சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 101

தமிழகத்தில் எண்ணற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக எதற்காகத் தொடங்கப்பட்டன என்பதை ஆவணப்படுத்துவதற்கு இந்தத் தொடர் மிகவும் உதவியாக இருந்தது.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 101

தமிழகத்தில் எண்ணற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக எதற்காகத் தொடங்கப்பட்டன என்பதை ஆவணப்படுத்துவதற்கு இந்தத் தொடர் மிகவும் உதவியாக இருந்தது. இத்தகைய கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்கு காரணமாக இருந்த எண்ணற்ற புரவலர்கள், அவர்களின் சமுதாய நோக்கு, எல்லா தரப்பினரையும் - ஜாதி,மத, இன வேறுபாடின்றி - நமது ஊர் மக்கள் மற்றும் அருகாமையில் உள்ள எல்லாருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவர்கள் விதைத்த விதைகள், 100 ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு எண்ணற்ற பாடங்களைக் கற்பிக்கின்றன. இதுபோன்ற புரவலர்களின் உதவியுடன் என்னால் கல்வி பயில முடிந்தது என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இக்கல்வி நிறுவனங்கள் வாயிலாக அவர்கள் விதைத்த விதைகள், என்னைப் போன்றே கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையே மாற்றியமைப்பதற்கும் - வாழ்க்கை நன்றாக அமைவதற்கும் உதவின என்பதையும் அதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் வீணாகவில்லை என்பதையும் மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டுகின்றன.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இத்தகைய மாமனிதர்களை பார்க்கக் கூடிய வாய்ப்பு இன்றைய தலைமுறையினருக்குக் கிட்டவில்லை. எண்ணற்ற புரவலர்கள் எந்த ஓர் எதிர்பார்ப்பும் இன்றி கல்விக்கூடங்களைஉருவாக்கினாலும், தற்போது உள்ள தலைமைகள், கல்வி நிறுவனங்களின் வரலாற்றினை முறையாக ஆவணப்படுத்தி அவர்களுடைய இணையதளத்தில் பதிவிட வேண்டும். ஏனெனில் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தங்கள் சொத்துக்களை எதிர்கால தலைமுறையினருக்குத் தாரைவார்த்த அவர்களைப் போன்ற மாமனிதர்களை நாம் இந்த தலைமுறைக்கு அடையாளம் காட்டவில்லை என்றால், இன்றைய தகவல் உலகத்தில் இவைபோன்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வராமல் புதைக்கப்படும். குறிப்பாக இக்கல்விநிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு அல்லது அந்த ஊரில் உள்ள மக்களுக்கு இதுபோன்ற வரலாற்றுத் தகவல்கள் அக்கல்வி நிறுவனங்களின் இணையம் வாயிலாக தெரிய வந்தால், நாமும் இதைப் போன்று நம்மால் இயன்ற சமூகப் பணிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட தூண்டுதலாக அமையும்.

இதேபோன்று, உயர்கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன; அவற்றை எந்த அரசுக் கல்லூரிகளில் நாம் படிக்கலாம்; இதைப் படித்து முடித்தவுடன் உயர்கல்விக்காக வெளிநாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் இத்துறையில் எவ்வாறு பாடப்பிரிவுகளை மற்றும் பாடத்திட்டங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதனை சட்டம், இசை, மானுடவியல், உலக ஆரோக்கியம் (Global Health), மேலாண்மை என பல்வேறு பிரிவுகளில் நமது கல்வி நிறுவனங்களுக்கும் உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நாம் பார்க்க முடிந்தது. இது தவிர எண்ணற்ற இன்டர் டிசிப்ளினரி (ண்ய்ற்ங்ழ்-க்ண்ள்ஸ்ரீண்ல்ப்ண்ய்ஹழ்ஹ்) மற்றும் ற்ழ்ஹய்ள்-க்ண்ள்ஸ்ரீண்ல்ப்ண்ய்ஹழ்ஹ் போன்றவற்றைப் பற்றியும் இத்தொடரின் வாயிலாக சாதாரண மக்களுக்கு அளிக்க முடிந்தது.

