டிராகன் மாளிகை ரகசியம்!

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ நாட்டுப்புறக் கதைகளில் வரும் விஷயம்போல இருக்கிறது அல்லவா? உண்மைதான், ஆனால், இந்தத்தலைப்புக்கும் அறிவியலுக்கும் தொடர்பு இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
டிராகன் மாளிகை ரகசியம்!


தலைப்பைப் பார்த்ததும் ஏதோ நாட்டுப்புறக் கதைகளில் வரும் விஷயம்போல இருக்கிறது அல்லவா? உண்மைதான், ஆனால், இந்தத்தலைப்புக்கும் அறிவியலுக்கும் தொடர்பு இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும். அதற்கான விடையும் நாட்டுப்புற கதைபோல கட்டுரையின் இறுதியில் இருக்கிறது.

நாளுக்கு நாள் வேகப்பாய்ச்சல் காட்டி வரும் விஞ்ஞான உலகில் வேற்றுக் கிரகத்திலிருந்து பாறை அல்லது மண் மாதிரியை பூமிக்கு கொண்டுவந்து சோதித்துப் பார்ப்பது எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா, பூமியிலிருந்து சுமார் 300 கோடி மைல் தொலைவில் உள்ள "ரையுகு' என்ற சிறு கோளுக்கு ஹயபுஸா-2 என்ற விண்கலத்தை அனுப்பியது. பூமி உள்ளிட்ட கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவது போல லட்சக்கணக்கான சிறு கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. அதில் ஒரு வகையான இந்த சிறுகோளுக்கு 2014-ஆம் ஆண்டு டிச. 3-ஆம் தேதி புறப்பட்ட ஹயபுஸா-2 விண்கலம் 2018-இல் அங்கு சென்றடைந்தது. சுமார் ஓராண்டு அச்சிறுகோளின் மேற்பரப்பிலேயே சுற்றி வந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்ட விண்கலம், 2019, பிப்ரவரியில் அக்கோளில் தரையிறங்கியது.

விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் மூலம் சிறுகோளின் தரைப்பரப்பில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி பாறை மாதிரிகளை ஒரு கேப்ஸ்யூலில் (சிறிய பெட்டி) சேகரித்துக் கொண்டு 2019, நவம்பரில் அங்கிருந்து புறப்பட்ட விண்கலம், 2020, டிச. 6-ஆம் தேதி பூமியை வந்தடைந்தது. பூமியிலிருந்து 2.20 லட்சம் கி.மீ. தொலைவில் வரும்போது, அந்த கேப்ஸ்யூலை விண்கலம் விடுவித்தது. பூமிக்கு 9 கி.மீ. தொலைவில் வரும்போது பாராசூட் உதவியுடன் அந்த கேப்ஸ்யூல் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியது. ஜாக்ஸா விஞ்ஞானிகள் அந்த கேப்ஸ்யூலை ஆய்வுக்காக ஜப்பானுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

முதல் ஹயபுஸா விண்வெளித் திட்டத்தின் மூலம் "இடோகவா' என்ற சிறுகோளில் இருந்து தரைப்பரப்பில் இருந்த பாறைத் துகள் ஒரு மி.கிராம் அளவுக்கு பூமிக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இப்போது ரையுகு சிறுகோளில் இருந்து சுமார் 100 மி.கிராம் அளவுக்கு பாறை மாதிரிகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுகோள்களில் ரையுகு சி-வகை சிறுகோளாகும். அதாவது, கரிம கார்பன் மூலக்கூறுகள், நீர் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை பூமியில் வாழ்வின் பரிணாமத்திற்கு அவசியமான அம்சங்கள். இச்சூழலில் ரையுகுவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் பாறை மாதிரியை ஆய்வு செய்வதன் மூலம் சூரிய குடும்பத்தின் தோற்றம், பூமியில் உயிர்களின் தோற்றம் ஆகியவை குறித்து புதிய விவரங்கள் தெரியவரும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் ஜாக்ஸா தலைவர் ஹிரோஷி யமாகாவா. குறிப்பாக, பூமிக்கு தண்ணீர் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு புதிய விடை கிடைக்கக் கூடும்.

இப்போது கட்டுரையின் தொடக்கத்துக்கு வருவோம். ஜப்பான் மொழியில் ரையுகு என்றால் டிராகன் மாளிகை என அர்த்தம். ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் கடலுக்கு அடியில் இருக்கும் மாளிகையை டிராகன் மாளிகை எனக் குறிப்பிடுவர். டிராகன் மாளிகையில் என்ன ரகசியம் புதைந்து கிடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com