எங்கேயும்... எப்போதும்!

""வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அரசு சம்பளம் தர வேண்டும்'' என்று கூறியிருக்கிறார் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான ஆக்சனா புஷ்கினா.
எங்கேயும்... எப்போதும்!

வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சம்பளம்!

""வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அரசு சம்பளம் தர வேண்டும்'' என்று கூறியிருக்கிறார் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான ஆக்சனா புஷ்கினா. இவர் ரஷ்ய நாட்டின் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். ரஷ்ய நாடாளுமன்றத்தின் "குடும்பம், பெண்கள் மற்றும் குழந்தைகள் வாரியத்தின்' துணைத் தலைவரும் கூட.

""காலங்காலமாக பெண்கள் அனுபவித்துவரும் பொருளாதாரச் சமமின்மையை அரசு சரி செய்ய வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், ""எனது அடுத்த முக்கியமான பணியாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு
சம்பளம் தருவதற்கான சட்டத்தைக் கொண்டு வருவதே'' என்கிறார். இதேபோன்ற கருத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் விளாடிமிர் ஸிர்னோவ்ஸ்கி என்ற புகழ் பெற்ற வழக்கறிஞர் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு குறைந்தது 12, 130 ரூபிள்கள் (சுமார் ரூ.12,000) தர வேண்டும் என்று அவர் சொன்னார். வரவு - செலவுக் கணக்கின் அடிப்படையில் அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

""நான்கு குழந்தைகள் உள்ள ஒரு தாய் குடும்பத்துக்காகத் தனது வேலையை விட்டுவிடுகிறார் என்றால், அவர் ஒவ்வொரு செலவுக்கும் தனது கணவனின் வருமானத்தையே நம்பியிருக்க வேண்டும். கணவன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டால், அவள் என்ன செய்வாள்?'' என்று கேட்கும் ஆக்சனா புஷ்கினா, பெண்களைப் போலவே வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் ஆண்களுக்கும் சம்பளம் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


கட்டுப்பாடு தளர்வு!

கஞ்சா ஒரு போதைப் பொருள் என்பது எல்லாருக்கும் தெரியும். கஞ்சா விற்பது தண்டனைக்குரிய குற்றமாக பல நாடுகளில் கருதப்படுகிறது. 1961- ஆம் ஆண்டு பன்னாட்டு அளவிலான மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கஞ்சாவுக்கு எதிராகப் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இந்த மாதம் கூடிய ஐநா சபை கஞ்சாவின் மீதிருந்த கடுமையான கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளது. கஞ்சாவின் மருத்துவப் பயன்களை ஆராய்ச்சி செய்வதற்கும், அவற்றைக் கண்டறிவதற்கும் இந்த "தளர்வு' உதவும் என அது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் சிங்கப்பூர் அரசு, ஐநாவின் இந்த அறிவிப்புக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறது. ஐநா சபை கட்டுப்பாடுகளைத் தளர்த்தினாலும், சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது என அறிவித்துள்ளது சிங்கப்பூர் அரசு.

செவிலியர்கள் பற்றாக்குறை!

கரோனா தீநுண்மி தொற்று அமெரிக்காவைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. அமெரிக்க மருத்துவ மனைகளில் செவிலியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் மாகாண அரசுகள் செவிலியர்களின் பற்றாக்குறையைச் சரி செய்ய பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின், நெப்ராஸ்கா மாகாண அரசுகள் ஓய்வு பெற்ற செவிலியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தத் தொடங்கியிருக்கின்றன. இதற்காக ஓய்வு பெற்ற செவிலியர்களுக்கான லைசென்ஸ் தொடர்புடைய விதிமுறைகளைத் தளர்த்தியிருக்கின்றன. வயதானவர்களை கரோனா தொற்றிக் கொள்ளும் என்பதே இவர்களை வேலைக்கு அமர்த்துவதில் இருக்கும் பிரச்னை.