இதுபோன்று தற்போது ஏற்பட்டுள்ள இந்த இர்ஸ்ண்க் -19 - ஆல் கல்வி எவ்வாறு பாதிக்கப்படுகிறது; கல்விமுறையில் இனிவரும் நாட்களில் ஏற்படக் கூடிய மாற்றங்களையும் நாம் பார்க்க முடிந்தது.

இத்தொடர் தனிப்பட்ட முறையில் எனக்கு கல்வியினை ஒரு 360 டிகிரி திருப்பிப் பார்க்க மிகவும் மிக உதவிகரமாக இருந்தது. கல்வி என்ற கடலில் நாம் எடுக்க வேண்டிய முத்துக்கள் நிறைய உள்ளன. இவற்றை தோண்டத் தோண்ட உங்களுக்கு எண்ணற்ற பரிசுகளும் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தற்பொழுது சினிமா மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு தரக்கூடிய முக்கியத்துவம் கல்விக்குத் தரப்படுவதில்லை. கல்வி இன்றும் அரசியல்துறையினர் பார்வையில் கடைசியாக உள்ளது. சாதாரண மனிதர்களுக்குக் கல்வியைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால்- அல்லது பெற்றோர்களின் கல்வியறிவு மிகக் குறைவாக இருக்கும் காரணத்தினால் - இக்கட்டுரைத் தொடரில் தரப்பட்ட தகவல்கள் நிச்சயமாக அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கல்வி எல்லாருக்கும் எட்டாக்கனியாக இருந்து வருகிறது என பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் கருதக் கூடாது. மாணவர்கள் அவர்கள் பொருளாதாரநிலையை எண்ணி, "நமக்கு வசதி இல்லை அதனால் நம்மால் உயர்கல்வி படிக்க முடியாது' என்ற ஒரு தவறான எண்ணத்திற்கு என்றும் செல்லக் கூடாது. இத்தொடரில் நாம் ஏற்கெனவே வசதியற்ற நிறைய மாணவர்கள் அவர்களுடைய உழைப்பு மற்றும் முயற்சியை மட்டும் மூலதனமாகக் கொண்டு கல்வியில் வாயிலாக இன்றைக்கு ஒரு நல்ல நிலையை அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரியப்படுத்தி இருக்கிறோம். ஆகவே, நான் மாணவர்களுக்கு இதன் மூலமாக விடுக்கும் கோரிக்கை, தயவுகூர்ந்து உங்களுடைய சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி கல்வியின் ஆழத்தை நன்றாக அறிவதற்கு உங்களால் முடிந்த வரை முயற்சி செய்யுங்கள். இம்முயற்சியின் வாயிலாக பின்னாளில் எந்த ஒரு புதிய துறை உங்களுக்கு அமைந்தாலும் இந்த அனுபவத்தின் வாயிலாக அதில் எளிதாக உங்களால் வெற்றி பெற முடியும்.

சில உயர்கல்விகளை மிக முக்கியமானதாகக் காட்டி, அவற்றைக் கற்பதே மிகப் பெரிய செயல் என்பதாகக் காட்டி, மாணவர்களை மாய உலகம் ஒன்றில் இன்றைய கல்விச்சூழல் அமிழ்த்தி வைத்துள்ளது. அந்த சில உயர்கல்விகளை கற்க வாய்ப்பு எதிர்காலத்தில் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்புடன், கனவுடன் மாணவர்கள் தங்களின் இன்றைய கல்வியைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். அந்த சில உயர் கல்விகளை எப்படியும் எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக, நிறைய செலவழித்து, பொருளாதார இழப்புடன் இருக்கிறார்கள். குறிப்பிட்ட அந்த சில உயர்கல்விகளைக் கற்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததைப் பற்றிக் கொண்டு அதிலும் எந்தவித ஆர்வமுமின்றி தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். மாணவர்களின் தனித்திறமைகள், விருப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுடைய எதிர்கால கல்வியைத் திட்டமிடும் வாய்ப்பை இன்றைய கல்விச்சூழல் வழங்கவில்லை என்பதே உண்மை.

