மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 72: தனித்துவத்தை உணர்ந்தால் புதுமை பிறக்கும்!

கப்பல், விமானம், பேருந்து, ரயில், சைக்கிள், மாட்டு வண்டி - அனைத்தும் பயணத்திற்காகப் பயன்படுத்தும் வண்டிகள்தாம்.
மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 72: தனித்துவத்தை உணர்ந்தால் புதுமை பிறக்கும்!

கப்பல், விமானம், பேருந்து, ரயில், சைக்கிள், மாட்டு வண்டி - அனைத்தும்
பயணத்திற்காகப் பயன்படுத்தும் வண்டிகள்தாம். ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தது. ஒன்று தரும் வசதியை, மகிழ்ச்சியை, வேகத்தை, சுகத்தை, அமைதியை, பொருளாதாரத்தை மற்றொன்று தரமுடியாது. சீறிப்பாயும் விமானமோ, விநாடிகளில் பறக்கும் ராக்கெட்டோ வண்டிப்பாதையில் ஒடாது. தண்டவாளத்தில் ஓடி விளையாடும் ரயில், ரோட்டில் ஒடாது. தண்ணீரின் மேல் கப்பல் செய்கிற அளவுக்கு போக்குவரத்து சேவையை வேறு எந்தப் போக்குவரத்து செய்ய முடியும்? ஒன்றைவிட மற்றொன்று உயர்வானதும் அல்ல; தாழ்ந்ததும் அல்ல. ஒரு வேளை அப்படி இருந்தால், அவை கால ஓட்டத்தில், காணாமல் போயிருக்கும்.

தனித்துவத்தை உணர்ந்தால்தான் புதுமை பிறக்கும். ஒவ்வொரு மருத்துவமுறையையும் புதிய அறிவியல் பூர்வமான முறையில் ஆராயும் முறையை வடிவமைக்க வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு மருத்துவ முறையின் முழுப்பலனையும், நம்மால் இந்த உலகினுக்கு சிதிலமடையாமல் தரமுடியும்.

ஆயிரக்கணக்கான மூலக்கூறுகள் நோய் தீர்க்கும் திறனுக்காகவும், பக்க விளைவு இல்லாத தன்மைக்காகவும் ஆராயப்பட்டு,ஆய்வகங்களில் மிகச் சில மட்டுமே தெரிவு செய்யப்பட்டு அதில் ஒற்றை மூலக்கூற்றைஅல்லது சில சமயங்களில் 2 அல்லது 3 மூலக்கூறுகள் மூலம் மருந்தைக் கண்டறிந்து, அடுத்த கட்டமாக விலங்கினங்களில் அவற்றின் நோய் தீர்க்கும் செயல் திறனும், பக்க விளைவுகளின் தன்மையும் ஆய்வின் மூலம் அளக்கப்படுகின்றன. IN VIVO என்று அழைக்கப்படுகின்ற இந்த ஆய்வுக்கு, எலிகள், சுண்டெலிகள், கினி பன்றிகள், நாய்கள் மற்றும் சில நாடுகளில்குரங்குகள் உட்படுத்தப்படுகின்றன.

வெற்றிகரமாக இந்த ஆய்வுகளைத் தாண்டிவரும் ஒரு மூலக்கூறு, அரசின் உயர்மட்ட மருந்துக்கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியோடு, மனிதர்களில், ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்குக் கொடுக்கப்பட்டு பக்க விளைவுகள் ஆராயப்படுகின்றன. இந்தக் கட்டத்தைத் தாண்டி வருகின்ற மூலக்கூறு, இரண்டாம் கட்டமாக சில நூறு நோயாளிகளுக்குத் தரப்பட்டு, நோய் தீர்க்கும் தன்மையும், நோயாளிக்குப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகின்றது. அடுத்த கட்டமாக, ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்குத் தரப்பட்டு, மருந்தின் செயல் திறன் நிரூபணம் செய்யப்பட்ட பின்பு,

அரசாங்கத்தின் உயர்மட்ட மருந்துக்கட்டுப்பாட்டு துறையின் அறிவியல் பூர்வமான அனுமதியின் பேரில், சமுதாயத்திற்கு புதிய மருந்தாக அறிமுகம் செய்யப்படுகின்றது.

