடிக்கைகள் போன்ற எண்ணற்ற தகவல்களைப் பரிமாறிக் கொண்டு, எல்லா தரப்பினரையும் கலந்தாலோசித்து திட்டமிட வேண்டும்.

பள்ளி தொடங்கிய பிறகு, Covid }19 உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனைக் கருவிகள் பள்ளியின் நுழைவு வாயிலில் வைக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் முகக் கவசம் அணிந்து வருகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு அரசே முகக் கவசம் போன்றவற்றை இலவசமாகத் தர வேண்டும்.

Covid } 19 டெஸ்ட் கிட் மற்றும் கிருமிநாசினி போதுமான அளவு இருப்பு வைக்கப்பட வேண்டும். பள்ளிக்கு அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் சுகாதார அலுவலகம் வாயிலாக தினமும் பள்ளி உள்ள பகுதிக்கு அருகில் நோய்த் தொற்று உள்ளதா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு இருப்பின் அந்தப் பகுதியில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களைச் சோதனை செய்து தேவையானால் தனிமைப்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் உள்ள சிரமங்களைக் கணக்கில் எடுத்து, அவர்களுக்கு கல்வி பயில்வதற்கான சமவாய்ப்புகள் அளிப்பதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

பள்ளியில் விளையாட்டு Extra Curriculuar and Co}curricular activities தினமும் இருக்க வேண்டும்.குறைந்தபட்சம் 14 நாட்கள் இந்த நோய் பள்ளிக்கு அருகே உள்ள பகுதிகளில் வாழும் யாரையுமே தாக்காமல் இருந்தால் மட்டுமே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

நோய்வாய்ப்பட்டுக் குணமடைந்த குழந்தைகள் பள்ளிக்கு வந்தால், அவர்களை எவ்வாறு பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்பதற்கான திட்டமிடல் அவசியம். மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இதுபோன்ற திட்டமிடல்கள் குறித்த தகவல்களை பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தினால், பள்ளியின் மீது நம்பிக்கை ஏற்படும். பள்ளியின் மாணவர்களைப் பாதுகாக்கும் இந்த திட்டமிடல்களால் நமது குழந்தையை இந்தப் பள்ளி பாதுகாக்கும் என பெற்றோர்கள் கருதி தமது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

எண்ணற்ற பெற்றோர்கள் தற்போது பார்த்து வரும் வேலை உத்தரவாதம் இல்லாத நிலையில் இருக்கலாம். அல்லது வேலை இல்லாமலும் சிரமப் படலாம். இவ்வாறு துன்பப்படும் வீடுகளில் இருந்து வரும் மாணவர்கள் யாரெனப் பள்ளிகள் கண்டறிந்து, அந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருதி அவர்களது படிப்பில் தடை எதுவுமின்றி தொடர பள்ளிகள் இத்தருணத்தில் உதவி வேண்டும். ஏனெனில் இத்தகைய உதவியால் அந்த மாணவர் பின்னாளில் நாம் படித்த பள்ளிக்கு உதவ வேண்டுமென்று அன்புக் கரம் நீட்ட எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக, அன்றாடம் வேலை பார்த்து அதன் வாயிலாக மாணவர்களை அரசுப் பள்ளிக்கு அனுப்பும் எண்ணற்ற பெற்றோர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார்கள். இவர்கள் அனைவருக்குமே பள்ளி ஒன்றுதான் சிறந்த அடைக்கலமாக உள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளியின் காலநேரம் குறைக்கப்பட்டால், மாணவர்களின் பாதுகாப்பு குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலாக அமைகிறது. பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து இக்குழந்தைகளை எவ்வாறு பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லும் வரை பாதுகாக்க வேண்டும் எனத் திட்டமிட வேண்டும். அரசு இதுபோன்ற ஏழை மாணவர்களை மனதில் கொண்டு அவர்கள் நோயினால் பாதிக்கப்படாத அளவுக்கு அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

இத்தாலி போன்ற எண்ணற்ற ஐரோப்பிய நாடுகளில் பள்ளியை செப்டம்பர் மாதத்திற்கு பிறகு திறப்பதாக அறிவித்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சிறிது காலம் கழித்து பள்ளிகளைத் திறக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

(தொடரும்)


கட்டுரையாசிரியர் சமூக கல்வி ஆர்வலர் www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com