எனவே பெற்றோர்களும் மாணவர்களும் நான் ஏற்கெனவே கூறியபடி, தங்களுடைய எதிர்கால கல்வி எது என்பதற்கான தேடலில் தெளிவுடன் ஈடுபடுங்கள். ஆழமாகத் தேடுங்கள். அப்போதுதான் நீங்கள் வைரத்தைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இன்றைய பெற்றோர்களும் மாணவர்களும் பெரும்பாலும் ஆழமாகவும் விரிவாகவும் தேடாமல், வணிகமயமான கல்விச்சூழலில் அவர்களுக்கு எது அதிகமாக விளம்பரப்படுத்திக் காட்டப்படுகிறதோ, அந்தக் கல்வியை நோக்கியே ஓடுகிறார்கள். அது கிடைத்தவுடன் பெரிய சாதனை புரிந்துவிட்டதாக எண்ணி திருப்தி அடைந்துவிடுகிறார்கள். உண்மையில் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வைரம் போன்ற கல்வியை அவர்கள் அறியாமலேயே போய்விடுகிறார்கள்.

எனவே உங்கள் முயற்சியையும் கல்வியின் மேலுள்ள ஆர்வத்தையும் என்றென்றும் குறைத்து விடாதீர்கள். உங்களுடைய கடினமான முயற்சி நிச்சயமாக உங்களை வாழ்க்கையின் மிக உயரமான நிலைக்குக் கொண்டு செல்லும். உங்கள் பொருளாதார வசதி எப்படி இருந்தாலும், மாற்றம் என்பது நிலையானது. எனவே உங்களுடைய மனதில் "எனக்கென்று ஒரு நல்ல எதிர்காலம் இருக்கின்றது' என்ற ஒரு நம்பிக்கையான மனநிலையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள். தயவுசெய்து, தங்களது இன்றையச் சூழலைப் பார்த்து எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சத்துடன் பயணம் செய்யாதீர்கள்.

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் - எத்தகைய சவால்கள் வந்தாலும் - அதை தான் பெற்ற கல்வியின் வாயிலாக எதிர்கொண்டு வெற்றி காண்பதற்கான தன்னம்பிக்கையைக் கொடுப்பதே கல்வியாகும். தங்களுக்கு ஏற்ற பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறு தரமான கல்வியை அரசு கல்வி நிறுவனங்களில் பயிலுங்கள். ஏனெனில் இன்றைய பொருளாதார சூழ்நிலை எண்ணற்ற மாணவர்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் பணம் செலவழித்துப் படிக்கக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதில்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் பயில்வதற்காக மாணவர்கள் தங்களுடைய குடும்பத்திற்கு மென்மேலும் சுமைகளை ஏற்றாமல், அரசு கல்வி நிறுவனங்களில் படித்து அதிக மதிப்பெண்கள் எடுக்க முயற்சி செய்ய வேண்டும். உங்களை ஒருமுகப்படுத்தி முயற்சி செய்தீர்கள் என்றால், நீங்கள் நல்ல வெற்றியைப் பெற முடியும். அப்போது உங்களுக்கு உதவ எண்ணற்ற உதவிக்கரங்கள் காத்திருக்கின்றன. எனவே உங்களுடைய போட்டி வெளி உலகத்தோடு அல்ல; உங்களோடு மட்டும் தான் நீங்கள் போட்டியிட வேண்டும். இந்த நிலையிலிருந்து ஓர் உயர்ந்த நிலையை அடைய கல்வி ஒன்றுதான் வழி எனக் கருதி உங்களுடைய நிகழ்காலத்தில் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுங்கள்.

கல்வியறிவு என்பது நமது ரத்தத்தில் கலந்துள்ளது என்பதற்கு எண்ணற்ற ஆவணங்கள் ஏற்கெனவே உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருவாக்கப்பட்ட நமது பழைமையான நாகரிகம், பல்வேறு காலகட்டங்களில் எண்ணற்ற தடைகளைத் தாண்டி என்றுமே உலகத்துக்கு ஒரு முன்னேறும் சமுதாயமாகவே இருந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாகவே நாம் இருக்கிறோம். கல்வியின் மூலமாக நமது சமூகம் உயர்ந்து விளங்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் எனக்கு அது தொடர்பான தகவல்களைக் கடந்த நூறு வாரங்களாக தினமணி வாயிலாகப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தினமணி ஆசிரியருக்கு நன்றி. இத்தொடரின் மூலம் உங்களுடன் பயணித்தது குறித்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

(நிறைவு பெற்றது)

கட்டுரையாசிரியர் சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com