இத்தனை கட்டத்தையும் வெற்றிகரமாகத் தாண்டி வந்து, மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட மருந்துகள் பிறகு, பெரிய பக்க விளைவுகளை உருவாக்கியதால் திரும்பப் பெறப்பட்டதும், மிகச்சிறந்த மருந்தாக உலக அளவில் நூற்றுக்கணக்கான கோடி மக்களைக் காப்பற்றிய வரலாறும் உண்டு. உதாரணமாக, சுமார் எண்பது வருடங்களாக நூற்றுக்கணக்கான கோடி மக்களின் உயிர் காக்கும் மருந்தாக, உலகளாவிய அளவில் சேவை செய்யும் பெனிசிலின் குடும்ப (Penicillin family) மருந்துகளும் உண்டு. அதே சமயத்தில், பல ஆயிரக்கணக்கான குழந்தைகளை உடல் குறைபாடோடு பிறக்க வைத்த தாலிடோமைடு (Pthalidomide) போன்ற வரலாற்று மருத்துவக் கொடுமைகளும் உண்டு. அனைத்து சவால்களையும் மீறி, அலோபதி நவீன மருத்துவ முறை இன்று கோலோச்சுகிறது என்றால், அதற்கு அடிப்படைக் காரணம், அதற்கான முறையாக வரையறுக்கப்பட்ட விஞ்ஞானம் சார்ந்த மருத்துவ ஆராய்ச்சி முறைகள்தாம்.

மருந்தியக்கவியல் (Pharmacodynamics) மற்றும் மருந்தியக்கத் தாக்கியல் (Pharmacokinetics) போன்ற ஆய்வுகள், மூலக்கூறின் வெவ்வேறு எடை அளவுகளைக் கொண்டு மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டிய எடை அளவு கண்டுபிடிக்கப்படுகிறது. மிகமுக்கியமானது உட்கொள்ள வேண்டிய மருந்தின் அளவு, அளவுக்கு அதிகமானால் மருந்தும் விஷம்தான். அது மட்டுமல்ல, உடம்பிலே தங்கும் மருந்துகள், சேர்ந்தாரைக் கொல்லும் விஷங்கள். மருந்தின் முக்கியத்தன்மை, உடம்பிற்குள் வந்த வேலை முடிந்ததும், கல்லீரலால் வளர்சிதை மாற்றம் செய்யப்பட்டு சிறுநீரகங்களால் வெளியேற்றப்பட வேண்டும். இந்த மருத்துவ ஆய்வு மிகவும் முக்கியம். ஒற்றை மூலக்கூறு என்பதால், மூலக்கூறின் எடைகள் மிகச் சரியாக அளவிடப்படுகின்றன. வேதியியல் கூடத்தில், மிகக் குறுகிய காலத்தில் கிலோ கணக்கில் உற்பத்தி செய்யப்படுவதால், தேவையான அளவு எடை எடுப்பதும், தேவையான அளவுகள் மாற்றி எடுப்பதும், மிகவும் எளிது.

ஒவ்வொரு வீட்டிலும், மளிகைப்பொருட்கள் போன்று குழந்தைகளுக்கு இருமல் மருந்து (cough syrup), காய்ச்சல் மருந்து (paracetamol suspension), சளி மருந்து, ஒவ்வாமை மருந்து (anti}allergic, anti}histamines) போன்ற பல மருந்துகளைத் தயாராக வைத்திருப்பார்கள். உணவை ஊட்டுவது போல, சாதாரண காய்ச்சலுக்கும், லேசான சளிக்கும், சின்னஞ் சிறிய தும்மலுக்கும், ஓடிப்போய் உடனே இந்த மருந்துகளை, ஒரு கடமை உணர்ச்சியுடன் தாய்மார்கள் தருவதைப் பார்த்திருக்கிறோம். இந்த செயல்களால், தன் குழந்தைகளுக்கு உடனடியாக மருந்துகளைக் கொடுத்து, இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி வளரும் வாய்ப்பைத் தடுக்கும் பெரிய தடையாகத் தாங்கள் இருக்கிறோம் என்று எத்தனை அன்னையருக்குத் தெரியும்?

