மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 73: இருப்பதை  நிரூபித்தால்  உலகம்  ஆரோக்கியமாகும்!

1970-இல் கொண்டு வரப்பட்ட இந்திய காப்புரிமைச் சட்டத்தின் (Indian Patents Act 1970) வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தத்தின் விளைவாக, பொதுமருந்து ஆராய்ச்சியில் (generic medicine) நாம் மிகச் சிறந்த வளர்ச்சி
மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 73: இருப்பதை  நிரூபித்தால்  உலகம்  ஆரோக்கியமாகும்!


1970-இல் கொண்டு வரப்பட்ட இந்திய காப்புரிமைச் சட்டத்தின் (Indian Patents Act 1970) வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தத்தின் விளைவாக, பொதுமருந்து ஆராய்ச்சியில் (generic medicine) நாம் மிகச் சிறந்த வளர்ச்சி அடைந்தாலும், உலகத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு நம் ஏற்றுமதி செய்தாலும், AIDS மற்றும் பலவகையான பொதுமருந்து உற்பத்திக்கு இந்தியா நம்பத் தகுந்த நாடாக வளர்ச்சியடைந்திருந்தாலும், மருந்து தயாரிக்கத் தேவையான பல மூலப் பொருட்களுக்கு நாம் இன்னும் சீனாவைத்தான் நம்பியிருக்கிறோம்.

அது மட்டுமல்ல, நவீன புது மருந்து கண்டுபிடிப்பில் (New Drug Discovery) இன்னும் முதல் படியைத் தாண்டவில்லை. உலகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அலோபதி மருந்துகளில், உலகத்தில் 20 சதவிகிதமக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்தியா, இதுவரை 1 சதவிகிதம் மருந்துகளைக் கூட புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை என்பது நாம் எந்த நிலையில் நவீன அலோபதி மருந்து ஆராய்ச்சியில் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. அதேசமயம், மற்ற எந்த நாட்டிலும் இல்லாத, நோய் தீர்க்கும் மருந்துகளை காலம் காலமாகத் தன்னகத்தே கொண்டிருக்கும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சியிலும் நாம் கவனம் செலுத்தவில்லை. இயற்கை மருத்துவத்திற்கு உரிய ஆராய்ச்சி முறையை வரையறுத்து, அறிவியல்பூர்வமாக மருத்துவ ஆய்வை நாம் செய்திருந்தால், பல படிகள் முன்னேறி இன்று இயற்கை மருத்துவத்தை உலகிற்கு அளித்து, பெரும்பங்கு ஆற்றியிருக்கலாம்.

அலோபதி மருந்து எப்படி பல நிலை (Phase 1-4) மருத்துவ ஆராய்ச்சிகளை வெற்றிகரமாகக் கடந்து, உயர்மட்ட மருந்துக்கட்டுப்பாட்டுஅலுவலகத்தின் ஒப்புதல் பெற்று, மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், சில நேரங்களில், ஆய்வு மருத்துகளின் ஆபத்தான பக்கவிளைவுகளோ, குறைவான செயல்திறனோ மேற்கண்ட ஆய்வுகளில்அறியப்படாமல், பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்துவதும் தவறுதலாக நடந்திருக்கிறது. பிறகு, ஆயிரக்கணக்கானோரின் பாதிப்புக்குப் பிறகு, தடை செய்யப்பட மருந்துகள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளம்.

அமெரிக்காவில் FDA-வின் அங்கீகாரம் பெற்ற Rofecoxib என்கிற கீல்வாதத்திற்காக (arthritis), 1999-2003 வரை மாரடைப்பு, பக்கவாதத்திற்கான அபாயங்களை அதிகப்படுத்தியது, 2004-இல் திரும்பப் பெறப்பட்டது.

Troglitazone என்கிற இந்த ஆண்டி-டயாபெடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்தினால், மூன்று வருடங்களில், சுமார் 90 பேர் கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டனர்; மற்றும் குறைந்தபட்சம் 63 பேர் இறந்தனர். சுமார் 35,000 வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டன.

பிறப்பு குறைபாடுகள், கருச்சிதைவு, பயன்படுத்திய கர்ப்பிணிப் பெண்களிடையே முன்கூட்டிய இறப்பு, தற்கொலை எண்ணம் மற்றும் அழற்சி குடல் நோய் ஆகிய தீய விளைவுகளின் காரணமாக, Isotretinoin என்கிற முகப்பரு மருந்து 2009-ஆம் ஆண்டில் அமெரிக்க சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. 7,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மக்கள்தொகையில், இந்தியா உலகின் மிகப்பெரிய மருத்துவ சந்தைகளில் ஒன்றாக இருந்தாலும், மருத்துவ விதிமுறைகளிலும், வழிகாட்டுதலிலும், செயல்படுத்துவதிலும் குறைபாடுகள் அதிகம். இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்க, ஐரோப்பியா நாடுகளில் தடைசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மருந்துகள் இங்கே புழக்கத்தில் வந்து விட்டன. தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளைக் கொண்ட பல மருந்துகள், கூட்டு மருந்துகள் உலகளவில் தடைசெய்யப்பட்டிருந்தாலும், மருத்துவரின் பரிந்துரையில்லாமலேயே இந்தியாவில் மருந்து கடைகளில் கிடைக்கும்.

