சமூக இடைவெளி... எச்சரிக்கும் நாய் ரோபோக்கள்!

மிகவும் தூய்மையான நகரம் என்று கருதப்படும் சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை கரோனா வைரஸ். 57 லட்சம் மக்கள் வாழும் சிங்கப்பூரில்
சமூக இடைவெளி... எச்சரிக்கும் நாய் ரோபோக்கள்!


மிகவும் தூய்மையான நகரம் என்று கருதப்படும் சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை கரோனா வைரஸ். 57 லட்சம் மக்கள் வாழும் சிங்கப்பூரில் சுமார் 21 ஆயிரம் பேரை கரோனா வைரஸ் தொற்றிக் கொண்டுள்ளது.  வேறு நாடுகளில் இருந்து வேலைக்காக சிங்கப்பூருக்கு வந்து தடைசெய்யப்பட்ட  தங்குமிடங்களில் வாழ்பவர்களே அதில் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்கள். 

சிங்கப்பூர் அரசு பொது இடங்களில் மக்கள் கூடுவதை  தடை செய்து இருக்கிறது. வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்க  ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்தால்,  அவர் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.  பொது இடங்களில் இன்னொரு நபரிடமிருந்து  1 மீட்டர் இடைவெளிவிட்டு  நிற்க வேண்டும் என்றெல்லாம் கட்டளை பிறப்பித்திருக்கிறது. மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கிறது. 

"வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தால் என் உடல் நலம் கெட்டுப் போகும்' என்று  புலம்புகிறவர்கள்,  வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவுக்குச் செல்லலாம். நடைப்பயிற்சி,  ஜாக்கிங்,  சைக்கிள் ஓட்டுவது ஆகியவற்றைச் செய்யலாம். கடுமையான மூச்சு வாங்கும் உடற்பயிற்சி செய்பவர்களைத் தவிர, எல்லாரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் உள்ள சென்ட்ரல் பூங்காவுக்கு நீங்கள் சென்றீர்கள் என்றால்,  ஒரு நான்கு கால் நாய் ரோபோ  பூங்காவில் ஓடி வருவதைப் பார்க்க முடியும். நடஞப என்ற பெயருடைய இந்த நாய் ரோபோ,  "நம்ம ஊர் நகராட்சி  விளம்பர வாகனத்தைப் போல' , "நீங்கள் உங்களுடைய சொந்தப் பாதுகாப்பிற்காகவும், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் ஒரு  மீட்டர் இடைவெளிவிட்டு இருங்கள்' என்று சத்தமாக அறிவித்தபடி செல்லும். 

இந்த நாய் ரோபோவை  போஸ்டன் டைனமிக்ஸ் (BOSTON DYMAMICS) என்ற நிறுவனம் தயாரித்து இருக்கிறது.  சிங்கப்பூரின் தேசியப் பூங்கா நிறுவனமும்,  ஸ்மார்ட் நேஷன் அண்ட் டிஜிட்டல் கவர்ன்மென்ட் க்ரூப் என்ற நிறுவனமும் இணைந்து இந்த நாய் ரோபோவை சென்ட்ரல் பூங்காவில் வலம் வரச் செய்திருக்கிறது. 

இந்த நாய் ரோபோவில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. சென்சார்கள்  பொருத்தப்பட்டுள்ளன.  நாய் ரோபோ போகும் பாதையில் எதிர்ப்படும் நபர்கள், பொருள்களை சென்சார்களின் மூலம் நாய் ரோபோ உணர்ந்து விலகிச் செல்லும். 

பூங்காவில் ஒரு நாளில் எத்தனை பேர் வந்தார்கள் என்ற தகவலையும் இந்த நாய் ரோபோ சொல்லிவிடும். தொலை தூரத்திலிருந்தே இந்த நாய் ரோபோக்களை இயக்க முடியும். 

பொது இடங்களில் குறிப்பிட்ட இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களை இந்த நாய் ரோபோ கண்டுபிடித்துச் சொல்லிவிடும் என்பதால்,  அதற்குப் பயந்து  பலர் குறிப்பிட்ட இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்கள். 
பூங்காவைப் பாதுகாக்கும் பணியாளர்களின் எண்ணிக்கையைக்  குறைக்கவும்,  மக்களிடம் அவர்கள் நேரடித் தொடர்பு கொண்டு அதனால் கரோனா வைரஸால் பாதிக்கப்படாமலிருக்கவும் இந்த நாய் ரோபோ பயன்படுகிறது. 

சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 30 நாய் ரோபோக்கள் சென்ட்ரல் பூங்காவைப் போல பிற பூங்காக்களிலும், பொது இடங்களிலும் சுற்றித் திரிகின்றன.  தற்போது முன்னோட்டமாகாகத்தான்  இவை பொது இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இவை சிங்கப்பூர் பாதுகாப்புப் படையில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com