வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 272

​ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 272


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களுடன் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அங்கு மன்னரின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது பயன்படுத்தப்படும் சுவாரஸ்யமான ஆங்கிலச் சொற்கள், சொலவடைகள், அவற்றின் பொருள், தோற்றம் குறித்து தெரிந்து கொள்வோமே!

வீரபரகேசரி அமைச்சர்களை நோக்கி: நாம் முதலில் எல்லையில் நடந்து வரும் போரைப் பற்றிப் பேசுவோம். எதிரி நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? இன்னும் எத்தனை ஆயிரம் மைல்கள் கைப்பற்றிய பிறகு நம் நாட்டை விட்டு வெளியே 
போவார்களாம்?

ராணுவ அமைச்சர்: மன்னர் மன்னா, தற்போது வந்திருக்கும் ஓலையின்படி அவர்கள் பத்தாயிரம் மைல்களைக் கைப்பற்றி விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். 

வீரபரகேசரி: அதெப்படி ஒப்புக் கொள்ள முடியும்? அவர்கள் கைப்பற்றியதாகச் சொல்லும் நிலப்பகுதியில் நமது மக்கள் அல்லவா வாழ்கிறார்கள்? 

ராணுவ அமைச்சர்: அதுவே தான் மன்னா. சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டேன் என்கிறார்கள்.  இப்போது நாம் அவர்களின் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமாம். 

வீரபரகேசரி: நான் வாள் தூக்க வேண்டிய வேளை வந்து விட்டது. போர்... போர்... போர். இனி பொறுக்க முடியாது. நாளையே... 

ராணுவ அமைச்சர்: மன்னா நீங்கள் கேட்டுக் கொண்டபடி we have beat our swords into ploughshares. இனி போர் வந்தால் கஷ்டம் தான். மன்னா, நாம் முன்பே இதைச் செய்திருக்க வேண்டும். நிறைய நிதியை ராணுவ தளவாடங்களுக்கு செலவிட்டு இன்னும் தீரமாக எல்லையில் போரிட்டிருக்க வேண்டும். 

நிதியமைச்சர்: அதெப்படி? நமது அமைச்சர்கள், பினாமி முதலாளிகள் அவர்களின் நாட்டில் நிறைய முதலீடுகள் பண்ணியிருக்கிறார்கள். போர் வந்தால் அமைதி கெடும்; ஒப்பந்தங்கள் ரத்தாகும்; முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் வரும். அது நம்மையும், நாட்டையும் பாதிக்கும். முக்கியமாக மன்னா உங்களுடைய பல லட்சம் கோடிகளை எதிரி நாட்டு வங்கியில் அல்லவா போட்டு வைத்திருக்கிறீர்கள். We can’t have the cake and eat it.

கணேஷ்: எனக்குப் புரியல. இப்போ ஏன் இவர் sword, plough என்றெல்லாம் விவசாயம் பற்றி பேசுகிறார்? 

ஜூலி: Beat swords into ploughshares  எனும் சொலவடை விவிலியத்தில் இருந்து வருகிறது. ஐசய்யா ஓரிடத்தில் போரை நிறுத்தி அமைதி கண்டு,  வளர்ச்சி நோக்கில் ஆற்றலை விவசாயத்தில் செலுத்த வேண்டும் என்கிறார். அதாவது "உங்கள் வாள்களை உருக்கி ஏர்முனைகள் ஆக்கி வயலை உழுங்கள்' என்று இதை கவித்துவமாகக் கூறுகிறார். இது பின்னாட்களில் நவீன ஆங்கிலத்தில் நிதியை, ஆற்றலை யுத்தத்துக்கான தயாரிப்புக்காக அன்றி அமைதி நடவடிக்கைகளுக்காகச் செலவழிப்பது எனும் பொருளில் புழங்கப்படுகிறது.

கணேஷ்: ஓ! இப்போ புரியுது. இன்னொரு சந்தேகம். போருக்கும் கேக்குக்கும் என்ன சம்பந்தம்? எதிரி நாட்டில் மன்னர் கேக் சாப்பிட்டதால் இப்போது போர் நடத்த முடியாது என நிதியமைச்சர் கிடுக்கிப் பிடி போடுகிறாரா? 

ஜூலி: அட...  நீ வேறே... You can’t have the cake and eat it too எனும் அந்த பழமொழியின் பொருள் you cannot have it both ways என்பது.

கணேஷ்: அப்படீன்னா? 

வீரபரகேசரி: ம்க்கும். சரி... சரி. நான் ஓர் அமைதி விரும்பி. அதற்காக என்னை ஓரளவுக்கு மேல் சீண்டினால் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். We have to bite the bullet and take some tough decisions.

பிரச்சாரத் துறை அமைச்சர் இதை குறித்துக் கொள்கிறார்: ஆஹா... நம் மன்னருக்கு வீரம் வந்திடுச்சு.

வீரபரகேசரி: அந்த நாட்டு நடிகையைத் திரும்ப அனுப்பி பேரம் பேசுவோமா? 
பிரச்சாரத் துறை அமைச்சர்: அடச்சே...

ராணுவ அமைச்சர்: நடிகையை நீங்களே வச்சுக்கோங்கன்னு ஓலை அனுப்பி இருக்கிறார்கள். 

வீரபரகேசரி: மற்றொரு வீரமான ஐடியா. அவர்கள் கைப்பற்றிய தொகைக்கு மாதாமாதம் கப்பம் கட்டுவோம், பதிலுக்கு அவர்கள் தம் படைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக: அருமை மன்னா, அருமை. நீங்கள் வீரபரகேசரி என நிரூபித்து விட்டீர்கள். உம் புகழ் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்.
வீரபரகேசரி: நன்றி... நன்றி.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com