இந்தியாவால் உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட 444 மருந்துகள், தடை செய்வதற்கு முன் பல ஆண்டுகள் கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவைதான் இவையெல்லாம். தடை செய்யப்பட்ட மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், பாதிப்பின் தன்மை எந்த அளவுக்கு தீவிரமானது என்றெல்லாம் எந்தப் புள்ளி விவரமும் கிடையாது. தடை செய்யப்பட மருந்துகளைப் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலும் குறைவாகவே உள்ளது. தடைசெய்யப்பட்ட மருந்துகள் 95% ஓவர்-தி-கவுண்டரில் (over-the-counter, OTC) மருந்துக் கடைகளில் கிடைக்கிறது, இது திறமையற்ற மற்றும் பொறுப்பற்ற மருந்து ஒழுங்குமுறை நிர்வாகத்தின் அடையாளமாக இருக்கிறது. மக்கள் அறியாமையால் அவற்றைத் தொடர்ந்து வாங்குகிறார்கள். உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட இந்த மருந்துகளை உற்பத்தி செய்தாலோ, விற்பனை செய்தாலோ அந்தந்த நாடுகளில் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். அவற்றில் பல பக்கவாதம் (paralysis), புற்றுநோய் (cancer), குருட்டுத்தன்மை (blindness) மற்றும் பல நோய்களை உருவாக்கிவிடும்.

ஓபியத்திலிருந்து (Opium) உருவாக்கப்படும் கோடீன் (Codeine), சேர்க்கப்பட்ட பல இருமல் மருந்துகள், பல நாடுகளில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கும் தடை செய்யப்பட்டவை. ஆனால் இதை இந்தியா சில வருடங்கள் கழித்து தான் இதை தடைசெய்தது. மனிதவாழ்வு எவ்வளவு உயர்வானது, விலைமதிப்பற்றது என்று நாம் எப்போது உணரப்போகிறோம்? சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் உயர் பதவியில் தலைவராக இருந்த ஜெங் சியாவோவுக்கு (Zheng Xiaoyu) மரண தண்டனை விதிக்கப்பட்டதன் காரணம், மருந்து சார்ந்த குற்றங்கள் மிகக் கடுமையானவை என்பதே.

செயல் திறன் மற்றும் பாதுகாப்பு மருத்துவ ஆய்வு (Efficacy and Safety Study) செய்யாமல் குளோர்பெனிரமைனுடன் (Chlorpheniramine) கூடிய கோடீன் (Codiene) என்கிற கூட்டு மருந்து 1995-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி 24 மணி நேரத்திற்குள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டது" என்கிறார் டாக்டர் C M குல்ஹாட்டி (Dr. Gulhati), Editor, Monthly Index of Medical Specialities (MIMS).

தலைவலிக்கு பாரசிட்டமால் (Paracetamol), உடம்புவலிக்கு இபுபுரோபென் (Ibuprofen) மற்றும் இதன் கூட்டு மருந்துகள் நோயின் அறிகுறிக்காக கொடுக்கப்படுகிறது. அடிக்கடி எடுக்கப்படும்போது இந்த கூட்டு மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் அதிகம் என்பதால் சில மருந்துகளின் அளவுகளை குறைத்து கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அதையும் மீறி அளவு குறைத்த மருந்துகளின் எண்ணிக்கையை கூட்டி வலி தீரும் என்று மக்கள் எடுப்பது தீராத தீங்கை விளைவிக்கும்.

ரூ 2000 கோடிக்கு அதிகமான paracetamol சந்தையில் 80%க்கும் அதிகமானவை, paracetamol-இன் கூட்டு மருந்துகள். ஒரு மருந்து தனியாகக் கொடுக்கும் போதுதான் மருந்து.

இன்னொரு மருந்துடன் சேர்க்கும்போது, அது ஒரு புதிய மருந்தாகிறது. "அந்தக்கூட்டு மருந்து முழுமையான மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டாலன்றி, மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கக்கூடாது' என்கிற உலகளாவிய மேம்பட்ட மருத்துவ முறை நமக்கு மிகவும் தேவை. நாம் எப்போது நம் சட்டங்களின் செயல்பாட்டை உயர்த்தப் போகிறோம், மக்களைத் தேவைப்படாத மற்றும் தீங்கு விளைவிக்கும் மருந்துகளில் இருந்து காப்பாற்றப் போகிறோம்?