எத்தனை பேருக்குத் தெரியும், மீண்டும் மீண்டும் கொடுக்கும் paracetamol, தன் அன்புக்குழந்தைகளின் கல்லீரலுக்கே எமனாக ஆகலாம் என்று? அவர்களின் சிறுநீரகத்திற்கே கூட ஆபத்து வருவதற்கு வாய்ப்பு உண்டு என்று? தாயின் கையாலேயே அறியாமையால் அன்போடு எதற்கெடுத்தாலும் மருந்து கொடுப்பதை வேறு எங்கே பார்க்க முடியும்?

நம் எத்தனை பேருக்குத் தெரியும், இறந்து போன சுண்டெலிகளுக்கு paracetamol மருந்தை ஏற்றி, அவற்றை ஹெலிகாப்டர் மூலமாக உணவாக வீசி, ஏராளமான பாம்புகளை கொல்லப் பயன்படுத்துகிறார்கள் என்று? வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கும், பூனைக்கும் கூட அது ஆபத்தானவை என்று? இந்த நவீன மருந்துகளோடு, வேறு சில மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி எடுத்தால் உடனடியாக அது உடல் நலத்திற்கு கேடு விளைவிற்கும் என்று? இதில் பலருக்கும் தெரியாத இரகசியம் என்னவென்றால் , paracetamol எப்படி உடம்பில் வேலை செய்கிறது என்று முழுமையாக யாருக்கும் தெரியாது.

நாம் எத்தனை பேர் மருந்துகளைப் பற்றிய எச்சரிக்கைகளும், ஆபத்துக்களும், அறிவுறுத்தல்களும் அடங்கிய மருந்துகளோடு இணைக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தை (Product Information Leaflet) படிக்கிறோம்? தவறுதலாக எடுக்கப்படும் மருந்து, ஒரு கொடுமையான விஷமாக மாறிவிடும். பல மேலை நாடுகளில் உள்ளவர்கள் தங்கள் தாய் மொழியில் மருந்துகளின் குறிப்பை படிக்கும் போது, இந்த எச்சரிக்கை நம் தாய்மொழி தமிழிலும் தரப்பட வேண்டும். ஏன் அதெல்லாம் கண்டுகொள்ளப்படவில்லை என்பதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருக்கிறது.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதகுலத்தை நோயிலிருந்தும், ஆபத்தான கிருமிகளிலிருந்தும் பாதுகாத்து வந்த நமது இயற்கை மருத்துவ முறை, ஒரு சில நூற்றாண்டுகள் நாடு அடிமைப்பட்டதன் தாக்கத்தினால், நம் அறியாமையினால் அந்நியப்பட்டு விட்டது. ஆதிக்கம் செய்தவர்கள் விட்டுச் சென்ற தாக்கங்களை தாண்டி மீண்டு வர நமக்கு தலைமுறைகள் தேவை. தலைமுறை தலைமுறைகளாக முன்னோர்கள் காத்து வந்த அத்தனை பரம்பரை அறிவையும் அடையாளம் கண்டு, அதை அறிவார்ந்தமுறையில் சிந்தித்து அடுத்த நிலைக்கு எடுத்து செல்லாமல் விட்டு விட்டோம். நமது மூடப்பழக்க, வழக்கங்கள், சமூக, பொருளாதார வேறுபாடுகள், அடிமை மனப்பான்மை போன்றவற்றின் ஒரு முகமாகத்தான், இந்த தேசத்தின் இயற்கை மருத்துவத்தின் மகிமையின் அறியாமையினாலும், இந்திய மருத்துவத்தை வளர்ச்சியடைய செய்ய தேவையான ஆராய்ச்சிக்கு கடந்த 70 ஆண்டுகளாக எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்பதாலும், நம் சகோதர சகோதரிகள் வேறு வழியின்றி குடும்பத்தோடு முதல் தேர்வாக (FIRST CHOICE) நாடுவது நவீன அலோபதி மருத்துவத்தைத்தான்.

