வாட்ஸ் அப்... புதிய கட்டுப்பாடு!
By - அ.சர்ஃப்ராஸ் | Published On : 15th December 2020 06:00 AM | Last Updated : 15th December 2020 06:00 AM | அ+அ அ- |

காலத்துக்கு ஏற்ப பல்வேறு பல புதிய சேவைகளைப் பயன்பாட்டாளர்களைக் கேட்காமலேயே வாட்ஸ்அப் அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது.
ஆனால் தற்போது புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று முதல்முறையாக அந்த நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பில் பகிரப்படும் தகவல்களும், பயன்பாட்டாளர்களின் தரவுகளும் பாதுகாப்பானதல்ல என்று வெளியான செய்திகளால் உலகம் முழுவதும் இந்த செயலியைப் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இதை வாட்ஸ்அப் நிறுவனம் மறுத்துள்ளது.
ஆனாலும் இந்த விவகாரம் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு பல்வேறு நாடுகளில் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்திவிட்டது.
இந்நிலையில், பயன்பாட்டாளர்களுக்கு இதுதொடர்பான புதிய விதிமுறைகளை அறிவித்து, அவற்றுக்குப் பயன்பாட்டாளர்கள் ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் இல்லையென்றால் வாட்ஸ்அப் செயலி அழிந்துவிடும் என்றும் புதிய எச்சரிக்கை தகவல் வெளியாக உள்ளது என்று வாட்ஸ் அப் பீட்டாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021, பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் அதற்கு முன்பு எச்சரிக்கைத் தகவல் வெளியாகும் என்றும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, அதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டால்தான் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்பில் வழக்கமாக வரும் ஏராளமான தகவல்களைப்போல், புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் தகவலையும் கருதாமல் வரும் நாள்களில் பயன்பாட்டாளர்கள் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும்.
இதேபோல், இணைய வழி வாட்ஸ்அப் மூலம் தொலைபேசி அழைப்பு, விடியோ அழைப்பு ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பாக அந்த நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்த புதிய சேவைகள் இணையவழி வாட்ஸ்அப்பில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...