ஒரு புறம் சரியான ஆராய்ச்சியால் பிறந்த அலோபதி மருந்துகள் உலகளாவிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதிலும், நோயின் கொடுமை மற்றும் வலியிலிருந்து காப்பாற்றுவதிலும், கொடுமையான கிருமிகளிலிருந்து உயிர்காப்பதிலும் பங்காற்றின. மறுபுறம், ஆராய்ச்சியின் ஓட்டைகளில் தப்பித்து வந்த தவறான மருந்துகளால் - அல்ல இரசாயனங்களால் - மனித சமுதாயம் அடைந்த இழப்புகளும் துன்பங்களும் மறக்க முடியாதவை. இந்த அலோபதி ஆராய்ச்சியில் இந்தியா, பெரிய பங்காற்றவில்லை என்பது கூட தவறில்லை; ஆனால், காலம் காலமாக பயன்பாட்டில் இருந்துவரும் ஏராளமான இயற்கை மருந்துகளை பொக்கிஷமாக தன்னகத்தே வைத்திருந்தும் கூட, அவற்றை முறையான மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி, அறிவியல்பூர்வமான ஆதாரங்களை உருவாக்கி, எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு மருத்துவமுறையாக மாற்றாமல் இருப்பதுதான் பெரும் தவறு.

இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி சார்ந்த மருந்துகள் இயற்கையாய் வளரும் தாவரங்கள், மரங்கள், தாதுக்கள் போன்றவற்றின் வெவ்வேறு கலவைகளில், ஒவ்வொரு மருத்துவமுறைக்காகவும் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக முறைகளில் உருவாக்கப்பட்டு, மருத்துவர்களின் தனித்திறன் மிகுந்த முறையில் நோய் அறியப்பட்டு, பின்பு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த பாரம்பரிய மருந்துகள் மனிதர்களுக்கான இயற்கையின் வரம் என்று அறியப்படும் உயிர்சூழல் (Biodiversity) தந்த பரிசுகள். அலோபதி முறை சார்ந்திருப்பது ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்பட்ட பல லட்சக்கணக்கான மூலக்கூறுகள் கொண்ட synthetic chemo-diversity என்று சொல்லலாம்.

ஒவ்வோர் இயற்கை மருந்தும், தாவரங்கள், மரங்களின் வெவ்வேறு பாகங்களில் இருந்து எடுக்கப்படுவதால், ஒற்றை மூலக்கூறை மட்டும் கொண்டிருக்காது. அதில் ஏராளமான மூலக்கூறுகள் இருக்கும். இயற்கை மருந்து, நம் உடம்பின் தன்மையோடு சேர்ந்து, நோயை எதிர்த்துப்போராடுவதால், மூலக்கூறுகள் மிகக் குறைந்த அளவில் இருக்கும். அது மட்டுமல்ல, ஒரு மூலக்கூறு மற்றொன்றுடன் சேர்ந்து ஒத்துழைக்கிற, சார்ந்து-செயல்படுகிற (synergestic) தன்மையுடையதாக இருக்கும்.

அதனால்தான், குறைந்த அளவில் இருக்கிற அத்தனை மூலக் கூறுகளையும் தனித்தனியாகப் பிரித்தெடுத்து சுத்திகரித்து மருத்துவ ஆய்வு செய்யலாம் என்கிற அலோபதி-சார்ந்த-சிந்தனையால் காலங்கள் பல வீணாக ஓடி விடும். அது மட்டுமல்ல, சேர்ந்து ஒத்திசைந்து வேலை செய்யும் மூலக்கூறுகளை, தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் போது, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றின் செயல்திறன் அற்றுப் போகலாம். ஒவ்வொரு அறிகுறிக்கும் பலவகையான நோய்கள் காரணமாக இருக்கலாம். ஆகையால், அறிகுறிகளை மட்டும் அடிப்படையாகக்கொண்டு, மருத்துவ ஆராய்ச்சிக்கு நோயாளிகளைத் தரம் பிரிக்காமல், நோய்களின் தன்மைகளை ஆராய்ச்சிக்கு முதன்மைப்படுத்த வேண்டும்.