கொஞ்சம் விழிப்புணர்வு பெற்று, ஒருபுறம் இயற்கை உணவுக்கும், நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட யோக கலையையும், மன வளக்கலைக்கும் பெரும்பாலோனோர் மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், முதல் தேர்வாக (MEDICINE OF FIRST CHOICE), எப்போது இயற்கை சார்ந்த மருத்துவ முறையைத் தெரிவு செய்யப் போகிறோம்?

அலோபதி நவீன மருத்துவமுறை முதன்மையான இடத்திற்கு வந்ததற்கு, சொந்த மண் அடிமைப்பட்டது மட்டும் காரணம் அல்ல; நவீன அறிவியல் மருந்து ஆராய்ச்சி முறைகளும் பல லட்சக்கணக்கானவர்களின் ஆராய்ச்சியும்
முக்கியமான காரணங்கள்.

ஆனால், இயற்கை மருத்துவத்தில், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி ஆகியவற்றுக்கு இது மிகப்பெரிய சவால். ஒற்றை மூலக்கூறு என்பதாலும், வேதியியல் கூடத்தில் பெரும் அளவில் தயாரிக்க முடியும் என்பதாலும், அலோபதி முறையில் தேவைப்படும் அளவு, கொடுப்பதில் பெரிய சிக்கல்கள் இல்லை. மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகள், தாவரங்களின், வெவ்வேறு பாகங்களைச் சார்ந்து இருக்கின்றன. அவற்றில் இருக்கும் மருந்துகளின் அளவு, பெரும்பாலான நேரங்களில் மிகக் குறைவாக இருக்கும்.

1928-இல் Sir. Alexander Fleming முதன் முதலாக பென்சிலின் கண்டுபிடிக்கும் போது, இத்தனை அதிசய மருந்தாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. காரணம், Penicillum Chrysogenum பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பெனிசிலினின் அளவு மிக மிகக் குறைவு. அதனால், ஒரு மருந்தாக மாறுகின்ற அளவுக்கு நம்பிக்கையைத் தரவில்லை. பென்சிலின் அளவை அதிகரிப்பதற்கு, பிளெமிங் செய்த எந்த முயற்சிகளும் பயனளிக்கவில்லை, எனவே இனிமேல் இந்த குறைவான அளவு பெனிசிலினை வைத்து எதுவும் செய்ய முடியாது என்று முயற்சியைக் கை விட்டு விட்டார். Howard Walter Florey மற்றும் Ernst Boris Chain ஆகிய விஞ்ஞானிகள் புதிய முயற்சி எடுத்து, பதினான்கு வருடங்களுக்குப் பிறகு, 1942-இல் பெனிசிலினை உலகிற்கு ஒரு மருந்தாக அறிமுகம் செய்தார்கள். “அதிகமாக” பென்சிலின் உற்பத்தி செய்கின்ற பூஞ்சை வகையை அமெரிக்காவில் விவசாய சந்தையில் அதிர்ஷ்டவசமாகக் கண்டிபிடித்ததால் மட்டுமே, ஒரு பெனிசிலின் மருந்தாக நமக்கு வந்தது. ஆனால், எத்தனை மருந்துகள், இப்படிப்பட்ட வாய்ப்பை இழந்திருக்கும் என்று தெரியாது.

