பால்வெளியின் ஒலி எப்படி இருக்கும்?

நமது சூரிய மண்டலம் உள்பட கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களின் தாயகமான பால்வெளி அண்டம் எப்படி இருக்கும் என்பது ஓரளவுக்கு நமக்குத் தெரியும்.
பால்வெளியின் ஒலி எப்படி இருக்கும்?

நமது சூரிய மண்டலம் உள்பட கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களின் தாயகமான பால்வெளி அண்டம் எப்படி இருக்கும் என்பது ஓரளவுக்கு நமக்குத் தெரியும். தொலைநோக்கிகள் மூலம் பெறப்பட்ட தரவுகளைப் புகைப்படங்களாக, வீடியோக்களாக உருமாற்றித் தந்துள்ளனர் விஞ்ஞானிகள். அதன்மூலம் அதன் வண்ணச் சிதறல், வடிவமைப்பு குறித்து பார்த்துத் தெரிந்து கொள்கிறோம். 

ஆனால், பால்வெளி அண்டத்தின் மையப் பகுதியில் எந்த மாதிரியான ஒலி கேட்கும்? இதுவரை தெரியாமல் இருந்த அக்கேள்விக்கு அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா தற்போது விடையளித்துள்ளது.

பால்வெளி அண்டத்தின் மையப் பகுதியிலிருந்து சூரிய மண்டலம் 25 ஆயிரம் ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. பால்வெளி அண்டத்தின் ஒரு பகுதியாக சூரிய மண்டலம் இருப்பதால் வெறும்  கண்களால் நமது  பால்வெளி அண்டத்தைக் காண இயலாது. அந்த வகையில் தொலைநோக்கிகள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கை கொடுக்கின்றன. அதேபோல் பால்வெளி அண்டத்தின் மையப் பகுதியில் எந்த மாதிரியான ஒலி இருக்கும் என்பதை அறிய "சோனிஃபிகேஷன்' என்ற தொழில்நுட்பத்தை நாசா  விஞ்ஞானிகள் பயன்படுத்தினார்கள். தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட டிஜிட்டல் தரவுகளைப் புகைப்படங்களாக்கி, அந்தப் புகைப்படங்களில் சோனிஃபிகேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படத் தரவுகளை ஒலியாக மாற்றினார்கள். நாசாவின் சந்திரா எக்ஸ்ரே மையம் இந்தப் பணியை மேற்கொண்டது. மூன்று புகைப்படங்களில் இந்த பரிசோதனை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.

இதையடுத்து, பால்வெளியின் ஒலி எப்படி இருக்கும் என்கிற வீடியோவை செப். 22-ஆம் தேதி நாசா தனது இணையதளத்தில் பதிவேற்றியது. புகைப்படத்தின் இடதுபுறத்திலிருந்து வலதுபக்கமாக  நகரும் அந்த ஒலிக்கோவையில், கீழ் வலதுபுறத்தை அடையும்போது உச்சஸ்தாயியில் ஒலிகேட்கிறது. மொத்தத்தில் அந்த ஒலி ஒரு மெல்லிசை போன்று இருக்கிறது. இந்த ஒலியைக் கேட்டு சுட்டுரையில் பகிர்ந்துள்ள ஏராளமான விண்வெளி ஆர்வலர்கள், "சண்டை சச்சரவுகள் நிறைந்தது பூமி. ஆனால், பால்வெளியின் மையம் இப்படி ஓர் இனிமையான, நிம்மதியான இசையைத் தரும்  இடமாக அல்லவா இருக்கிறது' என வியந்துள்ளனர். நீங்களும் கேட்டுப் பாருங்களேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com