இணையத்தில் தமிழ்ப் பணி!

தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்பவர்கள், நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து அதிலேயே மூழ்கிக் கிடப்பார்கள்.
இணையத்தில் தமிழ்ப் பணி!

தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்பவர்கள், நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து அதிலேயே மூழ்கிக் கிடப்பார்கள். அத்துறை சார்ந்த அறிவை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு வேறு எதிலும் அக்கறையிருக்காது. இப்படித்தான் நிறையப் பேர் நினைக்கிறார்கள். மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்தாலும், எந்நேரமும் இணையத்தின் மூலமாக தமிழுக்கான பணிகளைச் செய்து கொண்டே இருக்கிறார்.
கணினியில் தட்டச்சு செய்யும் தமிழில் உள்ள எழுத்துப் பிழை, சந்திப் பிழை எல்லாவற்றையும் சரி பார்த்துத் திருத்தித் தர உதவும் செயலிகளை அந்த இளைஞர் உருவாக்கியிருக்கிறார். ஒரு தமிழ்ச் சொல்லுக்கான பொருளை பல அகராதிகளின் மூலமாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை அவர் இணையத்தின் மூலமாக வழங்குகிறார்.
"நீச்சல்காரன்.காம்' என்ற வலைதளத்தின் மூலமாக இந்தப் பணிகளைச் செய்து வரும் அந்த இளைஞர் ராஜாராமன். மதுரையைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்கிறார். தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கும் அவருக்கு, தமிழ்ப்பணிகளில் எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது என்று கேட்டோம். அவர் கூறியதிலிருந்து...
""நான் மதுரை யாதவர் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியல் படித்தேன். வளாக நேர்காணலில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை என்றாலும் எனக்குக் கவிதை எழுதுவதில் ஆர்வம் இருந்தது. "நீச்சல்காரன்.காம்' என்ற பெயரில் வலைதளத்தைத் தொடங்கி அதில் கவிதைகளை எழுதினேன்.
கவிதைகளைப் படித்தவர்கள் அதில் நிறைய எழுத்து, சொற்பிழைகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டினார்கள். தமிழ் எழுத்து, சொற்பிழைகளை சரி செய்யும் செயலியை ஏன் உருவாக்கக் கூடாது என்று நினைத்தேன். அதன் விளைவாக உருவானதுதான் "நாவி'. அது தமிழின் சந்திப் பிழைகளைச் சுட்டிக்காட்டும். அதற்குப் பிறகு சந்திப் பிழையுடன், எழுத்துப் பிழை, புணர்ச்சிப் பிழை, ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்க உதவும் திருத்தி ஆகியவற்றுடன் கூடிய "வாணி' பிழை திருத்தியை உருவாக்கினேன். ஒரு பெரிய கட்டுரையில், நூலில் உள்ள பிழைகளை மட்டும் சுட்டிக் காட்டும் "நோக்கர்' செயலி எனது அடுத்த தயாரிப்பாக இருந்தது. இவ்வாறு கணினியில் எழுதப்படும் தமிழில் உள்ள பிழைகளைத் திருத்தும் பல செயலிகளை உருவாக்கியிருக்கிறேன்.
ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் பிழை திருத்திகளை ஆங்கில அகராதிகளில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி உருவாக்க முடியும். நான் தமிழ் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு பிழை திருத்திகளை உருவாக்கி இருக்கிறேன். இதற்காக தமிழ் இலக்கணத்தைக் கற்றுக் கொண்டேன்.
கணினியில் தட்டச்சு செய்யும் தமிழ் எழுத்துகள் பல வகைகளில், வடிவங்களில் உள்ளன. அவற்றை யுனிகோடாக மாற்ற ஏற்கெனவே பல செயலிகள் இருக்கின்றன. ஆனால் அவை அதிகபட்சம் 20 வகை தமிழ் எழுத்துகளைத்தான் யுனிகோடாக மாற்றும். நான் உருவாக்கியுள்ள "ஓவன் ஒருங்குறி மாற்றி' யில் 45 வகையான தமிழ் எழுத்துகளை யுனிகோடாக மாற்ற முடியும்.
"வாணி- தொகுப்பகராதி' என்னுடைய இன்னொரு முயற்சி. ஒரு தமிழ்ச் சொல்லுக்கு பல அகராதிகளிடம் இருந்து விளக்கம் தரும் வகையில் இதை உருவாக்கி இருக்கிறேன். அம்மாவிடம், அம்மாவினால் என்று பொருள் தேடினால் அந்த சொற்களுக்கான வேர்ச் சொல்லான "அம்மா' என்ற சொல்லின் அடிப்படையில் பல விளக்கங்களை இந்த தொகுப்பகராதி தரும். இதில் 60 ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கான விளக்கங்கள் உள்ளன.
ஆரூர் பாஸ்கர் என்ற நண்பருடன் சேர்ந்து தமிழில் உள்ள வலைப்பதிவுகளின் குறிப்பிடத்தக்க பதிவுகளை தமிழ்ச்சரம்.காம் என்ற வலைதளத்தின் மூலம் தொகுத்துத் தருகிறோம்.
நான் உருவாக்கியிருப்பவற்றை இணையத்தில் வெளியிடும் செலவுகளை வலைத்தமிழ். காம் ஏற்றுக் கொள்கிறது. எனவே அந்தச் செலவு எனக்கில்லை. ஆனால் நான் பார்க்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவன வேலைகளைச் செய்து கொண்டே கூடுதலாக இதற்காக நான் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. ஆர்வம் இருப்பதால் சிரமம் தெரியவில்லை.
தமிழக அரசின் "தமிழ் இணையக் கல்விக் கழகம்' நான் உருவாக்கிய செயலிகளைப் பயன்படுத்துகிறது.
என்னுடைய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி கனடாவின் "தமிழ் இலக்கியத் தோட்டம்' என்ற அமைப்பு "சுந்தரராமசாமி நினைவு (தமிழ்க் கணிமை) விருதை எனக்கு வழங்கியிருக்கிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com