கல்விக்காகத் தொழில்நுட்பங்கள்... சர்வதேச சிறந்த ஆசிரியர் விருது!

லண்டனைத் தலைமையகமாகக் கொண்டது வர்க்கி ஃபவுண்டேஷன். 2014- ஆம் ஆண்டு முதல் உலக அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை வழங்கி வருகிறது
கல்விக்காகத் தொழில்நுட்பங்கள்... சர்வதேச சிறந்த ஆசிரியர் விருது!


லண்டனைத் தலைமையகமாகக் கொண்டது வர்க்கி ஃபவுண்டேஷன். 2014- ஆம் ஆண்டு முதல் உலக அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை வழங்கி வருகிறது. 2020- ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற்றவர் ரஞ்சித்சின் டிசாலே. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பரிடிவாடி என்ற சிற்றூரில் உள்ள தொடக்கப்பள்ளியின் ஆசிரியர்.

சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை 10 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ.7,36 கோடி). பரிசு அறிவிக்கப்பட்ட நாளன்று பரிசுத் தொகையில் பாதியை விருதுக்காகத் தேர்வு பெற்றவர்களின் வரிசையில் உள்ள முதல் பத்துப் பேருக்கு பகிர்ந்தளித்து எல்லாருடைய பாராட்டுகளையும் பெற்றார்.

கணினிப் பொறியியல் மாணவரான ரஞ்சித்சின் தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றார். பரிடிவாடி சிற்றூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் 2009- இல் அவருக்கு வேலை கிடைத்தது. முதல்நாள் பள்ளிக்கு வந்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் அந்தப் பகுதியில் இருந்த அந்தப் பள்ளி, ஒரு மாட்டுத்தொழுவத்துக்கும், பொருள்களைப் போட்டு வைத்திருக்கும் ஒரு கிடங்குக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டு இருந்தது. பள்ளியில் மின்சார வசதி இல்லை. மாணவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை.

இந்தப் பள்ளியை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்தார் ரஞ்சித்சின்.

அந்த ஊரில் வாழும் மக்களுக்கு கல்வியில் பெரிய அளவுக்கு ஆர்வம் எதுவும் இருக்கவில்லை. ஏதோ பேருக்கு பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். பள்ளிக்கு வரும் மாணவர்களும் பல நாட்கள் பள்ளிக்கு வருவதே இல்லை. இதில் மாணவிகளின் நிலையோ படுமோசம். சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிடும் வழக்கம் அங்கிருந்தது. பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தப் பகுதியில் உள்ள யாருக்கும் இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஞ்சித்சின் செய்த பல செயல்கள்தாம் அவரை சர்வதேச சிறந்த ஆசிரியர் விருது பெற வைத்திருக்கிறது.

மாணவர்களின் வருகையை உறுதிப்படுத்தும் செயல்களில் முதலில் ஈடுபட்டார் ரஞ்சித்சின். காலையில் எழுந்ததும், மாணவர்களின் வீடுகளுக்குச் செல்வது, மாணவர்கள் வேலை செய்யப் போகும் வயல்களுக்குச் செல்வது ஆகியவற்றை வழக்கமாக்கிக் கொண்டார். பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை நேரில் சென்று பள்ளிக்கு அழைத்து வந்தார். இதனால் சில நாள்களிலேயே எல்லா மாணவர்களும் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.

அடுத்து ரஞ்சித்சின் ஒரு லேப்டாப்பை பள்ளிக்குக் கொண்டு வந்தார். மாணவர்கள் அதிசயமாக அதைப் பார்த்தனர். கம்ப்யூட்டர் என்றால் என்ன என்று மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். லேப்டாப்பை பள்ளிக்கு எடுத்து வந்த சிலநாட்களில் மாணவ, மாணவிகள் லேப்டாப்பின் மூலம் சினிமா பார்த்தனர்; பாடல்களைக் கேட்டனர். அதற்குப் பிறகு பாடம் நடத்தத் தொடங்கினார் ரஞ்சித்சின்.

""21-ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். கற்றுக் கொள்ளும் திறன், தகவல் பரிமாற்றத் திறன், ஆழ்ந்து சிந்திக்கும் திறன், கிடைக்கும் தகவல்களைச் சரி பார்க்கும் திறன், படைப்பாற்றல் ஆகியவற்றை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினேன். பாடம் தொடர்பான நிறைய வீடியோக்களை உருவாக்கினேன். பவர் பாயிண்ட் பிரசன்டேஷன்களை உருவாக்கினேன். கரும்பலகையில் எழுதி கற்பிப்பதுடன் கூடவே கணினி வழியாகவும் கற்பிக்கத் தொடங்கினேன். பல யூ டியூப் வீடியோக்களை அனுமதி பெற்றுப் பயன்படுத்தினேன். அதன் மூலம் இளம் மாணவ, மாணவியர்கள் பாடங்களை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டதோடு, கல்வி கற்பதில் இன்பம் அடைந்தார்கள். பள்ளிக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

