மிச்சமெல்லாம்  உச்சம் தொடு: வீழ்ந்ததை மீட்பது எப்படி? - 74

ஒரு நாட்டின் பொருளாதார நல்வாழ்வுக்கு வெளிநாட்டு நாணய இருப்பு (Foreign Exchange Reserve) மிகவும்முக்கியமானது.
மிச்சமெல்லாம்  உச்சம் தொடு: வீழ்ந்ததை மீட்பது எப்படி? - 74

ஒரு நாட்டின் பொருளாதார நல்வாழ்வுக்கு வெளிநாட்டு நாணய இருப்பு (Foreign Exchange Reserve) மிகவும்முக்கியமானது. வெளிநாட்டு நாணய இருப்பு இல்லாமல், ஒரு பொருளாதாரம் செயல் இழந்துபோகும் நிலை ஏற்படலாம். மேலும் ஒரு நாடு கச்சா எண்ணெய் போன்ற முக்கியமான இறக்குமதிகளுக்கு பணம் செலுத்தவோ அல்லது அதன் வெளிநாட்டுக் கடனை கட்ட முடியாமலோ போகலாம்.

1980- இல் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு US$ 7 பில்லியன் ஆக இருக்கும் போது, சீனாவிடம் இருந்த அந்நிய செலாவணி US $ 2.55 பில்லியன் மட்டுமே.

1998-2000-இல் வளர்ந்த இந்தியா 2020-க்கான தொலைநோக்கு பார்வைத்திட்டத்தைக் கொடுத்தார் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். அதை எந்த அரசும் செயல்படுத்தவில்லை. அதன் விளைவை இப்போது இந்தியா சந்திக்கிறது.

இந்தியாவின் 2014-15 பொருளாதார ஆய்வறிக்கை US$ 750 பில்லியன் முதல் US$ 1 டிரில்லியன் அந்நிய செலாவணி இருப்பை எட்டுவோம் என்று இலக்கு நிர்ணயித்தது. 6 ஆண்டுகள் கழித்து 05 ஜூன் 2020 -இல் இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பு சுமார் US$501 பில்லியன். எனவே இலக்கில் பாதியை எட்டுவதற்கு 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது நாட்டின் மொத்த வெளி கடன்கள் (Total External Liabilities) மந$ 1.32 டிரில்லியன் விட கணிசமாகக் குறைவாக இருக்கிறது மற்றும் மொத்த வெளி கடன் (External Debt) மந$ 563 பில்லியன் டாலர் விட குறைவாகத்தான் இருக்கிறது.

டிசம்பர் 2019- இல் இந்தியாவின் GDP ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி US$ 2.75 ட்ரில்லியன். ஜரோப்பிய கூட்டமைப்பு மந$ 19.1 ட்ரில்லியன், 6.82 மடங்கு இந்தியாவை விட அதிகம். அமெரிக்கா 7.57 மடங்கு அதிகமாக மந$ 21.2 ட்ரில்லியனாக இருக்கிறது.

கரோனாவிற்கு முன் 4% இருந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP Growth), மார்ச் 2020 -இல் 3.1 ஆக குறைந்து விட்டது. 1947- இல் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.3 என்று இருந்தது, ஜூன் 2020 -இல் அது ரூ. 76 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

கரோனாவிற்கு முன் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட இந்தியா, கரோனா பாதிப்பிற்கு பின் கடந்த 90 நாட்களாக மூடிக்கிடக்கும் MSME Sector-இல் 70 சதவிகிதம் கம்பெனிகள் சம்பளம் போட முடியவில்லை என்ற நிலை. AIMO (All India Manufacturing Organisation) எடுத்த சர்வேயின் படி 35% MSME Sector இனி கம்பெனி நடத்த முடியாது என்றும், 37% சுயதொழில் முனைவோர், மற்றும் தனியாக தொழில் செய்பவர்கள், இனி தொழில் செய்ய வாய்ப்பில்லை என்றும், 48% பேர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என்றும் சர்வே சொல்கிறது. இதனால் 12 கோடிப்பேர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என்று தெரிகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்ய இயலாமலும், தகுந்த உறுதிப்படுத்தப்பட்ட விலை (MSP) கிடைக்காமலும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

