
ஒரு மாலை நேரத்தில் அமெரிக்க, மான்டனாவில் உள்ள தேசிய பூங்காவில் உள்ள புனித மேரி ஏரியை புகைப்படக் கலைஞரும், விஞ்ஞானியுமான கௌரவ் அகர்வால் எடுத்த இந்தப் புகைப்படம் ஆன்ட்ராய்டு செல்லிடப் பேசிகளை செயலிழக்க செய்கிறது. சமூக வலைதளத்தில் கடந்த சில நாள்களாக வைரலாக பரவி வரும் இந்த புகைப்படம் பற்றிய தகவல்கள் உண்மையா, பொய்யா என்று கேள்வி எழுந்துள்ளது.
அது எப்படி ஓர் அழகான புகைப்படம், செல்லிடப் பேசியை முடக்கியும், அதில் உள்ள தகவல்களை அழிக்கவும் செய்கிறது என்பது பலரது சந்தேகம்.
இந்த புகைப்படத்தை நிகான் கேமராவில் எடுத்த கௌரவ் பின்னர் "கலர் ரூம்' எனும் மென்பொருளில் எடிட் செய்துள்ளார்.
பின்னர் தான் எடுத்த புகைப்படத்தில் உள்ள வண்ணங்களின் அசல்தன்மை அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக "புரோ போட்டோ ஆர்ஜிபி' என்ற முறையில் ஒரே வண்ணத்தில் "சேவ்' செய்து "ஃபிளிக்கர்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டார். அதில் இருந்து வேறொருவர் அந்த போட்டோவை எடுத்து தனது செல்லிடப் பேசியில் முன்திரை படமாக (வால்பேப்பர்) வைத்ததால் அவரது ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி செயலிழந்துள்ளது.
வழக்கமாக ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் ஒவ்வொரு வண்ணத்துக்கும் தனியாகச் சேமிப்பு அளவு இடம் உண்டு. இந்த இடம் "புரோ போட்டோ ஆர்ஜிபி'யின் புகைப்பட வண்ணத்தின் அளவு அதிகமாக உள்ளதால் ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் செயலிழப்பதுதான் இதற்கு காரணம்.
அதுவும் சாம்சங் போன்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இணையதளத்தில் பலர் பதிவிட்டுள்ளனர். இந்தப் பிரச்னைக்கு சாம்சங் நிறுவனம் தீர்வு காண தீவிர முயற்சி செய்து வருகிறது.
ஆகையால், இந்த புகைப்படத்தை ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் முன்திரை படமாக வைக்காமல் தவிர்ப்பதே நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.