நாம் அலோபதி மருத்துவத்திற்கு இணையாக பாரம்பரிய மருத்துவமுறைக்கு அங்கீகாரம் பெற வேண்டுமென்றால், பல பேர் நினைப்பதெல்லாம், ஒரே வழி, இந்த மருந்துக்கலவையில் அல்லது வேரில்/இலையில்/விதையில்/மற்றும் அது போன்ற மூலத்தில் உள்ள மருந்தை, ஆராய்ச்சிக்குப் போதுமான அளவு பிரித்தெடுக்க வேண்டும், பிறகு சுத்திகரிக்க வேண்டும். அதனுடைய வடிவத்தை அறிவியல் முறைகளைப் பயன்படுத்திக் கண்டுபிடித்து, அந்த மூலக்கூறை வேதியியல் அல்லது உயிரியல் அல்லது உயிரியல் தொழில் நுட்பக்கூடத்தில், உற்பத்தி செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். இந்த முறை வெற்றி பெற பல வருடங்கள் ஆகலாம், அதிர்ஷ்டம் இருந்தால், சில நேரங்களில், Sir. அலெக்சாண்டர் ஃபிளெமிங் போல், பல வருடங்கள் உழைத்து விட்டு விடவும் வாய்ப்புகள் உண்டு. இயற்கை மூலக்கூறுகள், பாரம்பரிய மருந்துகளில் மிகக்குறைந்த அளவில் இருக்கும்போது அவற்றைப்பிரித்தெடுக்க முயற்சி செய்வதும், அவற்றின் வடிவங்களை ஆராய்ந்து கண்டுபிடிப்பதும், மிகப்பெரிய சவால்கள். இந்த சவால்களைத் தாண்டி வரும் மூலக்கூறுகள் மிகக்குறைவு. ஆகவே, அலோபதி முறை மருத்துவ ஆராய்ச்சிக்குள் இவற்றை உட்படுத்துவது சரியானதல்ல.

அது மட்டுமல்ல. பல நேரங்களில், ஒற்றை மூலக்கூறு தனியாக இல்லாமல், பல மூலக்கூறுகளோடு ஒத்திசைந்து (synergistic) நோய் தீர்க்கும் மருந்தாகும் வாய்ப்புகள் உண்டு. அப்போது, தனித்தனியாகப் பிரிக்கப்படும் மூலக்கூறுகளில் நோய் தீர்க்கும் செயல் திறன் எப்படி இருக்கும்? அப்போது, நோய் தீர்க்கும் திறனே இல்லாமல் போய் விடலாம். ஒவ்வொன்றின் வேலை என்ன? எந்தெந்த மூலக்கூறுகள் எந்தெந்த அளவில் இருக்கும்போது, நோய் தீர்க்கும் செயல் திறன் பெறுகிறது? என்பதையெல்லாம் கண்டறிவதற்கு பல இயற்கை மருந்துகளில் - முக்கியமாக இந்த மூலக்கூறுகள் மிகக்குறைந்த அளவில் இருக்கும்போது - காலங்கள் பல ஆகலாம்.

சில மருந்துக் கலவைகளில் எண்ணிலடங்கா மூலக்கூறுகள், ஒத்திசைந்து (synergistic) நோய் தீர்க்கும் தன்மையைப் பெற்றிருக்கலாம். சில மருந்துக் கலவைகளில், கலவையாக இருக்கும்போதுதான், மருந்து ஸ்திரத்தன்மையோடு இருக்கும், பிரித்தெடுத்து விட்டால், அந்த மூலக்கூறு உடைய ஆரம்பித்து, வடிவத்தை இழந்து, தன்னுடைய நோய் தீர்க்கும் தன்மையையும் இழந்து விடும்.

இப்படி, பல தரப்பட்ட தனித்துவங்களோடு இருக்கும் பாரம்பரிய இயற்கை மருத்துவத்திற்கான, நோய் தீர்க்கும் நிரூபண ஆராய்ச்சிக்காக ஒற்றை மூலக்கூறைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில், நாம் பல தலைமுறைக் காலங்களை இழந்து விடுவோம். அந்த முயற்சிகளின் பாதையில் பல சவால்களைச் சந்திக்கும்போது, தேவையற்ற சவால்களை எதிர்கொண்டு, காலங்களை வீணடித்து, இந்த பாரம்பரிய மருத்துவ முறைகளின் மீதான நம்பகத்தன்மையை குறைப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்த இழந்த காலகட்டத்தில், அலோபதி தன்னுடைய அதீத பிரம்மாண்டத்தால் இன்னும் பல தூரங்கள் சென்று, பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்னும் பின்னுக்குத் தள்ளி விடும். ஒவ்வொரு மருத்துவ முறையும் தனித்துவமானது. ஆங்கில மருத்துவம் உருவாக்கிய உடையில், பாரம்பரிய மருத்துவத்தை ஏன் அடைக்க முயற்சி செய்ய வேண்டும்? சரி அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும், தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்: vponraj@live.com

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com