இயற்கை மருந்து, பொடியாக, மாத்திரையாக, லேகியமாக, திரவமாக, என்று பல உருவாக்கங்களில் (formulation) கொடுக்கப்படுகின்றது. இயற்கை மருந்து எந்த முறையில், எந்த மருந்துக்கலவையாக கொடுக்கப்படுகின்றதோ, அதே உருவாக்கத்தில் மட்டுமே, அதன் நோய்தீர்க்கும் தன்மை ஆராயப்படவேண்டும். இயற்கை மருந்தின் செயல்திறனுக்கு, அதன் தன்மை மாறாமல் ஆய்வு செய்யப்படுவது மிக முக்கியம். ஏனென்றல் வாய் வழியாகத் தரப்பட்ட மருந்து இரைப்பையிலிருந்தோ, குடலிலிருந்தோ உறிஞ்சப்பட்டு, அதன் தன்மை மாறாமல், இரத்த நாளங்களுக்குள் பயணப்பட்டு, நோய் கண்ட பாகத்தை அடைந்து, தன் சீரமைக்கும் பணியைச் செய்ய வேண்டும். வெறும் மருத்துவ மூலக்கூறுகளால் மட்டும் உடம்பின் நோயைத் தீர்க்க முடியாது - உடம்பின் நோயுற்ற பாகத்திற்கு எடுத்துச் சென்று கொடுக்கும், மருந்துக் கலவை முறை (pharmaceutical composition) மிகமுக்கியம்.

முன்னாள் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர், எனது ஆராய்ச்சி ஆலோசனைக்குழு தலைவர் Dr. S. P. தியாகராஜன் நடத்திய ஆய்வின்படி, Phyllanthus nuriri என்கிற முழுத் தாவரச் சாற்றிற்கும் ஹெபடைடிஸ் பி வைரஸூக்கு எதிரான (HBV) தடுப்பு பண்புகள் இருப்பது அறியப்பட்டது. மூலிகைப் பொருட்களின் மருத்துவ ஆராய்ச்சி எதிர்கொள்ளும் சிக்கல்களாக, கலப்பு சாறுகளைப் (concoction) பயன்படுத்துவது, மற்றும் மூலிகையை அறுவடை செய்தல், தயாரித்தல், மற்றும், பிரித்தெடுக்கும் முறைகள் ஆகியவை ஒவ்வொருமுறையும் மாறுபடுகிறது என்கிறார். மிகச் சில மூலிகைகளுக்கு மட்டும்தான், செயல்திறனுக்குக் காரணமான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன;

மற்றும் இதைத் தவிர வேறு மூலப்பொருட்களும் காரணமா என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார். கடுமையான மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க சக்தி வாய்ந்த, பாதுகாப்பான, மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மூலிகை மருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர, Dr. S.P.தியாகராஜன் தனது ஆராய்ச்சி கட்டுரையில், 1) மூலிகை மருந்துகளைத் தரப்படுத்தல், 2) சீரமைக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் 3) நன்கு வடிவமைக்கப்பட்ட பக்க விளைவு ஆய்வுகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்த மருத்துவ ஆய்வின் மூன்று முக்கியக் கூறுகளாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

ஆகையால், இயற்கை மருந்துகளுக்காக வடிவமைக்கப்படும் மருத்துவ ஆராய்ச்சி முறை, மேற்சொன்ன அனைத்து அடிப்படை வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும். பரம்பரை பரம்பரையாக ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதகுலத்தைக் காப்பாற்றி வந்த மருத்துவ முறைகள் என்பதால், வெற்றி நிச்சயம். நாம் செய்யவேண்டியது, அலோபதி முறை போன்று, புதிதாக மருந்து கண்டுபிடிப்பது அல்ல. இயற்கை மருந்துகள் ஏற்கெனவே மனிதகுலத்தின் பயன்பாட்டில் இருக்கின்றன. நாம் செய்யவேண்டியதெல்லாம், முன்னோர்கள் குறிப்பட்ட மூலிகையில் இருக்கும் மருந்தை உணர்ந்து, அதற்கு அறிவியல் சார்ந்த முறையில் மருத்துவ நிரூபணம் செய்வது மட்டுமே. ஓர் ஆண்டுக்கு, உலகம் முழுதும் மருந்து உபயோகத்திற்காக மட்டும் செய்யப்படும் செலவு 90 லட்சம் கோடி ரூபாய்கள். எனவே இந்தியாவின் இயற்கை மருத்துவ ஆராய்சிக்கு ரூ. 20,000 கோடி ஒதுக்கி ஆராய்ச்சி செய்தால், உலகத்திற்கு பக்கவிளைவுகள் இல்லா நோய் குணமாக்கும் மருந்துகளை உருவாக்க இந்தியாவால் முடியும்; உலக ஆரோக்கியத்தை இந்தியாவால் உறுதிப்படுத்த முடியும்: இந்தியப் பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக்க முடியும். இதை இந்தியா செய்யவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்?

உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:vponraj@live.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com