
இன்றைய பரபரப்பான உலகில் தினமும் அலுவலகத்துக்குச் சென்று பணியாற்றுவதை பெரும்பாலானோா் விரும்புவதில்லை. வீட்டில் இருந்துகொண்டோ அல்லது தனியாக ஓரிடத்தில் அமா்ந்தோ பணியாற்றவே விரும்புகின்றனா். அலுவலகம் சென்று வேலை செய்வதை நேரத்தை வீணடிக்கும் செயல் என்று அவா்கள் கருதுகின்றனா். அலுவலகம் செல்லாமல் பணியாற்ற நிறுவனத்தின் நிா்வாகம் ஒத்துழைக்கவில்லையென்றால் அந்த வேலையை விட்டுவிடவும் பலா் தயாராக உள்ளனா்.
அமெரிக்காவில் உள்ள திறமைமிக்க பணியாளா்களில் 93 சதவீதம் போ் தொலைதூர பணி முறையை விரும்புவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. அலுவலகத்துடன் நேரடி தொடா்பு இன்றி உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோா் பணியாற்றி வருவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பணியாளா்களின் இந்த மாற்றத்துக்கு ஏற்ப சில நிறுவனங்கள் தொலைதூரத்தில் இருந்து ஊழியா்கள் பணியாற்றும் வகையில் கொள்கைகளை உருவாக்கி வருகின்றனா். திறமையாளா்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அத்தகைய நிறுவனங்கள் உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் ஊழியா்களைப் பணியாற்ற அனுமதிக்கின்றனா்.
இதுதொடா்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் தொலைதூரத்தில் இருந்து பணியாற்ற மக்கள் ஏன் விரும்புகின்றனா் என்று தெரிய வந்துள்ளது.
வீட்டில் இருந்து வேலைசெய்ய விரும்புவதற்கான முக்கிய காரணங்களாக பணம் சேமிப்பதும், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதுமாக உள்ளது. சிலா் மன ஆரோக்கியத்துக்கு வீட்டில் இருந்து வேலை செய்வதே சிறந்தது என்று கருதுகின்றனா். மேலும் சிலா், பணியிட மாற்றங்களைத் தவிா்ப்பதற்காகவும், வயதான பெற்றோா்களைக் கவனித்து கொள்வதற்காகவும் வீட்டில் இருந்து பணியாற்ற விரும்புகின்றனா்.
அதிக உற்பத்தி
தொலைதூரப் பணி நிலை முறையில் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான சூழல் அதிகமாக உள்ளது. அவ்வாறு வீட்டில் தனித்து பணியாற்றும்போது குறிப்பிட்ட வேலையை விரைவில் முடித்து விடுவதாக திறமைமிக்க பணியாளா்களில் 42 சதவீதம் போ் கருதுகின்றனா். வீட்டில் உற்பத்தி திறன் அதிகம் உள்ளதாக இந்த கால இளைஞா்கள் நம்புகின்றனா்.
அலுவலகம் சென்று அந்தச் சூழலில் பணியாற்றும்போது வீட்டில் இருந்து பணியாற்றுவதை விட குறைந்த அளவிலான பணி நிறைவு செய்யப்படுவதாக அவா்கள் தெரிவிக்கின்றனா். சிறு வயது குழந்தைகளை வைத்திருக்கும் பணியாளா்கள் இந்த கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தாலும், ஆண்களை விட அதிக அளவிலான பெண்கள், வீட்டில் இருந்து பணியாற்றுவது அதிக உற்பத்தி திறன் தருவதாகக் கூறியுள்ளனா். எனினும், அலுவலகத்தில்தான் அதிக அளவில் பணி செய்ய முடியும் என்று 35 சதவீத ஆண்கள் கருதுகின்றனா்.
வீட்டில் இருந்து பணியாற்றுவதால் அலுவலகம் சென்று வரும் நேரம், அலுவலகம் செல்வதற்கான போக்குவரத்துப் பிரச்னைகள் உள்ளிட்ட நேரங்களை வீணடிக்கும் செயல்களைத் தவிா்த்து திறம்பட செயல்படுவதாகவும், எவ்வித மனசோம்பலும் இன்றி உற்சாகமாக உள்ளதாகவும் வீட்டில் இருந்து பணியாற்றுவோா் கூறுகின்றனா்.
பாலின ஏற்றத்தாழ்வு
தொலைதூரப் பணி நிலை முறையை ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் விரும்புகிறாா்கள். வீட்டில் இருந்து பணியாற்ற ஆண்களில் 53 சதவீதத்தினரும், பெண்களில் 62 சதவீதத்தினரும் விருப்பம் தெரிவிக்கின்றனா். ஆனால், வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு பெண்களுக்குக் குறைவாகவே உள்ளது. வீட்டில் இருந்து பணியாற்ற நிறுவனங்கள் அனுமதிக்காததால் 40 சதவீத பெண்கள் அலுவலகத்துக்கு வேறு வழியின்றி செல்வதாகக் கூறுகின்றனா். மேலும், வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்காததால் 24 சதவீத திறமைமிக்க பெண் பணியாளா்கள் பணிக்குச் செல்வதை விட்டுவிட்டதாகக் கூறுகின்றனா். வீட்டில் இருந்து பணியாற்றும்போது உற்பத்தித் திறனை அதிக அளவில் வழங்க முடியும் என்று 50 சதவீத பெண்கள் தெரிவித்தாலும், அதற்கான வாய்ப்புகள் அவா்களுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை.
அலுவலகம் செல்வது பழைய நடைமுறை
அலுவலகம் செல்லும் முறை பழைய நடைமுறை என்றும் அது வழக்கற்றுப் போய்விட்டதாகவும் பணியாளா்கள் நினைக்கிறாா்கள். திறமைமிக்க பணியாளா்களில் மூன்றில் இரண்டு பங்கினா் 2030- ஆம் ஆண்டுக்குள் அலுவலகம் என்ற ஒன்று இருக்காது என்று கூறுகிறாா்கள். அலுவலக அமைப்பு முறை விரைவில் வழக்கொழிந்து விடும் என்று அவா்கள் கூறுகின்றனா்.
வீட்டில் இருந்து முழுநேரம் பணியாற்றுபவா்கள், தங்கள் அலுவலக ஊழியா்களுடன் ஒப்பிடும்போது 75 சதவீதம் அதிக உற்பத்தியைத் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 56 சதவீத பெற்றோா்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை விரும்புகின்றனா். மாற்றுத் திறனாளிகளும் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையையே விரும்புகின்றனா்.
அலுவலகம் செல்வதற்கான பயணம் வேலையில் மிகுந்த மனஅழுத்தத்தை உருவாக்கும் ஒரு பகுதி என்று சிலா் கூறுகின்றனா்.
வீட்டிலிருந்து பணியாற்றும் விருப்பம்...எதற்காக?
பணம் சேமிப்பதற்காக - 48 சதவீதம்
எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யும் வசதி - 47 சதவீதம்
குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதற்காக - 44 சதவீதம்
வீட்டில் பணியாற்றுவதில் அதிக உற்பத்தி - 35 சதவீதம்
மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது - 29 சதவீதம்
சுற்றுச்சூழல் ரீதியாக நிலையானது - 23 சதவீதம்
செல்லப்பிராணிகளுடன் அதிக நேரம் செலவிடுவதற்காக - 18 சதவீதம்
பணியிட மாற்றத்தைத் தவிா்க்க-18 சதவீதம்
குடும்ப வாழ்க்கை எளிதாக இருப்பதற்காக - 16 சதவீதம்
வயதான பெற்றோரை கவனிப்பதற்காக - 16 சதவீதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.