சாதாரண மனிதனுக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் மிகப் பெரிய சோதனை வீட்டு வாடகை, கடை வாடகை, மின்சாரக் கட்டணம், வங்கி கடனுக்கு 6 மாதத்திற்கு பிறகு கூட்டு வட்டியுடன் EMI பாக்கி, மற்றும் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிக் கட்டணம் போன்றவை வரிசையாக அவர்களின் முதுகெலும்பை ஒடிக்கக் காத்திருக்கின்றன. இந்த நிலையில், வேலைவாய்ப்பு இழப்பு ஒருபுறம்; வேலையின்மை ஒருபுறம், படித்த மாணவர்கள் வேலை தேடி அலையும் சூழல் ஒரு புறம். நாம் செய்யும் வேலை மாறப்போகிறது. வாழ்க்கை முறை மாறப்போகிறது. பழக்க வழக்கங்கள் மாறப்போகின்றன. வருங்காலம் பலரது எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கி விட்டது. சரி, போனதெல்லாம் போகட்டும், இனி மிச்சமிருக்கும் காலத்தில் வாழ்வின் உச்சத்தை எப்படி தொடுவது? இது அனைத்து தரப்பினருக்கும் முன் உள்ள கேள்விக்குறி.

வீழ்ந்த பொருளாதாரத்தை எப்படி மீட்டெடுப்பது? இழந்த வேலைக்கு வேறு என்ன புது வேலை வாய்ப்பு? பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை எப்படிக் காப்பது?

அது மத்திய, மாநில அரசுகளின் கைகளில் தான் இருக்கிறது. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தினால் மட்டுமே, அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு உருவாக்கம் சாத்தியமாகும். வேலைவாய்ப்பு உருவானால்தான் மக்களின் வாங்கும் சக்தி மேம்படும். வாங்கும் சக்தி மேம்பட்டால்தான், தொழில்கள் சிறக்கும். தொழில்கள் சிறந்தால் அனைவருக்கும் வேலை கிடைக்கும். விவசாயம் மேம்படும். சேவைத்துறை செழிக்கும். வளர்ந்த நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் பொருளாதார வீழ்ச்சியையும், நோய் தொற்றுகளால், பஞ்சத்தால் பல்வேறு இக்கட்டான சூழல்களையும் கடந்து வந்தது எப்படி என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

இன்றைக்கு கரோனாவில் இருந்து மக்களைக் காப்பது ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்பது மறுபுறம், இப்படிப்பட்ட கால கட்டத்தில் அண்டை நாடுகளுடன் போர் போன்றவற்றை முற்றிலும் பேச்சுவார்த்தை ராஜதந்திரத்தை பயன்படுத்தி தடுக்க வேண்டும். போர்ச்சூழல் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த காலகட்டத்தில் தான் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த ரூ. 50 லட்சம் கோடிஅளவில் உள்நாட்டு உற்பத்தியிலும், வரிவருமானத்திலும், உலக வங்கி கடன் மூலமும் மற்றும் அந்நிய முதலீட்டை இந்தியாவுக்குக் கொண்டு வர ஏதுவான திட்டங்களை உடனடியாகத் தீட்ட வேண்டும். உலக கடனும், வெளிநாட்டு மூலதனமும் இந்தியாவின் அடுத்த 30 ஆண்டுகால தொலைநோக்குப் பார்வையும் அதைச் செயல்படுத்தும் வல்லமை பெற்ற தலைமையைப் பொறுத்துதான் அமையும்.

இந்தியா சுயசார்பை அடைய வேண்டும் என்றால் அதற்கு முதலில் அடிப்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்பு, அறிவார்ந்த சொத்து உலகளவில் பதிவு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, அதன் மூலம் பொருள்களை உற்பத்தி செய்யும் இணைப்புச் சங்கிலி கட்டமைப்பிற்கு உள்நாட்டு உற்பத்தியான GDP - இல் 3 சதவிகிதம் நிதி வரும் 10 ஆண்டுகளில் படிப்படியாக ஒதுக்கப்படவேண்டும். இது தான் வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்து இருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் முதற்படி.

