போதும்... ஒரே செயலி!

செல்லிடப் பேசி , பேசுவதற்கு மட்டும் என்பது போய் ரொம்ப காலமாகிறது. 
போதும்... ஒரே செயலி!

செல்லிடப் பேசி , பேசுவதற்கு மட்டும் என்பது போய் ரொம்ப காலமாகிறது. 

செல்லிடப் பேசி இல்லாமல் வாழ்க்கையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ரயில், பஸ் டிக்கெட் பதிவு செய்வதிலிருந்து,  ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்குவது வரை- வங்கிக் கணக்கில் இருந்து இன்னொருவருக்கு பணம் அனுப்புவதிலிருந்து முக்கியமான தகவல்களை, புகைப்படங்களை, வீடியோக்களை பிறருக்குப் பகிர்வது வரை செல்லிடப்பேசியின் மூலம் எல்லாம் செய்யலாம்.  ஆனால் என்ன ஒரு பிரச்னை... ஒவ்வொன்றுக்கும் தனித்தனி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  

இதனால் செல்லிடப் பேசிக்குச் சுமை அதிகமாவதோடு, கூடுதலான நினைவுத்
திறனை உடையதாகச் செல்லிடப் பேசி இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஏதாவது ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்தால், ஏற்கெனவே உள்ள செயலிகளை நீக்க வேண்டும் என்று செல்லிட பேசி குரல் கொடுக்கிறது. 

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும்விதமாக,  பெங்களூருவைச் சேர்ந்த மோஹித் குமாரும், அவருடைய நண்பரான ஆதித்யா சாக்ஷேனாவும் இணைந்து பிஸினஸ்ஆன்பாட் (Businessonbot- BOB) என்ற செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். 

இந்தச் செயலி வாட்ஸ்ஆப் மூலம் இயங்கக் கூடியது.  

உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்படுவதால்,  
இந்தச் செயலியைப் பயன்படுத்தப் போகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கப் போகிறது. 

இவர்கள் உருவாக்கிய இந்தச் செயலியை உங்களுடைய செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால், உங்களுடைய செல்லிடப்பேசிக்கு இந்தச் செயலியின் மூலமாக ரீ சார்ஜ் செய்து கொள்ள முடியும்.  எங்காவது போக வேண்டும் என்று  வாகனங்களை புக் செய்ய வேண்டும் என்றால்  இந்தச் செயலியின் மூலம் புக் செய்ய முடியும்.  உங்களுடைய வீட்டில் உள்ள தொலைக்காட்சிக்கான DTH ரீசார்ஜ் செய்ய முடியும்.  ரயிலில் செல்ல பதிவு செய்வதோடு,  பதிவு செய்த பிறகு உங்களுடைய இருக்கைநிலையைத் (PNR) தெரிந்து கொள்ள முடியும். ஏற்கெனவே பயன்படுத்திக் கொண்டிருந்த மருந்து, மாத்திரைகள் தீர்ந்து போய்விட்டன என்றால் உடனே இந்தச் செயலியின் மூலம் ஆர்டர் செய்து அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.  மின்சாரக் கட்டணம் செலுத்துவது,  வீட்டுக்குத் தேவையான பொருள்களைக் கடைகளில் இருந்து வாங்குவது எல்லாவற்றையும் இந்தச் செயலியின் மூலம்  உங்களால் பெற முடியும்.  

ரொம்ப போர் அடிக்கிறது... ஒரு  ஜோக் கேட்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால்,  இந்தச் செயலியின் மூலம் ஜோக்கைக் கேட்டு நீங்கள் சிரிக்க முடியும். 

இவ்வளவு பணிகளுக்கும் இந்த  ஒரு செயலியே போதுமானது. 

இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால்,  இந்தச் செயலியைப் பயன்படுத்த நீங்கள்   பேசினால் போதுமானது. 

உதாரணமாக செல்பேசியை ரீசார்ஜ் செய்ய, "ரீசார்ஜ் மை ஜியோ நம்பர்.... வித் 100 ஹவர்ஸ்' என்று போனில் பேசினால் போதும். ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 
ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளில் மட்டும் இப்போது பேசலாம்.  இரண்டு மொழிகளும் தெரியாதவர்கள்... வழக்கமான முறையில் பயன்படுத்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com