பெற்றோர்களுடன் தொடர்பு கொள்வதற்காக எஸ்எம்எஸ் அனுப்பும்முறையைக் கொண்டு வந்தேன். ஒவ்வொருநாளும் மாணவர்களின் பெற்றோருக்கு, அன்று மாணவர்கள் வீட்டில் என்ன படிக்க வேண்டும், அதற்கு பெற்றோர் எப்படி உதவ வேண்டும் என்று எஸ்எம்எஸ் அனுப்பினேன். இதனால் மாணவர்களின் படிப்பு விஷயத்தில் பெற்றோருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

இது மிகச் சிறிய ஊராக இருந்தாலும், எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கின்றன. மாலை, இரவு நேரங்களில் வீட்டில் உள்ளவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிக் கிடந்தார்கள். இதனால் மாணவ, மாணவிகள் பாடங்களைப் படிப்பதற்கு முடியாமல் தவித்தார்கள். இதைத் தடுக்க நான் ஒரு முயற்சி செய்தேன். இரவு ஏழு மணியானால் பள்ளியில் அலாரம் ஒலிக்கும் ஏற்பாட்டைச் செய்தேன். பள்ளியின் அலாரம் ஒலி எல்லா வீடுகளுக்கும் கேட்கும். "அலாரம் ஆன் ஆனவுடன் டிவியை ஆஃப் செய்யுங்கள்' என்று பெற்றோர்களுக்கு வேண்டுகோள்விடுத்தேன். மாணவ, மாணவிகளின் நல்லதுக்குத்தான் நான் இதைச் சொல்கிறேன் என்று உணர்ந்து கொண்ட பெற்றோர்கள் என் முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.

அடுத்து பாடப் புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு பாடத்துக்குமான கியூஆர் குறியீடு முறையை உருவாக்கினேன். பெரும்பாலான வீடுகளில் ஸ்மார்ட் போன் இருந்ததால், இந்த கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி மாணவர்கள் மிக எளிதாகப் பாடங்களை ஸ்மார்ட் போன்களிலேயே படிக்கத் தொடங்கினார்கள். புத்தகத்தில் உள்ள பாடங்களைப் புரிந்து கொள்வதற்கான வேறு பல தகவல்கள், வீடியோக்கள், பேச்சுகள், உரையாடல்கள் எல்லாவற்றையும் அதில் இணைத்திருந்ததால் மாணவர்கள் இந்த முறையின் மூலம் ஆர்வமாகப் படிக்கத் தொடங்கினார்கள். தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.

இதனால் இந்த கியூஆர் குறியீடு முறை இந்த ஊரில் மட்டுமல்லாமல், வேறு ஊர்களில் உள்ளவர்களையும் கவர்ந்து இழுத்தது. வேறு ஊர்களில் இருந்தும் பலர் வந்து இந்த முறையில் உருவாக்கப்பட்ட பாடங்களை வாங்கிச் சென்றார்கள். இது நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. 2015 -இல் மாதா தாலுகாவில் உள்ள 297 பள்ளிகளில் இந்த முறையின் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது. 2017 - இல் 60 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இந்த முறையில் பாடம் கற்கத் தொடங்கினார்கள். இதற்காக மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் எனக்கு "மைக்ரோ சாஃப்ட் இன்னோவேடிவ் எஜுகேட்டர் எக்ஸ்பெர்ட் அவார்ட்' வழங்கியது. 2017 - இல் கனடாவில் நடந்த "உலக கல்வி அமைப்பு' கனடாவில் நடத்திய கூட்டத்தில், கியூஆர் குறியீட்டு முறையின் மூலம் பாடம் படிக்கும் முறையை 11 நாடுகளில் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அடுத்து மாணவர்களின் கற்கும்முறையை மேம்படுத்தும் நோக்கத்தோடு வகுப்பறைகளில் ஸ்கைப் - ஐப் பயன்படுத்தினேன். உதாரணமாக, சிவாஜி கோட்டையைப் பற்றிய பாடம் நடத்தும்போது, அதைப் பற்றி நன்கு தெரிந்த வெளியில் உள்ள ஒருவருடன் ஸ்கைப் மூலம் மாணவர்கள் உரையாடினார்கள். இப்போது இந்த முறையின் மூலம் 87 நாடுகளில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது.

மாணவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் கற்பித்ததனால் இந்த ஊரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து முதன்முறையாகப் பட்டம் பெற்றுள்ளார்.

இதுதவிர, மரங்களை மக்கள் வெட்டக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு மரத்தையும் பற்றிய தகவல்களுடன் கூடிய கியூஆர் குறியீட்டு முறையை உருவாக்கினேன். ஒரு மரத்தை யாராவது வெட்டினால் உடனே அந்தத் தகவல் மாணவர்களின் - பெற்றோர்களின் செல்போனுக்குச் சென்றுவிடும். மரங்களைப் பாதுகாக்க நான் மேற்கொண்ட இந்த முறை இப்போது இத்தாலி, ஜப்பான், வியட்நாம், கம்போடியா, பிரான்ஸ் உள்ளிட்ட பலநாடுகளில் பின்பற்றப்படுகிறது'' என்கிறார் ரஞ்சித்சின் பெருமையாக.

கல்விக்காக இவ்வாறு பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு பணிகளில் ஈடுபட்டதற்காகத்தான் இந்த ஆண்டுக்கான "சர்வதேச சிறந்த ஆசிரியருக்கான விருது' ரஞ்சித்சின்னுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com