இந்தியா இறக்குமதிக்குச் செலவு செய்யும் 32 லட்சம் கோடியில் பாதியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் வகையில் தொழில்களைத் தேர்ந்தெடுத்து அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா சுயசார்பை அடையும் நோக்கில் திட்டங்களைத் தீட்டி, அதற்குத் தேவையான ஆராய்ச்சிகளுக்கும், தொழில் நுட்பத்திற்கும், உற்பத்திக்கும், இடுபொருள்கள் உற்பத்திக்கும் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தி 15 லட்சம் கோடியை முதலில் சேமித்து, இந்தியா தன்னிறைவு பெற்ற பின்பு, ஏற்றுமதி செய்யும் வழிமுறையை, கொள்கையை உருவாக்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.

"இந்தியாவில் உற்பத்தி செய், வெளிநாட்டில் விற்பனை செய்' என்ற தாரக மந்திரத்தை உருவாக்கி இந்தியா சீனாவை மிஞ்சும் உற்பத்தி கேந்திரமாக மாற்றியமைக்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் Industry 4.0 and Industry 5.0 அடிப்படையில் எதிர்கால தொழிற்சாலைகளை - இந்திய சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை -உருவாக்கும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

அடுத்து நதி நீர் இணைப்பையும், அதி திறன் நீர் வழிச்சாலை திட்டங்களையும் கொண்டு வரவேண்டும். அப்படிக் கொண்டு வந்தால் அதன் மூலம் விவசாயம் பெருகும். மின்சார உற்பத்தி பெருகும். நீர்வழிச்சாலை போக்குவரத்து அதிகரிக்கும். 2050 -இல் உலகத்திற்கு உணவளிக்கும் முதல் நாடாக இந்தியா முதலிடத்திற்கு வரவேண்டும் என்றால் இதற்கு ரூ.10 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும். இதில் விவசாயத்தைப் பெருக்கவும், SRI, SSI, Precision Farming மற்றும் இயற்கை உணவை உருவாக்கும் Aquaponics போன்ற உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த கணிசமான தொகை ஒதுக்கப்பட வேண்டும். விவசாய நிலத்திலிருந்து உலகத்தின் சாப்பாட்டு மேஜை வரை இந்திய உணவு சென்று சேரும் விற்பனைச் சங்கிலி உருவாக்கப்பட வேண்டும்.

6 லட்சம் கிராமங்களின் பாரம்பரியமும், இன்றைய நவீன தொழில்நுட்பமும் கலந்த தொழிலாக இது மாற வேண்டும். கிராமப்புறம் சுயசார்பை எட்டவேண்டுமென்றால் அப்துல்காமின் "புரா' திட்டதை இந்தியா முழுக்க செயல்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்கி, கிராமப்புற அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி "புரா' கிராமங்கள் தன்னிறைவடைந்த சுயசார்பு கிராமங்களாக உருவாக வேண்டும். இந்தியாவின் கிராமப்புற விவசாயம், மீன் வளம், கால்நடை வளம் சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட தொழில்கள், பாரம்பரிய தொழில்கள் மற்றும் கலைகளை நவீனப்படுத்தி அதை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்லவும் வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

