இசை... புதிய வணிகம்!

மனதை இசைய வைப்பது இசையாகிறது. பழங்காலம் தொட்டு இன்றுவரை, இசையும் தாளமும் நம் வாழ்வில் இணைந்துள்ளன.
 இசை... புதிய வணிகம்!

மனதை இசைய வைப்பது இசையாகிறது. பழங்காலம் தொட்டு இன்றுவரை, இசையும் தாளமும் நம் வாழ்வில் இணைந்துள்ளன. உலக கலாசாரங்கள் அனைத்திலும் இசைக்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் பாடல்கள், இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன. குழந்தைப் பிறப்பு, திருமணம், திருவிழா, விளையாட்டு நிகழ்ச்சி, மற்ற சமூக, கலாசார நிகழ்வுகள் என அனைத்திலும் இசைக்கு ஓரிடம் அளிக்கப்படுகிறது.
 அதேபோல், இசையை ஆரோக்கியத்துக்காக, சிகிச்சையாகப் பயன்படுத்தும் வழக்கமும் பலகாலமாக உள்ளது. வருத்தமான ஒருவரின் மனநிலையை மாற்றி இசை ஆறுதல் அளிக்கிறது. ஏதேனும் ஒரு வடிவத்தில் இசை நமது அனைவருடன் தினமும் பயணிக்கிறது.
 இத்தகைய முக்கியத்துவம் பெற்றுள்ள இசையை அனைவராலும் எளிதாகக் கேட்க முடிவதில்லை. வானொலியில் இலவசமாக காது குளிர கேட்ட இசையை, இப்போது கட்டணம் செலுத்தி கேட்கும் நிலை உருவாகியுள்ளது. இசையை ரசிப்பதற்காக, பாடல்களைக் கேட்பதற்காக பல்வேறு செல்லிடப்பேசி செயலிகள் தற்போது உள்ளன.
 ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 மணி நேரம் இசைச் செயலிகளைப் பலர் பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் செயலிகளின் பயன்பாடு வரும் ஆண்டுகளில் மிகப் பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
 இசை நூலகம்
 அறிதிறன் பேசிகளில் (ஸ்மார்ட் போன்) பயன்படுத்தப்படும் இசைச் செயலிகள், இப்போது இசை நூலகங்களாக செயல்படுகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழி பாடல்கள் அந்த செயலிகளில் உள்ளன. அந்தக் கால பாடல்கள் முதல் இன்றைய பாடல்கள் வரை அனைத்தும் கிடைக்கும் பொக்கிஷமாக இசைச் செயலிகள் உள்ளன. தமக்குப் பிடித்த அனைத்து பாடல்களையும் இந்த ஒரு செயலி மூலம் கேட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம், இந்தச் செயலிகளைப் பயன்படுத்தத் தூண்டுகிறது.
 கலாசார ஈடுபாடு
 இந்தியாவில் பல்வேறு சமூகங்கள் மற்றும் கலாசார வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றுக்கிடையேயான பாலமாக இசை உள்ளது. வடஇந்தியர்களில் பலர் தமிழ், தெலுங்கு இசை மற்றும் பாடல்களை விரும்பிக் கேட்கின்றனர். அதுபோல, தென்னிந்தியர்களும் ஹிந்தி பாடல்களைக் கேட்கின்றனர். அந்த பாடல்களுக்கான உரிய அர்த்தம் தெரியாவிட்டாலும், அந்த இசைக்காக பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கின்றனர். இவ்வாறு மொழி பேதமின்றி, பல்வேறு பகுதிகளின் இசைகளைக் கேட்பதன் மூலம், அந்தந்த பகுதிகளின் கலாசாரங்களை அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது.
 வணிகமாக மாறிய இசை
 இசைச் செயலிகளைப் பயன்படுத்த பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அந்த செயலிகள் தற்போது வணிகப் பொருளாக மாறி விட்டதால் நிறையப் பேர் பயன்படுத்துகின்றனர்.
 இந்த செயலிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பைக் கண்டு பல நிறுவனங்கள் புதிது புதிதாக இசைச் செயலிகளை உருவாக்கத் தொடங்கி விட்டன. இசைச் செயலிகளை வடிவமைப்பது முக்கிய வணிகமாகி விட்டது.
 நுகர்வோர்களுடன் எவ்வாறு தங்களை இணைத்துக் கொள்வது என்று ஒவ்வோர் இசைச் செயலியும் ஒவ்வோர் உத்தியைக் கையாள்கிறது. தங்களது செயலியைப் பலர் பயன்படுத்த வேண்டும் என்ற வணிக நோக்கில் பல சலுகைகளை வாரி வழங்குகின்றன.
 சில இலவச செல்லிடப் பேசி இசைச் செயலிகள் இருந்தாலும், அவை தொடக்கத்தில் மட்டுமே இலவசமாகப் பாடல்கள் கேட்கும் சலுகைகளை வழங்குகின்றன. இலவசச் சலுகைகளை அனுபவித்து பாடல்களை கேட்டு ரசித்தவர்களால், பின்னர் பாடல்களைக் கேட்காமல் இருக்க முடிவதில்லை. அதனால், கட்டணம் செலுத்தி பாடல்களைத் தொடர்ந்து கேட்டு மகிழத் தயாராகிவிட்டனர்.

இன்றைய இளைஞர்களால் உண்ணாமல் கூட இருக்க முடியும். ஆனால், செல்லிடப்பேசியின் இணைய சேவைகளைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற அளவுக்கு நிலைமை மாறி விட்டது. இசைச் செயலிகளைப் பயன்படுத்துவதற்கான முக்கியமான தேவைகளுள் ஒன்றாக இது உள்ளது. மற்ற சேவைகளை அதிகம் பயன்படுத்தாதோர் கூட இசைச் செயலிகளுக்காக செல்லிடப்பேசியில் இணைய சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இசையை மையமாகக் கொண்டு இப்போது புதிய வணிகம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
 - க. நந்தினி ரவிச்சந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com