அயோவா மாகாணத்தில் இப்போதுதான் செவிலியர் படிப்பு படித்து முடித்திருக்கிற மாணவர்களை வேலைக்கு எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த மாகாணத்தில் செவிலியர் படிப்பு படித்தவர்கள் செவிலியர் பணி செய்வதற்கான அனுமதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். "அனுமதித் தேர்வு எழுதுவதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்; முதலில் வேலைக்கு வந்து சேருங்கள்' என்ற அந்த மாகாண அரசு சொல்லியிருக்கிறது.

மினசோட்டா மாகாணத்தில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனை இன்னும் ஒரு படி மேலே போய், செவிலியர் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை வேலை செய்ய அனுமதித்திருக்கிறது. இது அவர்களுடைய படிப்பின் ஒரு பகுதியான இன்டர்ன்ஷிப் என்று அந்த மருத்துவமனை சொல்கிறது. அயோவா மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளும் செவிலியர் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை வேலைக்கு அனுமதித்துள்ளன. இவர்கள் வேலை செய்வதை, அனுபவம் உள்ள செவிலியர்கள் கண்காணிக்க வேண்டுமாம்.

இதுதவிர, வேறு மாகாணங்களில் இருந்தும் செவிலியர் பணி செய்பவர்களை அழைக்கும் பணியும் நடந்து வருகிறது. எல்லா இடங்களிலும் பற்றாக்குறை இருப்பதால், வெளி மாகாணங்களில் இருந்து வரும் செவிலியர்களுக்கு வாரத்துக்கு 6 ஆயிரத்து 200 டாலர் (ரூ.45,000) சம்பளம் வழங்கவும் தயாராக இருக்கிறார்கள்.


இப்படியும் ஒரு விளம்பரம்!

கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் பல நாடுகளில் சோதனைநிலையிலேயே உள்ளன. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் பல்கேரியா நாட்டில் ஒரு விளம்பரம் மக்களைக் கவரும் வகையில் செய்யப்பட்டிருக்கிறது.

"உடலில் ஒரு பேட்ஜை ஒட்டிக் கொண்டால், 10- 20 நாள்களில் கரோனா தொற்று முற்றிலும் குணமாகிவிடும்; உடலின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகிவிடும்' என்பதே அந்த விளம்பரம். இந்த விளம்பரம் ஏகப்பட்ட விற்பனை இணையதளங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பேட்ஜை ஏழு நாட்கள் உடலில் ஒட்டியிருக்குமாறு செய்ய கிட்டத்தட்ட ரூ.4,500 (100 பிஜிஎன்) செலுத்த வேண்டும் என்றும் நோய் முழுமையாகக் குணமாகவும், நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கவும் வேண்டும் என்றால் ரூ.9,000 (200 பிஜிஎன்) செலுத்த வேண்டும் என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது.

"கரோனா நோய்த் தொற்று மக்களிடம் பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள்' என்று பல்கேரியா நாட்டின் "ஆக்டிவ் யூசர்ஸ் அசோசியேஷன்' கூறியிருக்கிறது.

""எல்லாரும் கரோனா தொற்றிலிருந்து சீக்கிரமாக விடுபட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமற்றது. அப்படியான தீர்வுகள் எதுவும் தற்போது இல்லை. விளம்பரம் செய்யப்படும் பேட்ஜ்கள் எந்தவிதமான மருத்துவ ஆய்வுக்கும் இதுவரை உட்படுத்தப்படவில்லை. அது கரோனா தொற்றைத் தடுப்பது பற்றிய சோதனைகளும் இதுவரை செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இந்த பேட்ஜ் பற்றிய ஏராளமான விளம்பரங்களும், எல்லா மருந்துக் கடைகளிலும் இது கிடைக்கும் என்பன போன்ற அறிவிப்புகளும் தடை செய்யப்பட வேண்டியவை. மேலும் இந்த பேட்ஜை உடலில் ஒட்டுவதால் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும்'' என்று பல்கேரிய நாட்டின் மருத்துவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com