2020 -இல் இந்தியாவில் உபயோகிப்பாளர் வாங்கும் திறன் ரூ. 270 லட்சம் கோடியாக உயரும் என்று ASSOCHAM Indian FMCG Market 2020 சர்வே மதிப்பிடுகிறது. இதில் பெரும்பாலும் வெளிநாட்டு பொருள்கள்தான் இறக்குமதியாகின்றன. FMCG சந்தையில் 50% இந்தியப் பொருள்கள் பிடிக்கும் நிலையை இந்தியா கைப்பற்ற, கிராமப்புற சிறு மற்றும் குறும் தொழில்களை உருவாக்கி FMCG துறையிலும், சில்லரை வர்த்தகத்திலும் இந்தியா உலக அரங்கில் கால் பதிக்க ரூ. 5 லட்சம் கோடியை ஒதுக்கி அதில் தொழில் முனைவோர்களை உருவாக்கி ஊக்கப்படுத்த வேண்டும். அதில் அவர்களுக்குத் தேவையான 25 சதவிகித முதலீட்டை அரசு செய்ய வேண்டும், அதை உலகதரத்திற்கு எடுத்துச் செல்ல இது உதவியாக இருக்கும். அதற்கு தேவை ஆராய்ச்சி. MSME துறைக்கு தேவையான நிதி உதவி என இத்தனையும் செய்தால் தான் இந்தியா சுயசார்பு அடைய முடியும். மருந்து உற்பத்தித் துறை, விவசாயத்துறை, தொழிற்துறை, Bio medical engineering, health care sector, real estate sector, construction sector இப்படி பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே இன்றைக்குப் படிக்கக் கூடிய மாணவர்களாகிய உங்கள் கனவு நனவாகும். அடுத்த 20 ஆண்டுகளில் அப்துல் கலாம் கொடுத்த இந்தியா 2020 என்ற தொலைநோக்குப் பார்வையை திட்டத்தை மேம்படுத்தி செயல் படுத்துவதன் மூலம் தான் நடக்கும்.

உலக அளவில் மருந்து உபயோகப்படுத்துவதில் 2020- இல் US$ 1.4 ட்ரில்லியன் லட்சம் கோடி இருந்து US$ 2 ட்ரில்லியனாக உயரும் வாய்ப்பு 2025- இல் இருக்கிறது. அதில் 25-50% இந்தியா பிடிக்க 5 லட்சம் கோடி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திட்டங்களை மத்திய அரசு மற்றும் தனியார் முதலீட்டில் இணைந்து செயல்படுத்த வேண்டும், அதில் ரூ.20,000 கோடி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும். உற்பத்தித் துறையை மேம்படுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பட மேக்-இன்-இந்தியா திட்டத்தில் பல்வேறு வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் விற்பனை செய்யும் அனைத்துப் பொருள்களையும் இந்தியாவிலேயே உருவாக்க இந்திய பொது மற்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களோடு கூட்டுத் தயாரிப்பில் ஈடுபட செய்வதற்கு வழி வகுக்க வேண்டும்.

முக்கியமான பாதுகாப்பு மேம்பாடு, விண்வெளி துறை, விமானத்துறை, அணுமின்சார ஆராய்ச்சி துறைகளில் ஆராய்ச்சியில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. அதை இந்திய அரசு தான் செய்ய வேண்டும். ஆனால் ஆராய்ச்சியால் விளைந்த பொருள்களின் உற்பத்திக்கு தனியார் முதலீட்டை ஊக்குவிக்கலாம். அதில் பெரும்பாலும் இந்திய நிறுவனங்களோடு கூட்டுத் தயாரிப்பிற்கு வழிவகுக்க வேண்டும்.

எந்த ஒரு நாடு அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து செயலாற்றுகிறதோ, அது தான் ஒரு வலிமையான, வளர்ந்த, அறிவார்ந்த நாட்டைக் கட்டமைக்க முடியும். சீனா கடந்த 30 ஆண்டுகளில் நாட்டை ஆராய்ச்சியிலும், உற்பத்திதுறையிலும், அறிவார்ந்த சொத்து உருவாக்கத்திலும், தொழில் நுட்ப மேம்பாட்டிலும் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா கடந்த 30 ஆண்டுகளில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு உலகை ஆட்டிப் படைக்கும் தொழில் நுட்ப ஆராய்ச்சிக்கு வித்திட்டு, தன்னை உலகத்தின் முதன்மையான பொருளாதார, மாற்றும் ராணுவ வல்லரசாக நிலை நிறுத்தியிருக்கிறது. இதுவரை நாம் 20 ஆண்டுகளை இழந்துவிட்டோம். டாக்டர் கலாமின் கனவு இலட்சியங்கள் தான் இந்தியாவை அறிவார்ந்த வல்லரசு நாடாக்கும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்: vponraj@live.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com