இணைய வெளியினிலே...
By -ந.ஜீ | Published On : 15th December 2020 06:00 AM | Last Updated : 15th December 2020 06:00 AM | அ+அ அ- |

முக நூலிலிருந்து....
ஒருநாளும் என்னைத் தேடி வராத அந்தச் சாலையை,
ஒவ்வொரு நாளும் நானேதான் தேடிச் செல்கிறேன்.
கவி வளநாடன்
எத்தனைமுறை ஏமாந்தாலும் "நீயுமா' எனக் கேட்டுவிட்டு இன்னொரு நம்பிக்கையைச்சலிக்காமல் தேடுகிறது...
ஈர மனம்.
ஹேமவந்தனா
மழை பிடித்ததால்...
குடை பிடிக்கவில்லை.
இளமதி
உண்மைகளை யோசித்துப் பேசுவது...
சத்தியத்துக்குப் புறம்பானது.
-எஸ். ராஜகுமாரன்
சுட்டுரையிலிருந்து...
புன்னகை ஓர் அவசரகாலத் தொற்று...
அவசியமும் கூட.
நேசம்
எப்போதும் உன்னுடனேயே இருக்க விரும்புகிறேன்.
உன் கோபத்தினால் என்னைத் தொலைத்து விடாதே.
இப்படிக்கு, புன்னகை.
ஈரோடையன்
கடவுள் ஒரு சுமைதாங்கி கல் மாதிரி...
நம் துன்பங்களை கொஞ்சம் இறக்கி வைக்கலாம்.
ஆனாலும் நாம் தான் சுமக்கணும்...
கல் நம் சுமையைத் தூக்காது.
ஆதிரன்
வலைதளத்திலிருந்து...
முப்பது வருஷங்களுக்கு முன்பு வீட்டிற்குச் சினிமா பாட்டுப் புத்தகம் வாங்கி வருவதைத் தவறான பழக்கமாகக் கருதினார்கள். சினிமா பார்க்கலாம். சினிமா பாட்டுக் கேட்கலாம். ஆனால் சினிமா பாட்டுப் புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்பதே குடும்பத்தின் சட்டம்.
ஆனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவறாமல் சினிமா பாட்டுப் புத்தகங்களை வாங்கினார்கள். அத்தோடு அந்தப் பாடல்களைப் பாடி சந்தோஷப்பட்டார்கள்.
பள்ளிக்கூடத்தில் புத்தகங்களுடன் ஒளித்து வைத்து வகுப்பறைக்கே பாட்டுப் புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். கைமாறி கைமாறி படிப்பார்கள். மதிய உணவின் போது மரத்தடியில் நின்றபடியே கைகளை விரித்தபடியே டிஎம்எஸ் குரலில் யாரோ ஒருவன் பாடுவதும் உண்டு.
விலை மலிவு என்பதால் சினிமா பாட்டுப் புத்தகங்களை எப்போதும் சாணித்தாளில் தான் அச்சிடுவார்கள். முதற்பக்கத்தில் படத்தின் கதைச் சுருக்கம் இருக்கும். அதில் தான் "மற்றவை வெள்ளித்திரையில் காண்க' என்ற வரியை முதன்முறையாகப் படித்தேன். பெரும்பான்மைப் பாட்டுப் புத்தகங்களின் அட்டை கறுப்பு வெள்ளை தான். எண்பதுகளுக்குப் பிறகு தான் கலரில் பாட்டுப் புத்தகங்கள் வெளியாகின.
பாட்டுப் புத்தகம் மட்டுமின்றி, படத்தின் கதை வசனத்தைத் தனியே சிறுவெளியீடாகவும் வெளியிடுவார்கள். பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடல் ரத்தக்கண்ணீர் போன்ற படங்களின் வசனப் புத்தகங்கள் பெரும் விற்பனையானது.
https://www.sramakrishnan.com/